நன்றி .விகடன் ! கவிஞர் இரா .இரவி
நன்றி .விகடன் !   கவிஞர் இரா .இரவி


1. கர்நாடகாவில்தானே காவிரி உற்பத்தியாகிறது. தங்களது தேவைக்குப்போக, தண்ணீர் மிஞ்சினால்தானே தமிழ்நாட்டுக்குத் தரமுடியும். இது அவர்களது விருப்பம்தானே, நாம் ஏன் வீணாகப் பிரச்னை செய்யவேண்டும்? 


காவிரி ஆறு என்பது இயற்கை தந்த கொடை. கர்நாடகா, தமிழ்நாடு என்பதெல்லாம் மனிதானால் செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைக்கோடுகள். எனவே, கர்நாடாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல காவிரி. ஓர் ஆறு, அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து தானாக சென்று முடிவடையும் வரையில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் உரிமையானது. குறிப்பாக, கடைமடை என்று சொல்லப்படும் ஆற்றின் கடைசி பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கூடுதல் உரிமை உண்டு. இதுதான் உலக நீர் நியதி! 

2. சட்டப்பூர்வமாக காவிரிநீரை தமிழ்நாடு உரிமை கொண்டாட முடியுமா ? 

1924-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணம் இடையே போடப்பட்ட சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமான உரிமையுள்ளது. இதுமட்டுமல்ல உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஆற்றுநீர் மரபுரிமை அடிப்படைப்பிலும் சட்டப்பூர்வமான உரிமையுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக காவிரிநீரை தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

3. கர்நாடகாவில் காவிரி பாயாத 28 மாவட்டங்களில் வறட்சி நிலவுவதாகவும், பெங்களூருவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் உச்ச நீதிமன்றம் கவலைப்படுவது நியாயமானதுதானே?

ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்கள் கடும்வறட்சியில் சிக்கித் தவிப்பதை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லையே. பெங்களூரின் குடிநீர்த் தேவைக்காக தமிழ்நாட்டுக்கான காவிரி நீரில் 14.75 டி.எம்.சி-யை உச்ச நீதிமன்றம் குறைத்திருப்பது அநீதியின் உச்சம். பெங்களூருவின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரி படுகைக்குள் அமைந்துள்ளது. அதனால், அந்தப் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்கு மட்டும்தான் காவிரிநீரை தரமுடியும் என நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டது. ஆனால், தற்பொழுது உச்ச நீதிமன்றம் பெங்களூருவின் முழுமைக்கும் காவிரிநீரைத் தாரை வார்த்துள்ளது. ஆனால், பெங்களூரைவிட மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும், தொழிற்சாலைகளிலும் பல மடங்கு அதிகமான சென்னையின் குடிநீரைப் பற்றி உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. 

4. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களை முறையாக பராமரித்தாலே தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்துவிட முடியுமே... ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் ஏன் கையேந்த வேண்டும்?

இது பிரச்னையை திசை திருப்புவதற்காக திட்டமிட்டே பரப்பப்படும் தவறான தகவல் இது. ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, முறையாக பரமாரிக்க வேண்டும் என்பதை யாருமே மறுக்க முடியாது. ஆனால் காவிரி நீருக்கு மாற்றாக, இதைக்கொண்டு தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவுசெய்து கொள்ளலாம் எனச் சொல்வது அபத்தமானது. இங்குள்ள ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீர் நிரம்பினால் கூட,  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 5 சதவிகிதத்தைக் கூட நிறைவு செய்ய முடியாது. அதுமட்டுமல்ல, பெரும்பாலும் இந்த நீர்நிலைகளின் நீராதாரம் காவிரிதான். ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் ஓடினால்தான் பூமிசெழித்து, மரங்கள் வளர்ந்து, மேகத்தை ஈர்த்து, மழை பொழிந்து, ஏரி, குளங்கள் நிரம்பும். இவற்றை ஆழப்படுத்தி அழகுப்படுத்தி வைத்தால் மட்டும் தண்ணீர் நிறைந்துவிடாது.  

5. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தற்பொழுது வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என மத்திய அரசு சொல்கிறதே?

ஆம். கர்நாடாகாவின் விருப்பமும் மத்திய அரசின் எண்ணமும் ஈடேறும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டது சோகமே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லவில்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றுதான் தற்போதைய தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டிருப்பதுதான் பல்வேறு பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. 

6. காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்கவேண்டும் என ஏன் தமிழ்நாடு முரண்டு பிடிக்கவேண்டும்? 

காவிரி மேலாண்மை வாரியம் என்பது சுய அதிகாரமிக்க, நடுநிலையான அமைப்பு. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய 4 அணைகள், தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர், அமராவதி, பவானி ஆகிய 3 அணைகள், கேரளாவில் பானாசூரசாகர் உள்ளிட்ட  8 அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதுவே நீர் பங்கீட்டை நேரடியாக செயல்படுத்தும். இதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலே கர்நாடகாவிற்கு எரிச்சல் வருகிறது. 

7. தற்பொழுது மத்திய அரசு அமைக்கவிருப்பதாகச் சொல்லப்படும் காவிரி மேற்பார்வைக்குழுவும் பொதுவான அமைப்புதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும் என்பதுபோல அல்லவா இருக்கிறது?

மேற்பார்வைக்குழு என்பது பொதுவான அமைப்பாக இருக்கலாம். ஆனால் அது அதிகாரமற்ற அமைப்பாகவே செயல்படும். கர்நாடகம் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய காவிரி நீரை மேற்பார்வைக்குழுவால் பெற்றுத் தரமுடியாது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியை வேடிக்கை மட்டுமே பார்க்கும். எனவே, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயஅதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு ஓரளவுக்காவது நீதி கிடைக்கும்.

கருத்துகள்