மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




மனதோடு மழைச்சாரல் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

indhumathihari94@gmail.com
வாசகன் பதிப்பகம், 167,
AVR காம்ப்ளக்ஸ், அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
க்கம் : 64, விலை : ரூ. 50.
******
      நூல்ஆசிரியர் கவிஞர் இந்துமதி அவர்களுக்கு இது முதல் நூல். முத்தாய்ப்பாக உள்ளது.  அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு மற்றும் பொருத்தமான படங்கள் என தரமாக பதிப்பித்துள்ள வாசகன் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.  பதிப்புரை நன்று.  பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி அவர்களின் அணிந்துரையும் கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் வாழ்த்துரையும் அருள்திரு. ம. மரிய லூயிஸ் அவர்களின் வாழ்த்துரையும் ஆசிரியரின் தன்னுரையும் மிக நன்று.

      தொலைதூரக் கல்வி நிலையங்கள்!

பயண நேரமும்
பாழாக்கி விடக் கூடும் படிப்பை
என எண்ணியதால்
உருவெடுத்திருக்குமோ
தொலைதூரக் கல்வி!

தொலைதூரக் கல்வியால் பலர் கல்வி பெற்று வருகின்றனர்.  அதற்கான விளக்கம் மிக அருமை.

      புத்தகங்கள்!

      புகழை விரும்பாத
      புரட்சியாளர்கள்
      அறியாமையை அகற்ற
      ஆக்கப்பூர்வமாய் போராடுகிறார்கள்.

புத்தகங்களைப் பற்றி பலரும் எழுதி உள்ளனர்.  வித்தியாசமான விளக்கத்துடன் கவிதை எழுதி இருப்பது சிறப்பு.

      புத்தகப்பை!

      அடுக்கி வைக்கப்பட்டுள்ள
      அறிஞர்களின்
      அறிவுக் களஞ்சியம்!

உண்மை தான், அறிவுக்களஞ்சியம் தான்.  தொலைக்காட்சி வருகைக்குப் பின் படிக்கும் பழக்கம் குறைந்து. புத்தகக் கடையில் கூட்டம் கூடினால் தான் அறிவார்ந்த சமுதாயம் பிறக்கும்.

      கவிதை!

      கல்லாதவர்களையும்
      கல்வியாளர்களாக மாற்றும்
      கலைநயமிக்க காப்பியம்!

கவிதைக்கான விளக்கம் நன்று. படிக்காதவர்களையும் படிப்பாளி-யாக்கும் ஆற்றல் கவிதைக்கு உண்டு என்று உணர்த்தியது சிறப்பு.

      நாக்கு!

      நவரசங்களை
      நாட்டியத்தோடு
      நடிக்கும்
      ரசனை மிகுந்த அசாத்தியவாதி!

சுவைப்பதற்கும் உதவிடும் நாக்கு பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.நாக்கு கத்தியை விட கூர்மையான ஆயுதம் .மிக மிக கவனமாகப் பயன்படுத்த வேண்டும் .

      கருணை இல்லம்!

தன்னிடமிருப்பதை
தன்னலமின்றி
பகிர்ந்தளிக்கும்
கர்ணனின் உள்ளம்
கருணை இல்லம்!

கருணை இல்லங்கள் தான் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தந்து உயிர் வளர்த்து அன்பு செலுத்தி வருகின்றன.  கருணை இல்லம் பற்றிய பதிவு நன்று.

தோல்வி !

சாதனையாளர்களை
சரித்திரங்களாக
      உருவாக்கியுள்ள
மிகப்பெரிய படைப்பாளி!

வெற்றி பெற்ற மனிதர்களும் சாதனைப் படைத்த மனிதர்களும் பல்வேறு தோல்விகள் கண்டு வந்தவர்கள் தான்.  எடிசன் ஆப்ரகாம் லிங்கன் என பலரும் பல தோல்விகளைச் சந்தித்து பின்னர் தான் வெற்றி பெற்றனர்.  இதுபோன்ற பல தோல்விகளைச் சிந்தித்து பின்னர்தான் வெற்றி பெற்றனர். இதுபோன்ற  பல நினைவுகளை மலர்வித்தது கவிதை, பாராட்டுக்கள்.

