ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மு.முருகேஷ் !




ஹைக்கூ  உலா !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை கவிஞர் மு.முருகேஷ்  !

அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408.
செல்: 94443 60421.
மின்னஞ்சல் : haiku.mumu@gmail.com

வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம்120. விலை 80 ரூபாய் .
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

கவிதை வானில் உலா வரும் ஹைக்கூ மேகங்கள்...
                                                                                                        

      1916-ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் எழுதிய குறுங்கட்டுரையின் வழியாக தமிழுக்கு அறிமுகமான ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள், 1970-களில் தான் முதன்முதலாக கவிக்கோ அப்துல்ரகுமானால் நேரடியாக தமிழில் எழுதப்பட்டன.


அதுவரை ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதையாக
மட்டுமே தமிழில் ஹைக்கூ கவிதைகள் அறியப்பட்டன. 

     1984 - ஆகஸ்ட் மாதத்தில் தமிழின் முதல் ஹைக்கூ கவிதை நூல் வெளியானது. 
அதே ஆண்டின் நவம்பரில் இரண்டாவது ஹைக்கூ நூல் வெளியானது. ஓவியக் கவிஞர்
அமுதபாரதியின் ‘புள்ளிப் பூக்களும்’, பாவலர் அறிவுமதியின் ‘புல்லின் நுனியில் பனித்துளி’யும்
தமிழ்க் கவிதை வனத்தில் ஈரமிக்க ஹைக்கூ கவிப்பூக்கள் தொடர்ந்து பூக்க காரணிகளாகின.

    ‘சூரியப் பிறைகள்’ (1985 - பிப்ரவரி) தந்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ பற்றிய
விரிவான விளக்கங்களைப் புதிதாக எழுத வரும் இளைய கவிஞர்களுக்கு முன்னுரையாகத் தந்ததோடு,
ஹைக்கூ கவிதையின் கிளை வடிவங்களான சென்ட்ரியூ, லிமரைக்கூ (ஒரு வண்டி சென்ட்ரியூ-2001, 
சென்னிமலை கிளியோபாத்ராக்கள்-2002) வகைகளையும் அறிமுகம் செய்துவைத்த முன்னோடியாவார்.

    சேலம் தமிழ்நாடன், நெல்லை சு.முத்து, கவிஞர்கள் மித்ரா, நிர்மலா சுரேஷ், பேராசிரியர்கள் இரா.மோகன்,
சா.உதயசூரியன், இராம.குருநாதன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அமரன் ஆகியோர் போட்டுத் தந்த
கவித்தடத்தில் இன்றைக்கு தமிழ் ஹைக்கூ ராஜநடைப் போட்டு பவனி வருகிறது.

   ‘சொல் புதிது; பொருள் புதிது; சோதிமிக்க நவகவிதை’ என பாரதி சொன்னது இந்த ஹைக்கூ கவிதைகளைத்
தானோ என்று எண்ணுமளவிற்கு, நூற்றாண்டு கண்டிருக்கும் தமிழில் ஹைக்கூ தொடர்பான 
500 நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்திய அளவில் தமிழில்தான் ஹைக்கூ 
தொடர்பான செயல்பாடுகள் மிக அதிகளவில் நடைபெற்றுள்ளன என்பது தொன்மை வாய்ந்த 
தமிழ் மொழியின் சிறப்புகளில் மேலும் ஒன்றாக சேர்ந்து கொள்கிறது.

     80-களின் இறுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த என்னை மூன்று வரி ஹைக்கூ கவிதைகள்
ஈர்த்தன. நானும் ஆர்வத்தோடு ஹைக்கூ நூல்களைத் தேடித் தேடி படித்தேன். 90-களில் கேலியான
விமர்சனங்களுக்கு உள்ளான ஹைக்கூ கவிதைகள், 2000-த்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி,
மூத்த - இளைய கவிஞர்கள் என பலரையும் எழுத வைத்தது. தொடக்க காலத்தில் என்னோடு ஹைக்கூ தடத்தில் பயணிக்கத் தொடங்கிய பலரும், 2000-த்திலேயே நின்றுவிட்டனர். பிறகு பல நூறு புதியவர்கள் பயணத்தில் இணைந்து கொண்டனர்.


