உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி

உலக தண்ணீர் தினம்!
கவிஞர் இரா. இரவி
தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்
தண்ணீரை தண்ணீராக செலவழிப்பதை நிறுத்துங்கள்!

வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர்
வீணாக செலவழிப்பதை முதலில் நிறுத்துங்கள்!

குழாயை திறந்துவிட்டு கைகழுவ வேண்டாம்
குவளையில் மோந்து கைகழுவ வேண்டும்!

தண்ணீருக்காக உலகப்போர் வரும் என்கின்றனர்
தண்ணீரை சேமித்து உலகப்போர் தவிர்த்திடுவோம்!

குற்றால அருவியில் குளிப்பதைப் போலவே
குடும்பத்தில் இல்லத்தில் குளிப்பதை நிறுத்துங்கள்!

மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கிடுவோம்
மழைநீரை வீணாக்காமல் சேமிக்கப் பழகிடுவோம்!

வானிலிருந்து வரும் அமுதம் மழையாகும்
வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்திடுவோம்!

அண்டை மாநிலங்களுக்கு இரக்கம் இல்லை
அனைத்து மழைத்துளிகளையும் சேமித்து வைப்போம்!

நீர் இன்றி அமையாது உலகு உரைத்தார் வள்ளுவர்
நீர் இன்று வியாபாரம் ஆனது உலகில்!

விலை கொடுத்து வாங்கவேண்டிய அவலம்
விவேகமாக சிந்தித்தால் நீக்கிடலாம் அவலம்!

அடிப்படைத் தேவைகளின் அடிப்படையானது தண்ணீர்
அனைவருக்கும் நல்ல குடிநீர் வழங்கிட வேண்டும்!

குழாயில் வரும் நல்ல தண்ணீரைக் குடிக்கலாம்
குடிநீரை செம்புப் பாத்திரத்தில் வைத்துக் குடிக்கலாம்!

சுத்திகரிக்கப்பட்ட நீரில் சத்தும் சுவையும் இல்லை
சுகாதாரம் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை!

மனிதனின் தாகம் தணிப்பது மட்டுமல்ல தண்ணீர்
மனிதனின் உயிர் வளர்க்கும் நீர் தண்ணீர்!

உடல் சுத்தமாகவும் உடை சுத்தமாக்கவும் தண்ணீர்
உலகம் இல்லை உன்னதத் தண்ணீர் இன்றி!

கருத்துகள்