ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
ஓலமிடும் ஆற்று மணல் !


நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை,
    கே.கே.என். ராஜன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


வெளியீடு :
புதிய தரிசனம், 10/1, அப்துல் ரசாக் 2ஆவது தெரு, சைதாப்பேட்டை, சென்னை – 600 015. பக்கம் : 192, விலை : ரூ. 160.

******

     ‘ஓலமிடும் ஆற்று மணல்’ நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  மூத்த எழுத்தாளர் ப. திருமலை அவர்களும் திரு. கே.கே.என். ராஜன் அவர்களும் இணைந்து எழுதியுள்ள நூல்.  ஆற்றுமணல் கொள்கைக்கு எதிரான போராட்ட்த்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தலைவர் நேர்மையான அரசியல்வாதி தோழர் நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை பொருத்தம்.     மணல் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் மணல் உற்பத்தி செய்ய முடியாது என்பதை உணர் வேண்டும். இயற்கையாக உருவாவதே மணல் நூலின் தொடக்கத்திலேயே மணல் உருவாகும் விதம் பற்றி எழுதி உள்ளனர்.     “இயற்கையின் அற்புத நிகழ்வுகளில் மணல் உருவாதலும் ஒன்று.  மணல் உருவாவது என்பது எளிதான விஷயம் அல்ல.  மணல் உருவாக ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.  பருவகால வேறுபாட்டின் காரணமாக பாறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.  குளிர்காலத்தில் பாறைகள் இறுக்கமடைகின்றன.  வெயில் காலங்களில் பாறைகள் விரிவடைந்து நொறுங்குகின்றன.  இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைக்காலங்களில் மழைநீரின் வேகத்தில் உருட்டப்படுகின்றன.  இத்தகைய செயல்களால் மோதி மோதி உடைந்து சிறுசிறு துகள்களாக மணலாக மாற்றம் அடைகின்றன.  உடையாத பகுதிகள் கூழாங்கற்களாக உருமாறுகின்றன. உடையாத பகுதிகள் கூழாங்கற்களாக உரு பெறுகின்றன.  அதிக அளவில் உடைந்து மிகச்சிறிய துகள்களாக மாறுகின்ற போது அவைகள் எவ்வித கனமும் இன்றி இருப்பதால் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றன”.     மணல் என்று சாதாரணமாக நினைக்கும் நாம் அந்த மணல் உருவாகும் விதம் அறிந்து வியந்து விட்டேன்.  இப்படிப்பட்ட இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது முறையா? வருங்கால சமுதாயத்திற்கு வைத்துச் செல்ல வேண்டிய மணலை கடத்தி விற்பது முறையா? என்ற கேள்வி கேட்கும் நூல் இது.     மணல் கொள்ளையின் காரணமாக ஆறுகள் மரணத்தை நோக்கிச் செல்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது உண்மை தான். வரலாற்று சிறப்புமிக்க சங்கப்பாடலில் இடம் பெற்ற வைகை அன்று எப்படி ஓடியது இன்றைக்கு வைகை ஆறு எப்படி உள்ளது என்பதைப் பார்த்தாலே புரியும்.  கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்க்குக்க கூட லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் நிலைமை ஏன் வந்த்து.  மணல் கொள்ளை தான் மூல காரணம் என்பதை நூல் உணர்த்தியது.     மணல் பற்றிய பல தகவல்கள் உள்ளன.     “மணல் உற்பத்திப் பொருள் அல்ல. தண்ணீர் போல் மணலும் இயற்கை அளித்த அருட்கொடை. அனைத்துப் பகுதியிலும் மணல் கிடைக்க்கும் என்று சொல்ல முடியாது”.     இப்படி மணல் பற்றியே பேசிடும் நூல் இது.  இயற்கை தந்த மணலை பணத்தாசை காரணமாக பலர் கொள்ளையடித்து பக்கத்து மாநிலங்களுக்குக் கடத்தி பகல் கொள்ளை அடித்து வருகின்றனர்.  முற்றிலும் இக்கொள்ளை தடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது.     நீதியரசர் மகாதேவன் அவர்கள் மணல் குவாரிகளை மூடிட வேண்டும் என்று அருமையான தீர்ப்பு வழங்கினார்கள்.  இறக்குமதி செய்யப்பட்ட மணல்களைப் பயன்படுத்தலாம் என்றும் சொன்னார்கள்.  ஆனால் அந்த நல்ல தீர்ப்பிற்கும் தடை வாங்கி மணல் குவாரிகள் மூடாமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவது வேதனை.     சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர், குரல் கொடுத்தபோதும் மணல் கொள்ளையர்கள் திருந்துவதாக இல்லை. அரசாங்கமே மது விற்பது போலவே, அரசாங்கமே மணலும் விற்பனை செய்து வருவது தமிழகத்தில் தான்.  குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக எல்லா மணல் குவாரிகளையும் மூடினால் தான் நாட்டின் வளத்தை, ஆறுகளின் நலத்தைக் காத்திட முடியும்.     மணல் கொள்ளைக்கு அடுக்குமாடி வீடுகளும் காரணமாகின்றன.  அரசுக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் மணல் பயன்படுத்தப்படுகின்றது.  மணல் அள்ளுவதால் ஏரி, குளங்கள் காணாமல் போகின்றன.  மதுரையில் உள்ள உயர்நீதிமன்றமே உலகனேரி என்ற ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் அரசுக் கட்டிடங்களே ஆக்கிரமித்து உள்ளன.  போனது போகட்டும், இனியாவது விழிப்புணர்வுடன் இருப்போம்.  ஏரிகளையும், குளங்களையும் ஆறுகளையும் காப்போம்.  குறிப்பாக மணல் கொள்ளை எங்கும் நடக்காமல் தடுப்போம். இப்படி பல எண்ணங்களை விதைத்தது இந்த நூல்.     இந்நூலிற்கு அணிந்துரை வழங்கி உள்ள தோழர் நல்லகண்ணு அவர்கள் தொடர்ந்த வழக்கு விபரமும் நூலில் உள்ளது.     குவாரிகளை மூடிட நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன.     திட்டம் போட்டு திருடுற கூட்டம்
     திருடிக் கொண்டே இருக்குது - அதை
     சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
     தடுத்துக் கொண்டே இருக்குது
     திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
     திருட்டை ஒழிக்க முடியாது.     மணல் திருடர்களுக்கு இந்த நூலை வழங்கி படிக்க வைக்க வேண்டும்.  இதில் உள்ள விபரங்களைப் பார்த்து அவர்கள் மனம் திருந்த வாய்ப்பு உண்டு.     “மணல் திருட்டு மணல் கடத்தல் மணற்கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பதுடன் சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இருக்கும் சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்”.     மணல் கொள்ளை என்பது வருங்கால சந்ததிகளை வளம் இழந்து வறட்சியில் வாடிட வைக்கும் செயல் என்பதை உணர்ந்து, மணல் கொள்ளையால் பல நீர்நிலைகளை இழந்து விட்டோம். விவசாயம் பொய்த்து விட்டது.  இனியாவது விழிப்புணர்வுடன் இருந்து மணல் வளம் காப்போம். மணல் கொள்ளை ஒழிப்போம்.  மணல் என்பது வருங்கால வைப்பு நிதி என்பதை உணர்த்திடும் நூல்.  நூலாசிரியர்  இருவருக்கும் பாராட்டுக்கள்.


கருத்துகள்