வாழையிலை! நூல் ஆசிரியர் : கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வாழையிலை!


நூல் ஆசிரியர் : கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு :
பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-600 018.

பக்கம் : 32, விலை : ரூ. 25.





******

     இந்த நூல் புதுவையில் நடந்த ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது.  நூலாசிரியர் கவிஞர் சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு தலைப்பிரசவம். அதாவது முதல் நூல்.  நூலிற்கு இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா அணிந்துரை வழங்கி உள்ளார். நூல் வடிவமைப்பு வெளியீடும் அவரே.



     மதுரைக் கவிஞர் ப்ராங்ளின் குமார் அவர்களின் புகைப்படங்கள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன.  பாராட்டுக்கள்.  முதல் ஹைக்கூவே முத்தாய்ப்பாக உள்ளது.



     மண்ணுக்கு அடியில்
     சுவாசிக்கும் உயிர்
     விதை!



     விதையின் உழைப்பு வெளியில் தெரிவதில்லை.  அது உயிர்ப்புடன் இருந்து வேர் விட்டு கிளைகளுக்கு அனுப்புகின்றது.  விதையின் மேன்மையை மென்மையாக உணர்த்தியது சிறப்பு.



     நவநாகரிக உலகம்
     கட்டடக் காடுகளில்
     மனிதர்கள் விலங்குகள்!



     இந்த ஒரு ஹைக்கூவை பல பொருள் கொள்ளலாம்.  காடுகளை அழித்து நாடாக்கி வருகிறான் மனிதன்.  காடுகளில் வாழ்ந்த மனிதன் நாட்டிற்கு வந்தபின்னும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான்.  காட்டை அழித்ததால்தான் காட்டு மிருகங்கள்  நாட்டிற்குள் வந்துவிட்டன. இன்னும் சிலர் மனிதராகாமல் விலங்காகவே   இருக்கின்றனர். இப்படி பல பொருள் கொள்ளலாம்.



     கையடக்க நூல் என்றாலும் வாசிக்கும் வாசகர்கள் மனதில் திரும்பத் திரும்ப அசைபோடும் விதமாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்.



     சுவை அதிகரிப்பு
     கைப்பக்குவம்
     கூடவே வாழையிலை!



     நூலின் தலைப்பில் உள்ள ஹைக்கூ நன்று.  சூடான உணவை வாழை இலையில் வைக்கும் போது இலையில் உள்ள பச்சையம், உணவிலும் சேரும்.  சுவை கூடும்.  உடல்நலத்திற்கும் நல்லது. அதனை உணர்த்தியது சிறப்பு.



 இன்றைக்கு வாழை இலைக்குப் பதிலாக நெகிழிக் காகிதங்களை உணவகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.  இம்முறை ஒழிக்கப்பட வேண்டும். நுகர்வோராகிய நாமும் வாழைஇலையில் தாருங்கள் என்று கோரிக்கை வைப்போம்.



     கணக்கில்லா குழந்தை வரம்
     உயிர்ப்பு நிற்கும் வரை
     ஆசிரியப் பணி!



     ஆசிரியர்கள் தனது மாணவர்களை தன் குழந்தைகளைப் போலவே அன்பு செலுத்துவார்கள்.  ஒருவேளை குழந்தை இல்லாவிட்டாலும் மாணவர்களையே தன் குழந்தைகளாக நினைத்து மனதைத் தேற்றி வாழ்ந்து வரும் ஆசிரியப் பெருந்தகைகளின் உயர்ந்த குணம் கூறும் ஹைக்கூ நன்று.



     ஆச்சர்யக்குறி
     உயிர் உறவைப் பறித்தது
     காதல்!



     காதல் பற்றி வித்தியாசமான ஹைக்கூ. இதற்கும் பல பொருள் கொள்ளலாம்.  உயிர் போன்றவள் உயிர் பறிக்கிறாள். உயிர் பரிமாறுகின்றன்ர்.  இன்னும் சாதி ஆணவக்கொலைகளின் காரணமாக காதலர்கள் உயிர் பறிக்கும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன. உயிர் உள்ள வரை நினைவு இருக்கும் காதல்.  இப்படி பல பொருள் உண்டு ஒரு ஹைக்கூவிற்கு.



     கரையுடன் கலவரம்
     நடுமடியில் அமைதி
     பரதவர் வாழ்வாதாரம்!



     மீனவர்கள் கடலுக்குச் சென்றால் திரும்ப வருவார்கள் என்று உறுதி இல்லை.  மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களன் பிடித்துச் செல்கிறான் அல்லது சுட்டுத் தள்ளுகிறான். வலையை அறுத்து மகிழ்கிறான்.  படகுகளையும் பிடுங்கி விடுகிறான்.  தட்டிக்கேட்க நாதியில்லை என்ற துணிச்சலில் ஆட்டம் போடுகிறான்.  இந்திய இராணுவம் ஒரு நாள் கூட சிங்களனை அடக்க முற்பட்டதே இல்லை.  இப்படி பல சிந்தனைகளை விதைத்தது ஒரு ஹைக்கூ.



     நம் இடத்தில்
     நான் மட்டும்
     வெறுமை!



     தலைவனும் தலைவியும் வாழுமிடத்தில், இல்லத்தில் தலைவன் இல்லை, தலைவி மட்டுமே இருக்கிறாள்.  நம் இடத்தில் நான் மட்டும் தலைவி மட்டும். தலைவன் இல்லாததால் வாழ்க்கை வெறுமையாகி வருகின்றது. பிரிவை, பிரிவின் சோகத்தை, வலியை குறைந்த சொற்களை வைத்து நிறைந்த கருத்தை உணர்த்தியது சிறப்பு.



     மருத்துவமனை
     நொடிதோறும் கொண்டாட்டம்
     மகப்பேறு பிரிவு!



     உண்மை தான். மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் குழந்தைகள் பிறந்த வண்ணம் இருக்கும். அதனால் அங்கே குடும்பங்களின் கொண்டாட்டமும் இனிப்பு வழங்கலும் நடந்து கொண்டே இருக்கும். அக்காட்சியினை வாசகர்களுக்கு படம்பிடித்துக் காட்டியது சிறப்பு.



     தனித்து நிற்கிறது
     மலர்க்கொடி
     தலைவி !



     சங்ககாலத்துப் பாடல்களில் தலைவன், தலைவி ஊடல் கூடல் பிரிவு பற்றி விரிவாகப் பாடி இருப்பார்கள்.  ஆனால் இவரோ ரத்தினச் சுருக்கமான சொற்களில் பாடி உள்ளார்.  கொடி படர கொம்பு வேண்டும், தலைவன் என்ற கொம்பின்றி மலர்க்கொடி தனிமையில் வாடுகின்றாள்.  பிரிவு சோகத்தை அழகாக ஹைக்கூ வடித்துள்ளார்.



     தலைவர் மரணம்
     தீக்குளிப்பு
     பச்சை மரங்கள்!



     தலைவர் இறந்ததற்காக தொண்டர்கள் தீ எரிப்பு நடத்தும் வன்முறையை உணர்த்தி உள்ளார்.  ஒருவர் சாவுக்கு ஓராயிரம் மரங்களும் எரிவதுண்டு.



     இப்படி பல்வேறு பொருள்களில் மிக அழகிய ஹைக்கூ வடித்த கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  ஒரு வேண்டுகோள். முன்னெழுத்தில் உள்ள ஆங்கிலத்தை நீக்கி தமிழாக்குங்கள்.

கருத்துகள்