அடைமழையில் நனைந்த ஆட்டுக்குட்டி ! நூல் ஆசிரியர் : நெய்தல் நாடன் ! --94420 31129 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


அடைமழையில் நனைந்த ஆட்டுக்குட்டி !

நூல் ஆசிரியர் : நெய்தல் நாடன்  ! --94420 31129 

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 

வெளியீடு :
பாவலர் காலையூர் நெய்தல் நாடன், 35, பங்களா தெரு, பெரிய காலாப்பட்டு, புதுச்சேரி-605 014. பக்கம் : 152, விலை : ரூ. 160

******
      நூல்ஆசிரியர் பாவலர் காலையூர் நெய்தல் நாடன் அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போல புதுவைக்குப் பெருமை சேர்த்து வருபவர், தொடர்ந்து இதழ்களில் எழுதி இயங்கி வருபவர். சிறுவர் பாடல்களாக இந்த நூலை வழங்கி உள்ளார். பெரியவர்களும் எல்லா வயதினரும் படிக்க வேண்டிய நூல் இது.

      இந்நூலை நூலாசிரியரின் அன்பு மகள் இளம்பிறைக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.  புதுவை அரசு கலை, பண்பாட்டு துறையின் பகுதி மானியத் தொகை உதவியுடன் வெளியிடப்படுகிறது என்பதையும் மறக்காமல் பதிவு செய்துள்ளார்.  நூலாசிரியர் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 

 கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து பணிபுரிந்து கொண்டே இலக்கியத்திலும் தடம் பதித்து வருகின்றார். பிஞ்சு நெஞ்சங்களில் நல்லதை விதைக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்று தன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

      மாவட்ட ஆட்சியர் திரு. இ. வல்லவன் அவர்களின் வாழ்த்துரை, சாகித்ய அகாதெமி விருதாளர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் அணிந்துரை, பேராசிரியர் மு. இராமதாஸ் அவர்களின் வாழ்த்துரை, கலைமாமணி முனைவர் எ.மு. ராசன் அவர்களின் வாழ்த்துரை யாவும் வரவேற்புத் தோரணங்களாக வரவேற்கின்றன.  வாசகர்களை 70 தலைப்புகளில் மழலையர் பாடல்களும், 9 தலைப்புகளில் கதைப் பாடல்களும் உள்ளன.  எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன.

      படிப்பே நமக்குச் சொத்து!

      ஒன்று தலை ஒன்று ! 
      இரண்டு கண்கள் இரண்டு!
      மூன்று தமிழ் மூன்று ! 
      நான்கு திசைகள் நான்கு!
      ஐந்து காப்பியம் ஐந்து! 
      ஆறு சுவைகள் ஆறு!
      ஏழு சுரங்கள் ஏழு! 
      எட்டு குணங்கள் எட்டு!
      ஒன்பது கோள்கள் ஒன்பது! 
      பத்து கைவிரல் பத்து!
      படிப்பே நமக்குச் சொத்து!

      பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு வாழ்வியல் அறிவு புகட்டி உள்ளார்.  “சொத்து பத்து இல்லிங்க, குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளேன், அது தான் சொத்து, அதை வைத்து பிழைத்துக் கொள்வார்கள்” என்று பலர் சொல்வதைக் கேட்டு இருக்கிறேன். நூலாசிரியர் ‘படிப்பே நமக்குச் சொத்து’ என்று முத்தாய்ப்பாக முதல் பாடலிலேயே எழுதி உள்ளார்.  பாராட்டுக்கள்.  உண்மை தான், கல்வி தான், திருடு போகாத, திருட முடியாத அழியாத பெரும் சொத்தாகும். 

      மொட்டைத் தலை சந்திரன்!
      நட்ட நடுவானிலே 
      வட்ட நிலா காயுது
      மொட்டை மாடி வாருங்கள் 
      முழு நிலவைப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு பல அரிய தகவல்களைத் தெரிவிக்கும் விதமாகவும் பல்வேறு தலைப்புகளிலும் பாடல்கள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

தமிழ்மொழி பற்றி விலங்குகள் பற்றி மரங்கள் பற்றி குழந்தைகளுக்கு எடுத்தி இயம்பும் விதமாக கவிதைகள் உள்ளன.

தமிழிலே அழைக்கணும் தம்பி!

அம்மா என்று தமிழிலே 
அழைக்கணும் தம்பி!
      ஆங்கிலம் மேன்மையென்று 
ஓடாதே நம்பி!
      அம்மா என்றால் பேரழகு 
அதன் பொருளாகும்
      ஆங்கிலத்தில் ‘மம்மி’ தான் 
கல்லறை யாகும்
      தம்மா சும்மா ‘மம்மி’ என்று 
கூப்பிடாதே நீ!
      
