தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி

தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற கதையாக
எல்லோரும் பிறரைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்!

கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லை
கவலை எல்லோருக்கும் மனதில் ஓரத்தில் உண்டு!

வெளித்தோற்றம் கண்டு தவறாக எண்ணுகின்றோம்
வளமாக நலமாக பலர் உள்ளார்கள் என்று!

உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கும் கவலையுண்டு!
உலகத்தார் அனைவருக்கும் கவலை உண்டு !

கவலைக்காக கவலை கொள்ளாதிருப்பது சிறப்பு!
கவலைப்படுவதால் கவலைகள் நீங்குவதில்லை!

கவலைக்கு விடுமுறையை வழங்கி விட்டு
களிப்புடன் வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள்!

கோடீசுவரர்களும் கவலையுடனே காலம் கழிக்கின்றனர்
குடிசையில் நிம்மதியாக வாழ்வோர் இருக்கின்றனர்!

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்
மனதை செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!

பிறர் நன்றாக இருந்தால் பெருமை கொள்ளுங்கள்
பிறர் நன்றாக இருந்தால் பொறாமை கொள்ளாதீர்கள்!

கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதை விட்டுவிட்டு
கிடைத்த ஒன்றை மதித்து வாழுங்கள்!

மாளிகையில் வாழ்பவர்களுக்கும் மனக்கவலை உண்டு
மண் குடிசையிலும் மகிழ்வோடு வாழ்பவர்கள் உண்டு!

எல்லோரும் நல்லா இருக்காங்க நான் தான்
இப்படி இருக்கேன் என்று எல்லோரும் நினைக்கின்றனர்!

இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை
இருட்டு வெளிச்சம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை !

போட்டி பொறாமையின்றி வாழ்ந்திட வேண்டும்
போதுமென்ற மனத்தை போதுமானவரை பெற வேண்டும்!

தூரத்து வெளிச்சம் கண்களை உறுத்தும்
பக்கத்து வெளிச்சமே பயன் தரும்!

கருத்துகள்