மனத்திற்கிட்ட கட்டளை! கவிஞர் இரா. இரவி !

மனத்திற்கிட்ட கட்டளை!
கவிஞர் இரா. இரவி !

நாளும் நல்லதையே எப்போதும் நினைக்க வேண்டும்!
நான் என்ற அகந்தை வராதிருக்க வேண்டும்!
எல்லோரையும் அன்பாக மதிக்க வேண்டும்
யாருடனும் சண்டை செய்யாதிருக்க வேண்டும்!
பேராசை எப்போதும் வராதிருக்க வேண்டும்
பண்பில் சிறந்தவனாக வாழ்ந்திட வேண்டும்!
உண்மையை மட்டுமே பேசிட வேண்டும்
ஒருபோதும் பொய் பேசாதிருக்க வேண்டும்!
முடிந்தளவு பிறகுக்கு உதவிட வேண்டும்
முயற்சி மூச்சென நடைபெற்றிட வேண்டும்!
படைப்பில் சாதனைகள் நிகழ்த்திட வேண்டும்
படிப்போர் உள்ளம் கவர்ந்திட வேண்டும்!
இன்சொல்லே எப்போதும் பேசிட வேண்டும்
வன்சொல் எப்போதும் பேசாதிருந்திட வேண்டும்!
சினம் என்பதை அறியாதிருந்திட வேண்டும்
சிறுவர்களையும் மதித்து நடந்திட வேண்டும்!
தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்
தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்!
இன்பத்திற்கு கூத்தாடாமல் இருந்திட வேண்டும்
துன்பத்திற்கு கவலை கொள்ளாதிருக்க வேண்டும்!
பொறாமைப்படாத நல் நெஞ்சம் வேண்டும்
பூத்திட்டப் பூவாக மலர்ந்த உள்ளம் வேண்டும்!
எண்ணம் சொல் செயல் சிறக்க வேண்டும்
எல்லோரும் பாராட்டும் நல்குணம் வேண்டும்!
பகையே இல்லாத நிலைமை வேண்டும்
பார்ப்பவர் உள்ளம் மலர்ந்திட வேண்டும்!
சமுதாயத்தைச் சீர்படுத்திட எழுதிட வேண்டும்
சமுதாயம் முழுவதும் சீராகிட வேண்டும்!
மனத்திற்கிட்ட கட்டளைகள் நிறைவேறிட வேண்டும்
மனம் போல நல்வாழ்வு நிலைத்திட வேண்டும்!

கருத்துகள்