     ஹைக்கூ எனும் கவிதைக் காதலியை கைப்பிடித்த நாளிலிருந்து இன்றுவரை ஒன்றாய் சேர்ந்து பயணித்து வரும் கவிஞர்களுள் எங்கள் மதுரைக் கவிஞர் இரா.இரவிக்கு முதன்மையான இடமுண்டு. 1998 - ஆம் ஆண்டில் கவிஞர் இரா.இரவியின் முதல் ஹைக்கூ நூலான ‘ஹைக்கூ கவிதைகள்’ வெளிவந்தது. இருபதாம் ஆண்டினைத் தொட்டிருக்கும் இவ்வேளையில், தனது பத்தாவது ஹைக்கூ கவிதை நூலாக ‘ஹைக்கூ உலா’வைத்தந்திருக்கும் அன்புக்கவிஞர் இர.இரவிக்கு முதலில் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

     பழகுவதற்கு இனியவர்; மொழிப் பற்றாளர்; பண்பாளர்; நட்பு பாராட்டுவதில் நிகரற்றவர்; எப்போதும் 
தொடர்பு அறுந்துவிடாமல் நட்பைத் தொடர்பவர்... என பன்முகத் திறன்கள் மிக்க கவிஞரின் அடர்ந்த மீசைக்குள்ளிருந்து வெளிப்படும் அந்த ஒற்றைப் புன்னகையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’நல்ல பண்பாளர்களிடமிருந்தே பண்பட்ட படைப்புகள் வெளிப்படும்’ என்பதற்கிணங்க, கவிஞரின் ஆகச் சிறந்த நற்பண்புகளை அவரது படைப்புகளின் வழியாகவும் கண்டுணர முடிகிறது.

      2013-இல் வெளியான ‘ஆயிரம் ஹைக்கூ’ நூலைத் தொடர்ந்து, இந்த ‘ஹைக்கூ உலா’ வந்திருக்கிறது. இந்நூலில்,’தன்னம்பிக்கை முனை’ தொடங்கி, ‘உதிரிப்பூக்கள்’ வரை  29 தலைப்புகளின் கீழ் ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல், ஹைக்கூ வெவ்வேறு கோணங்களில்


புதிய புதிய தரிசனங்களைத் தர வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனாலும், ஒரே நூலில் ஆரமாக கோர்க்கப்பட்ட இந்த ஹைக்கூ பாமாலையும் தமிழ் மணமும் கவித்துவ அழகும் பெற்று ஒளிர்வதைப் பார்த்து பெருமிதம் கொள்கின்றேன்.

      கவிஞர் இரா.இரவி என்றதுமே, மிகக் குறைவான வார்த்தைகளால் எழுதப்படும் அவரது ஹைக்கூ கவிதைகளே முதலில் என் மனதில் சட்டென மின்னிப் போகின்றன. அதிகபட்சம் ஆறேழு வார்த்தைகளைத் தாண்டாதவை. மிகக்குறைவான வார்த்தைகளில் நிறைவான செய்திகளை வாசகர்களோடு பகிரும் ஆற்றல் பெற்றவை இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள்.
 
       ‘இளைஞர்களின் நன்னம்பிக்கை முனை’ என பாராட்டப்பெறும் வெ.இறையன்பு அவர்கள் சொல்லியிருப்பதுபோல்,

’உணர்தல் நிலையிலான ஹைக்கூ கவிதையை உணர்ச்சி நிலையிலிருந்து எதிர்கொள்பவராக’ கவிஞர் இரா.இரவி இருக்கின்றார்.