அம்மா என்றால் அன்பு பொங்கும்!

நாகரிகம் என்ற பெயரில் தமிழகத்தில் பல இல்லங்களில் ‘மம்மி’ ஆசை தொற்றிக் கொண்டுள்ளது.  அதனைப் போக்கிட எடுத்து இயம்பியது சிறப்பு.  அம்மா என்றால் அழகு. மம்மி என்றால் கல்லறை, எது நன்று முடிவெடுத்து அழைக்கச் சொல்லுங்கள்.

அக்கினிக்குஞ்சு!

மூணு வயசு முடியுமுன்னே 
மூனு மொழி படிக்கிறேன்
      மூளை குழம்பி பயத்துல ஒடு 
மூலையில் கிடக்கிறேன்
      குழந்தைகள் மீது ஆதிக்கம் செழித்து
      அன்பை அழித்து வம்பு செய்யாதீர்கள் !

என்று அழகாக எடுத்து இயம்பி உள்ளார். 

      பேசும் இறையே சாய்ந்தாடு!

      சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 
      சங்கத் தமிழே சாய்ந்தாடு
      முத்தமிழ்ச் சுவையே சாய்ந்தாடு 
      மூவுலக அழகே சாய்ந்தாடு
      பால் நிலாவே சாய்ந்தாடு 
      பாரதி பாட்டே சாய்ந்தாடு !

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு புகழ் பெற்ற வரிகள்.  அதனைக் கொண்டு தமிழ்ப்பற்று விதைக்கும் விதமாக வடித்த கவிதை நன்று.

      உலகப் பொதுமறைக் குறளைப் படி!
      முப்பாலில் வாழ்வியல் முறையைப் படி !
      எப்போதும் தப்பாது குறளைப் படி 
      ஈடற்ற் நீதி நூல் குறளைப்படி!

      வாழ்வியல் நெறி கூறிடும், வன்முறை ஒழுக்க வேண்டிடும், மனிதனை மனிதனாக நடக்க வேண்டிடும், மனிதநேயம் கற்பித்திடும் திருக்குறளை படிக்க வேண்டியது சிறப்பு!

      பைந்தமிழ் அறிவே துணையாகும்!
     படி! படி! தம்பி படி! படி! 
     படிப்படியாகத் தமிழைப் படி!
     துடிப்புடன் வாழத் தமிழைப் படி! 
     தொண்டுகள் செய்யத் தமிழைப் படி!
     சிந்தனை வளர் தமிழைப் படி! 
     சீருடன் வாழ தமிழைப் படி!

படி படி என்று பாரதிதாசன் பாடலை நினைவூட்டும் வண்ணம் உலகின் முதல்மொழியான, மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியான தமிழைப்படி என்று பாடியது சிறப்பு!

      வெளியில் போகும் அண்ணே!
ஓட்டுநர் உரிமம் இன்றி 
எப்போதும் வண்டி ஓட்டாதே!
      சட்டப்படித் தப்பாகும் 
காதில் போனில் பேசிக்கிட்டே
      ஓட்டாதே! – வீணாய்க் காலனுக்கு 
\அழைப்புமடல் நீட்டாதே!

இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டி வருகின்றனர்.  அவர்களை எச்சரிக்கும் விதமாக வடித்த பாடல் நன்று,

கண்ணேறு பொம்மை!

கண்ணேறு பொம்மை கட்டும் 
காமாட்சி அக்கா! – நீயும்
      முன்னேற வழியில்லாம 
நிக்காத மக்கா!
      முன்னோர்கள் சொன்னதில்லை 
கேணத்தனம் – ஐயர்
      பின்னால போனவன் 
செஞ்ச மூடத்தனம்!

பிஞ்சு நெஞ்சங்களில் மூடத்தனத்தைப் போக்கி பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைக்கும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.  மூட நம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக வடித்தது சிறப்பு. 

நெருப்பில் சுட்டுப் போடு!

மானாவாரிக் கம்பு – தின்றால் 
மனிதனுக்குத் தெம்பு
       நானே குடிச்சேன் நம்பு – பிடிச்சு 
 நடக்க வேண்டாம் கொம்பு!

கம்பங்கூழ் குடித்தால் உடல் நலத்திற்கு மிகவும் நன்று.  முதுமை வராது, இளமை நிலைக்கும், கம்பை ஊன்றி நடக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று விளக்கிய விதம் அருமை. 

எதுகை, மோனை, இயைபு என சந்த நயங்களுடன் பொருளுடன் அறிவார்ந்த கருத்துக்களுடன் வடித்த கவிதைகள் நன்று.  பாட்டி வடை சுட்ட கதையையும் கவிதையாக வடித்த விதம் நன்று.  பாராட்டுக்கள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்