எங்கும் எதிலும்! கவிஞர் இரா. இரவி .

எங்கும் எதிலும்!
கவிஞர் இரா. இரவி
.
எங்கும் எதிலும் நேர்மை வேண்டும்
எவரும் ஊழல் செய்யாதிருக்க வேண்டும்!

சக மனிதர்களை மதித்திட வேண்டும்
சகலமும் சகலருக்கும் கிடைத்திட வேண்டும்!

உயர்ந்தவன் தாழ்ந்தவன் நிலை வேண்டாம்
உலகில் யாவரும் சமநிலை வேண்டும்!

ஏழை பணக்காரன் இருநிலை வேண்டாம்
எல்லோரும் சம்மான ஒருநிலை வேண்டும்!

பசியால் ஒருவரும் வாடாதிருக்க வேண்டும்
பசித்த வயிற்றுக்குச் சோறிட வேண்டும்!

ஏற்றத்தாழ்வு இல்லாதிருக்க வேண்டும்
எங்கும் எதிலும் சமநிலை வேண்டும்!

மாட மாளிகைகள் இல்லாதிருக்க வேண்டும்
மழைக்கு ஒழுகும் குடிசையும் வேண்டாம்!

நடுத்தர வீடுகள் அனைவருக்கும் வேண்டும்
நாடே சமநிலை அடைந்திட வேண்டும்!

வேலைவாய்ப்பு அனைவருக்கும் வேண்டும்
வேலையின்றி தவிக்கும் நிலை வேண்டாம்!

கோடிகள் பதுக்குவோரை சிறையிலிட வேண்டும்
கோவில்களில் தமிழ்ப்பாடல் ஒலித்திட வேண்டும்!

மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழித்திட வேண்டும்
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வேண்டும்!

சாதிமத வேறுபாடுகள் தகர்த்திட வேண்டும்
சகோதரர்களாக அனைவரும் வாழ்ந்திட வேண்டும்!

பெண்களை ஆண்கள் மதித்திட வேண்டும்
பெண்கள் ஆண்களை மதித்திட வேண்டும்!

குழந்தைகளை யாவரும் போற்றிட வேண்டும்
குழந்தைகளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

எங்கும் எதிலும் நியாயம் வேண்டும்
எங்கும் எதிலும் நாணயம் வேண்டும்!

கருத்துகள்