மருத்துவமனை!

மரித்தவர்களையும்
மறுபரிசீலனை செய்யும்
உச்சநீதிமன்றம் !

நாட்டு நடப்பை நீதிமன்றங்கள் ஆணையிட்டு புதைத்தவர்களையும் தோண்டி எடுக்கப்பட்டு சோதனை செய்திடும் நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக உள்ளது.

தொலைக்காட்சி !

தொலைநோக்குப் பார்வையோடு
      தொல்லையையும்
      சேர்ந்தளிக்கும்
      விஞ்ஞானம் விதைத்த
      வீரியம் நிறைந்த விதை.

விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் மூடநம்பிக்கை விதைக்கும் விதமாக சாமியார் கதைகளும் பேய் கதைகளும் ஒளிபரப்பி மக்களை முட்டாளாக்கி பணம் பார்த்து வருகின்றனர். தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாகி விட்டது என்பது முற்றிலும் உண்மை. தமிழ்ப் பண்பாட்டை சிதைக்கும் விதமாகவே தொலைக்காட்சி தொடர்களும் வருகின்றன.

கடல்!

இவ்வளவு பெரிய சமுத்திரத்தில்
      சொட்டு நிலத்தை
எப்படி கலந்திருப்பார்கள்?

      கடல் வானின் நிறமான நீல நிறத்தை
பிரதிபலிக்கின்றது.  நீல நிறக் கடல் கண்டு நல்ல கற்பனையுடன் எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை நன்று.

புன்னகை!

மலர்களும் பொறாமை கொள்கின்றன
      இரவின் முகமலர்ச்சியைக் கண்டு!

முகத்தில் புன்னகை இருந்தால் பொன்னகை தேவையில்லை.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மை. முகமலர்ச்சியான முகம் எல்லோருக்கும் பிடிக்கும் பெண்ணின் முகமலர்ச்சி கண்டு மலர்களும் பொறாமை கொள்கின்றன், நல்ல கற்பனை.

இயற்கை!

உன் மேல்
பச்சை சாயத்தோடு
      பல வண்ண
சாயங்களைப் பூசியது யார்?
      பல வண்ண மலர்களுடன்
      கவர்ச்சி மிகுந்து
      கண்களைப் பறிக்கிறாயே!

இயற்கையை ரசிப்பவர்களால் தான் கவிதை எழுத முடியும். கவிதை எழுதுபவர்கள் அனைவருமே இயற்கையின் ரசிகர்களாகவே இருப்பார். நூல் ஆசிரியர் கவிஞர் இந்துமதியும் இயற்கை ரசிகை என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று.

அரசாங்கம்!

தடுமாறி
தடம் மாறுகிறது
நாளும்
      குடிபோதைக்காரனைப் போல்!

நாட்டு நடப்பை துணிவுடன் எழுதி உள்ளார்.  மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி விட்டு மூடாமல் மேலும் திறக்க நிலையினை அறிந்து, மதுவினை அரசாங்கமே விற்கும் அவலம் தமிழகத்தில் மட்டுமே நடந்து வருகின்றது.  வேதனையுடன் வடித்த கவிதை நன்று.

முதல் நூல் சிறப்பாக உள்ளது.  தொடர்ந்து எழுதுங்கள், பாராட்டுக்கள்.

நூல் முழுவதும் 4 வரி, 5 வரி புதுக்கவிதைகளாக உள்ளன.  வருங்காலங்களில் ஹைக்கூ பற்றிய புரிதல் கொண்டு எழுதினால் மூன்று வரிகளில் நல்ல ஹைக்கூ கவிதைகளும் வழங்க முடியும், முயற்சி செய்யுங்கள், வாழ்த்துக்கள்!

கருத்துகள்