இசையை மொழிபெயர்க்கும் புல்லாங்குழல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சுபி. முருகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




இசையை மொழிபெயர்க்கும் புல்லாங்குழல் !

நூல் ஆசிரியர் : கவிஞர் சுபி. முருகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வாசகன் பதிப்பகம், 167, ஆவ்ற் காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
96 பக்கங்கள் விலை : ரூ.80.
******
      “நல்ல எழுத்துக்கு விளம்பரம் தேவையில்லை, அது தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என்று சொல்லப்படுவதுண்டு. அது முற்றிலும் உண்மை தான்”.
      பதிப்புரையில் இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் எழுதியுள்ள வைர வரிகள் இந்த நூலிற்கும் பொருந்தும்.
      ஹைக்கூ கவிதையை பரவலாக்கிய கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை, அருவி இதழ் ஆசிரியர் காவனூர் ந. சீனிவாசன் அவர்களின் அணிந்துரை, அரும்பு இளையோர் மாத இதழ் ஆசிரியர் ஆ. சிலுவை முத்து அவர்களின் வாழ்த்துரை நூலாசிரியர் கவிஞர் கபி. முருகன் அவர்களின் என்னுரையும் நூலிற்கு வரவேற்புத் தோரணங்களாக அமைந்துள்ளன.
      நூல் ஆசிரியர் கவிஞர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சே.செட்டியள்ளி என்ற கிராமத்தில் பிறந்து முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியத்திலும் தடம் பதித்து வருகிறார், பாராட்டுக்கள்.
      ஆறிலிருந்து அறுபது வரை, எல்லா வயதினரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்று ஹைக்கூ வடிவம் மரபு புதிதை விட ஹைக்கூ வாசகர்கள் வட்டம் அதிகம்.  சொல்ல வரும் கருத்து நீட்டி முழக்கி வாசகனின் நேரத்தை வீணடிக்காமல் சில வினாடிகளில் சிந்தையில் சிறு மின்னலை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதை.  ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடும் வேளையில் வாசகர்கள் கொண்டாடும் விதமாக வந்துள்ளது நூல். 

நூலின் பெயரே சற்று நீளமாக இருந்தாலும் கவித்துவமாக உள்ளது, பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிஞர் சுபி. முருகன் ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து வருகிறேன். மொத்தமாக நூலைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.
என்ன தடை போட்டும்
நிறுத்த முடியவில்லை
அவளின் நினைவுகள்!
என்னை மறந்து விடு என்று காதலி சொன்னாலும் காதலனால் மறக்க முடிவதில்லை. முயன்றுப் பார்த்து தோற்று விடும் நடப்புகளை ஹைக்கூ கவிதையாக வடித்துள்ளார்.
      காற்றால் நிறைந்திருக்கிறது
      பசியால் துடிக்கும்
      பலூன் விற்பவனின் வயிறு!
வறுமையில் வாடும் ஏழையின் உணர்வைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.
      கோலம் போடாத
      புள்ளிகள் கூட அழகு தன்
      புள்ளிமான்!
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர் மனதில் புள்ளி மான் வந்தே தீரும்.  படைப்பாளி உணர்ந்த உணர்வை கவிதையினைப் படிக்கும் படிப்பாளிக்கும் உணர்த்துவதே ஹைக்கூ.
தொலைந்து போயி
      பாரம்பரிய விளையாட்டுகள்
      கைபேசியோடு குழந்தைகள்!
உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த அரக்கன்கள் குழந்தைகள் வாழ்விலும் மாற்றம் வந்து, பழைய நல்ல விளையாட்டுக்கள் வழக்கொழிந்து, ஓடி விளையாட வழியின்றி, ஓரிடத்தில் அமர்ந்து அலைபேசியில் விளையாடும் அவலத்தை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ நன்று.
மொட்டுக்களைப் பார்க்கும் பொழுது
      மலர்ந்து விடுகிறது
      மனம்!
கவலையை மறக்கடிக்கும் ஆற்றல் மழலைக்கு உண்டு.  மழலையின் சிரிப்புக் கண்டு மயங்காதோர் யாருமுண்டோ? இறுக்கமான மனநிலையில் உள்ள மனிதர்களையும் மலர்வித்து சிரிக்க வைக்கும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு என்பதை மொட்டு மலர் என்ற சொல் விளையாட்டில் வடித்த ஹைக்கூ நன்று.
யாருக்கு சரியாகத் தெரியும்
      எத்தனை சிறகுகள்
      மனப் பறவைக்கு?
யாருக்கும் விடை தெரியாத கேள்வியைக் கேட்டு ஹைக்கூ வடித்துள்ளார். மனம் சில வினாடிகளில் அமெரிக்காவிற்குக் கூட பறந்து விடும். எத்தனை சிறகுகள் என்று யாரால் எண்ண முடியும்.
காடுகளை அழித்து விட்டு
      தேடுகிறார்கள்
      செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்.
கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யிற்கு அலைந்த கதையாக, காடுகளை எல்லாம் வெட்டி நாடாக்கி விட்டு மழை பொய்த்து வறட்சி காணுகின்றது உலகம்.  உலகில் செம்மையாக வாழ வழி செய்வதை விட்டு விட்டு வானத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழலாம் அங்கு தண்ணீர் உள்ளதா? என ஆராயும் வேலை வெட்டி வேலை என்பதை ஹைக்கூவின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.
உடைந்தாலும்
      ஒட்டிக் கொள்கின்றன
      காந்தத் துண்டுகள்!
உடைந்த காந்தத் துண்டுகள் ஒன்று சேர்வதை உற்றுநோக்கி மனிதர்களே மனதளவில் சண்டையிட்டு உடைந்து போனாலும் பின் மனிதாபிமானத்துடன் ஒன்றுசேர்ந்து விடுங்கள் என்பதை உணர்த்துவதாக நான் உணர்கிறேன்.
எவ்வளவு பேசியும்
      மிச்சமிருக்கின்றன
      சில வார்த்தைகள்!
காதலன் காதலி விடிய விடிய பேசினாலும் இன்னும் பேசிட வார்த்தைகள் இருப்பதாகவே உணர்ந்திடும் உணர்வை ஹைக்கூவாக வடித்துள்ளார்.
இறந்த பின்னும் கேட்கிறது
      மாட்டின் இதயத் துடிப்பு
      பறை!
அதிரும் பறையொலியைக் கேட்டு வடித்த ஹைக்கூ நன்று.  நூலாசிரியர் கவிஞர் சுபி. முருகன் அவர்கள் பள்ளி ஆசிரியர். மற்ற பள்ளி ஆசிரியர்கள் போல பள்ளி, வீடு என்று  நின்றுவிடாமல் அதையும் தாண்டி சமுதாயம் பற்றி சிந்தித்து வடித்த ஹைக்கூ கவிதைகள் நன்று. புல்லாங்குழல் இசைக் கச்சேரிக் கேட்ட மகிழ்வை இந்நூல் தந்தது, பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
ஓவியம், உள்அச்சு, வடிவமைப்பு, நூலின் அட்டை யாவும் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள வாசகன் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள். ஹைக்கூ நூல் போட்டியில் பரிசு பெறும் தகுதியுள்ள நூல்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்