கொஞ்சி விளையாடும் கோபம்! கவிஞர் இரா. இரவி




கொஞ்சி விளையாடும் கோபம்!



கவிஞர் இரா. இரவி

கொஞ்சி விளையாடும் கோபம் குழந்தைக்கு
கொஞ்ச நேரத்தில் கோபம் மறந்து விடும்!



உன்னுடன் கா பேச மாட்டேன் என்று சொல்லி
ஒடி பின் தேடி வந்து மடியில் அமரும் !



மழலைகளுடன் விளையாடும் நேரங்களில்
மனதில் கவலைகள் மறந்து விடும்!



அரும்புகள் செய்திடும் குறும்புகள் காண
அனைவருக்கும் விழி இரண்டு போதாது!



சிறிய குழந்தை செய்திடும் சேட்டைப் பற்றி

சங்க இலக்கியப் பாடலிலும் உள்ளது !



கண்ணை மூடி விளையாட அழைக்கும்
கால் தவறி நாம் விழுந்தால் சிரிக்கும்!



பள்ளிக்கு செல்லும் முன்பே குழந்தை
பள்ளி ஆசிரியர் வேடமிட்டு விளையாடும்!



காக்கா கடி கடித்து மிட்டாய் தரும்
காக்கா கதை சொல்லிட வேண்டும்!



காகிதக் கப்பல் செய்து தர வேண்டும்
கப்பல் கவிழ்ந்தால் வருந்தி அழும்!



உப்பு மூடை தூக்கச் சொல்லி விளையாடும்
ஒப்பில்லா மகிழ்ச்சியை வாரி வழங்கும்!



மருத்துவராக மாறி ஊசி போட்டு விடும்
மனதிற்கு மகிழ்ச்சியை நிரந்தரமாக்கிடும்!



மணலில் வீடு கட்டி மகிழ்வுறும்
மனதில் கோட்டையும் கட்டி மகிழும்!



அம்மா இங்கே வா வா என்றே பாடும்
ஆசை முத்தம் தா தா என்றே கேட்கும்!



சோறாக்கி குழம்பு வைத்து விளையாடும்
சோகத்தைத் தகர்த்திடும் சிரித்த முகம்!



வானவில்லாக மறைந்திடும் செல்லக் கோபம்
வாஞ்சையோடு கட்டிப்பிடித்து மகிழும்!

கருத்துகள்