தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்)

நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

மணிமேகலை   பிரசுரம் தியாகராயர் நகர் சென்னை  600017.
விலை 50  ரூபாய் 
******
      எழுத்தாளர் உஷா முத்துராமன் அவர்கள் திருநகரில் வாழ்ந்து வரும் இல்லத்தரசி. முகநூலில் நல்ல கவிதைகள் படைத்து வரும் கவிதாயினி.  காலை வணக்கத்தை கவித்துவத்துடன் வழங்கி வரும் தோழி, மதிப்புரைக்காக இந்நூலை அனுப்பி இருந்தார்.
      நூலை தனது பெற்றோருக்கு மட்டுமன்றி மாமனார், மாமியாருக்கும் காணிக்கையாக்கி நன்றியைப் பதிவு செய்துள்ளார்.  கணவர் முத்துராமன், மகள் ராதிகா வைத்தியநாதன்,  பேரன் வருண்சுந்தரம் வரை அனைவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார்.பல்வேறு இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .
      எழுத்துலகில் தனி முத்திரை பதித்து வருபவரும், புதிய தலைமுறை கல்வி வார இதழில் மிக நுட்பமான அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வருபவருமான என் முகநூல் நண்பர் எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்களின் அணிந்துரையும், எழுத்தாளர் தேவிபாலாவின் வாழ்த்துரையும் மிக நன்று.
      நூலின் தலைப்பிலான முதல் கதையே, “தங்கைக்கோர் குழந்தை” சிந்தனை விதைக்கும் விதமாக உள்ளது.  தன் தங்கைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை அறிந்து தனக்குப்பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்றை மனைவியின் சம்மதத்துடன் தங்கைக்குத் தத்துக் கொடுக்கும் பாசமிக்க அண்ணன் கதை . மனிதாபிமானம் விதைக்கும் சிறந்த சிறுகதை.
      ‘பார்வைகள்’ என்ற கதை, கண் தானம் விழிப்புணர்வு விதைக்கும் கதை. விபத்தின் போது இறந்துவிட்ட ஓட்டுனரின் கண் முதலாளிக்கு வைக்கப்பட்டு பார்வை வந்ததும், ஓட்டுனர் கடைசியாக ஆசைப்பட்ட நாகூர் தர்காவிற்கு ஓட்டுனர் குடும்பத்துடன் சென்று கண்டுகளிப்பதை மிக நெகிழ்ச்சியுடன் எழுதி உள்ளார்.  தீயுக்கும், மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதர்களுக்குத் தாருங்கள் என்ற விழிப்புணர்வை விதைத்தது சிறப்பு.
      ‘தவிப்பு’ என்ற சிறுகதையில் தன்னை சரியாக கவனிக்காமல் இருக்கும் பெற்றோரை கவனிக்க வைத்து பணத்தை விட பாசம் பெரிது என உணர்த்திடும் யுத்திக்கு  பாராட்டுக்கள்.
      ‘ஒரு நிமிட சபலம்’ என்ற சிறுமி நிவேதா அப்பா, அம்மாவிற்குள் சண்டை வராமல் சமாளித்துப் பேசும் அறிவாளியாக இருக்கிறாள்.  பிறர் பணத்தின் மீது ஆசை  கூடாது என்ற அறநெறிக் கருத்து விதைத்து உள்ளார்
      ‘வாழ்க்கை’ என்ற சிறுகதையில் கணவன் மனைவியிடம் ஆணாதிக்கம் செலுத்தக் கூடாது மனைவியும் கணவனை எடுத்து எறிந்து பேசக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியது சிறப்பு.
      ‘காலச் சக்கரம்’ என்ற சிறுகதையில் மாமியார், மருமகள் சண்டை புரிதல் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டி எழுதியது சிறப்பு.
      ‘கல்யாணம் யாருக்கு?’ என்ற சிறுகதை எள்ளல் சுவையுடன் உள்ளது.  மகனுக்குப் பெண் பார்க்க வந்த இடத்தில் தந்தை மாப்பிள்ளை ஆகிறார்?
      ‘திட்டம் நிறைவேறியது’ என்ற சிறுகதையில் மனிதாபிமானம் மிக்க மாமியாராக் காட்டி இருப்பது சிறப்பு, விருவிருப்பாக இருந்தது.