        தலைப்புவாரியாக கவிதைகள் இருப்பதனால், அவரவர் ரசனைக்கேற்ற தலைப்புகளைத் தேடிப்படித்து இன்புறலாம். நான் ஒரு தேனீயாய் நூலெங்கும் சுற்றித் திரிந்தேன்.

 ‘ஒவ்வொரு நேரமும்
ஒவ்வொரு வண்ணம் 
 ரசியுங்கள் வானம்.’

  ‘மரம் விட்டு உதிர்ந்த 
 கவலையால் 
 இலை சருகானது.’

 ‘சிரிக்கின்றன 
 பிணத்தின் மீதிருந்தும்
 பூக்கள்.’

 ‘இரண்டு நாள் போட்டால் 
 பல்லையும் கரைக்கும் 
 குளிர்பானம்!’

 ‘போக வழியுண்டு 
 திரும்ப வழியில்லை 
 கந்துவட்டி.’

 ‘அவிழ்த்துவிட்ட கூந்தலில் 
 முடிந்து விட்டாள்
 மனதை.’

 ‘அழிக்க மனமில்லை 
 அலைபேசி எண் 
 இறந்த நண்பன்.’

    இப்படியாக என் மனம் கவர்ந்த கவிதைகளைப் பட்டியலிட்டால் இன்னும் நீளும். மேலும், இதிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிக்க முயன்றால் பல பக்கங்கள் தொடரும். ஆகையினால்,வாசகக் கவிகளே... உங்கள் சிந்தனைக்கே இவற்றை விட்டு விடுகின்றேன்.


       ’ஹைக்கூ கவிதைகளில் அரசியல் விமர்சனம் கூடாது’ என்று ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்ட கருத்து,இப்போது வலுவிழந்து விட்டது. இன்றைய தமிழ் ஹைக்கூவில் நேரான - கூரான அரசியல் கவிதைகள்தொடர்ந்து எழுதப்படுகின்றன. அத்தகைய அரசியல், சமூக விமர்சனக் கவிதைகளைத் தொடர்ந்து படைப்பதில் கவிஞர் இரா.இரவி-க்கு தனித்த பார்வையும் சிறப்புமுண்டு

      பெரியார், இன்குலாப் பற்றி எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படும் நேரடியான கருத்தினைத்தவிர்த்து, இன்னும் கவித்துவ அழகுடன் அவற்றைச் செப்பம் செய்து கவிஞர் வெளியிட்டிருக்கலாம். அறம், காதல், அம்மா, கந்துவட்டி தலைப்புகளிலான ஹைக்கூ கவிதைகளில் பெரும்பாலும் கடைசி வரியாக தலைப்புகளே உள்ளன. இதனால், ஹைக்கூவின் ஈற்றடி தர வேண்டிய ‘இன்ப அதிர்ச்சி’ வாசகனுக்கு கிடைக்காமல் போவதாக நான் உணர்கிறேன்.

     கவிதை எழுதுவதோடு நில்லாமல், பட்டிமன்ற பேச்சாளராக, தன்னம்பிக்கை உரையாளராக, தனது சிறப்பான பணிகளுக்காக ‘சிறந்த பணியாளர் விருது’ பெற்றவராக, அமெரிக்க மேரிலாண்ட் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ’மதிப்புறு முனைவர் பட்டம்’ பெற்ற ஆளுமையாளராக உலா வரும் கவிஞர் இரா.இரவியின் ‘ஹைக்கூ உலா’வையும் தமிழ்க் கவிதையுலகம் வரவேற்றுக் கொண்டாடட்டும்.

  நூலைச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் வானதி பதிப்பகத்தாருக்கும் எனது அன்பான பாராட்டுக்கள்.

    இணையதளத்தில் உலகத் தமிழர்களின் கவனம் ஈர்த்த கவிஞராக பெருமை பெற்றிருக்கும் கவிஞர்
இரா.இரவி, இன்னும் பல உயரங்களைத் தொட, சிறப்புகளைப் பெற என் அன்பான வாழ்த்துகள்.

கருத்துகள்