தமிழை மதிக்காத உன்னை! கவிஞர் இரா. இரவி !

தமிழை மதிக்காத உன்னை!

கவிஞர் இரா. இரவி !

தமிழை மதிக்காத உன்னை இனிமேல்
தமிழர்கள் மதிக்க மாட்டார்கள் உணர்ந்திடு!

லோககுருவாக நீ இருந்தாலும் தமிழ்
லோகத்தின் முதன்மொழி அறிந்திடு!

மடத்தலைவராக உன்னை மதித்தனர் பலர்
மட தலைவராக மாறியது முறையோ?

அவமரியாதை தமிழுக்கு அல்ல அறிந்திடு
அறிவிலி என்று உலகம் உன்னை உரைக்கும்!

இளையவர் என்று அழைத்தவர்கள் எல்லாம்
இனி உன்னை முட்டாள் என்பார்கள்!

உன்னிடம் ஆசிப் பெற்றவர்கள் இனி
உன்னிடம் ஆசி பெறப் போவதில்லை!

தண்டத்தைப் போட்டு ஓடியது ஒரு தண்டம்
தமிழ்மொழியை மதிக்காத நீ ஒரு தண்டம்!

தியானம் செய்ததாக கதை கட்டினாலும்
தமிழர்கள் இனி உன்னை நம்ப மாட்டார்கள்!

அருகில் ஆளுநர் எழுந்து நிற்பதைப் பார்த்தாவது
அறிவோடு எழுந்து நின்று இருக்க வேண்டும்!

கடவுளை வணங்காத தந்தை பெரியாரும்
கடவுள் வாழ்த்திற்கு எழுந்து நின்றதை நீ அறிவாயா?

அவை நாகரீகம் அறியாத உன்னை
அவையில் இனி யாரும் ஏற்க மாட்டார்கள்!

உலகமே போற்றிடும் உன்னதத் தமிழை
ஒருவன் மதிக்காத்தால் இழுக்கு உனக்குத்தான்!

ஏற்கனவே களங்கப்பட்ட காஞ்சி மடத்திற்கு
இளையவர் உன்னாலும் களங்கம் வந்தது!

தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ்ச்சோறு தின்று
தமிழர்களிடம் தட்சணைகள் பெற்று வாழும் நீ!

தமிழை மதிக்காததற்கு மன்னிப்பு கேள்
தமிழ்த்தாய் மன்னிப்பாள் இனி எழுந்து நில்!

கருத்துகள்