      ‘அம்மாவின் ஆசை’ என்ற சிறுகதையும், விழிகள் தான விழிப்புணர்வு விதைக்கின்றது.
      ‘திருவிழான்னு வந்தா’ சிறுகதை, இளம் விதவை மறுமணத்தின் அவசியத்தை உணர்த்தியது.
      ‘முற்றுப்புள்ளி’ என்ற சிறுகதை, இரண்டு குழந்தைகள் போதும், முற்றுப்புள்ளி வைத்திடுவோம் என்று குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விதைத்தது.
      ‘இரக்கம் இறங்குகிறது’ என்ற சிறுகதை, முன்கூட்டி பணம் தந்து உதவியவருக்கு வேலையை முடித்துக் கொடுத்து  உதவாமல் இருக்கும் தொழிலாளியின் சுயநலத்தைக்    காட்டியது.
      ‘மாற்றம்’ என்ற சிறுகதை அலுவலகப் பணியாளர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
      ‘தர்மம்’ என்ற சிறுகதை வீட்டுக்கு வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் மனிதநேயம் என்று வலியுறுத்துகிறது.
      ‘பாசமுள்ள எறும்புகள்’ என்ற சிறுகதை, குழந்தைகளைத் திட்டாமல் அன்பு செலுத்தினால், அடம்பிடிக்காமல் அமைதியாக வளரும் என்ற கருத்தை விளக்கியது.
      ‘காதல் பரிசு’ என்ற சிறுகதை, அக்காவைக் கொன்றவனை காதலிப்பது போல நடித்து கொலை செய்யும் கதை.திருப்பங்களுடன் துப்பறியும் கதை போல எழுதி உள்ளார்.
      ‘இதுவும் ஒரு பட்ஜெட் தான்’ சிறுகதை, வேகாத வெயிலில் எரிவாயு சிலிண்டர் கொண்டு வருபவர்களுக்கு சிறிய ஊக்கத் தொகை தருவது தவறில்லை என்பதை உணர்த்தியது.
      ‘இப்படித்தான் இருக்கணும் பொம்பளே’ என்ற சிறுகதை, கணவன் மனைவி புரிதலை உண்டாக்கியது.  யாரையும் மட்டமாக எண்ணக் கூடாது என்ற எண்ணத்தையும் விதைத்தது. 
      ‘அம்மா வந்தாள்’ என்ற சிறுகதை, அம்மாவின் ஆசைக்காக காதலியை மறந்து, அம்மா சொன்னவளை மணமுடித்து அவள்  நோயால் இறந்துவிட பழைய காதலியை சந்தித்து மணமுடிக்கும் கதை.
      ‘அரசியல் புரிந்தது’ என்ற சிறுகதை அரசியல் பற்றி விளக்கம் சொல்லியது.  கணவன் மனைவி இல்வாழ்க்கையில் ஒப்பீடு செய்தது.சிறப்பு .
      ‘தீக்குளிப்பு’ என்ற சிறுகதை தலைவருக்காக தீக்குளிக்கும் தொண்டனுக்கு அறிவுரை வழங்கி தீக்குளிப்பதைத் தடுத்து நல்அறிவுரை வழங்கி உள்ளார்.
      ‘கட்டாய ஓய்வு’ என்ற சிறுகதை, கட்டா ஓய்வு வழங்கப்பட்டாலும் ஓய்வாக வீட்டில் இருக்காமல் ஏதாவது ஒரு வேலை செய்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
      ‘காதல் விளக்கம்’ என்ற சிறுகதை, சாதி, மத வேறுபாடு பார்க்காமல் மகளின் நல்ல காதலை அங்கீகரிக்க வேண்டும் என்று உணர்த்தியது.
      ‘பகடைக்காய்’ என்ற சிறுகதை வெளிநாட்டில் வேலை பார்த்தால் கவனமாக இருக்க வேண்டும், கடத்தலுக்கு பயன்படுத்திட பொருள் கொடுத்தால் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு விதைத்தது.
      ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கும் எழுத்தாளர் கவிஞர் உஷா முத்துராமனுக்கு பாராட்டுக்கள்.
      183ஆம் பக்கம் சேகருக்கு என்பது சேருக்கு என்று உள்ளது, அடுத்த பதிப்பில் திருத்தி விடுங்கள்.
      நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவுபடுத்தி சிறுகதை என்று பலர் எழுதி வருகின்றனர். ஆனால் எழுத்தாளர், கவிஞர் உஷா முத்துராமன் அவர்கள் 25 சிறுகதைகளிலும் வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை,மனிதநேயத்தை ,இரக்க உணர்வை  விதைத்து உள்ளார், பாராட்டுக்கள்.

கருத்துகள்