தனித்தமிழ் வித்தகர்
பேராசிரியர் இ.கி. இராமசாமி !
- கவிஞர் இரா. இரவி!
******
வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தின்
தலைவராக இருந்தவர். அறிவார்ந்த மாணவர்களை
உருவாக்கியவர். பேராசிரியர் பணி ஆட்சிப்பணி, அரசு உயர்
அலுவலர் பணி வரை சென்றடைந்துள்ளனர் இவரது மாணவர்கள். பலரும் உயரம் செல்ல ஏணியாக இருந்து வருபவர்.
வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்து
வருபவர். இவர் மட்டுமல்ல, இவரது வாழ்க்கைத்துணை அம்மா பேராசிரியர் கசுதூரி
இராமசாமி அவர்களும் சுயமரியாதைக் கொள்கை வழி நடந்து வருபவர்.
பவள விழாக் காணும் பவள விழா நாயகர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள் பணி நிறைவு
பெற்ற பின்னும், எழுத்து, பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து
வருபவர்.
வேப்பந்தோப்பில் வருடா வருடம் திருக்குறள் ஆய்வு நூல் வெளியிட்டு வரும்
பொறியாளர் அகஉடை நம்பியின் தொகுப்பு நூலிற்கு கட்டுரைகள் பெற்று, தொகுத்து, பிழை
திருத்தி உதவி தமிழன்னைக்கு வருடா வருடம் அணிகலன் பூட்டிட உதவியாக இருந்து
வருபவர். பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு
பெற்றாலும் தமிழ்ப்பணியிலிருந்து என்றும் ஓய்வு பெறாதவர், "தமிழ்ப்பணி" மாத இதழிலும்
கட்டுரைகள் எழுதி வருபவர். யாரிடமும்
கோபம் கொள்ளாத மிகச்சிறந்த பண்பாளர்.
தமிழ் இலக்கியம் குறித்து ஆய்வு செய்த மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து பல
முனைவர்களை உருவாக்கி தமிழுக்கு உரம் சேர்த்ததுடன் முனைவர் பட்டம் பெற்றதால்
பேராசிரியர் பணி பெற்று பலர் வாழ்வில் உயர்ந்திடக் காரணமாக இருந்தார். பலரின் வாழ்வில் இன்பஒளி ஏற்றி வைத்த அறிவு
விளக்காக திகழ்ந்து வருபவர்.
இதய அறுவைச் சிகிச்சை செய்திட்ட போதும் அதுகுறித்த அச்சமின்றி தொடர்ந்து
பயணப்பட்டு இலக்கிய விழாக்களில் பேசியும் பங்குபெற்றும் வருபவர். திருவள்ளுவரின் மனைவி வாசுகி பற்றி பல கதைகள்
உண்டு. ஆனால் இ.கி. இராமசாமி என்ற திருவள்ளுவருக்கு வாய்த்தவர் கசுதூரி என்ற
வாசுகி என்றால் மிகையன்று. அய்யாவை
கண்ணின் மணி போல காத்து வருபவர்.
அய்யாவும், அம்மா சொல் மீறி எதுவும் செய்ய மாட்டார். வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் இலக்கிய
இணையர்.
அய்யா தூங்கும்போது அலைபேசியில் அழைத்தால், அய்யா தூங்குகின்றார், பிறகு
அழையுங்கள் என்று சொல்லி, அய்யாவின் நிம்மதியான தூக்கம் கலையாமல் பார்த்துக்
கொள்வார் கசுதூரி அம்மையார். வெளியூர்
பயணம் என்றால் அதற்கான ஏற்பாடுகளை அய்யாவிற்காக செய்து மகிழுந்துவில் வைத்து
கண்காணித்து உடன் செல்வார்கள்.
பெரும்பாலும் அய்யாவின் நிழலாகவே உடன் செல்வார். தந்தை பெரியாரை, அன்னை மணியம்மை காத்தது போலவே
அய்யா இ.கி. இராமசாமி அவர்களை காத்து வருபவர் அம்மா கசுதூரி அவர்கள். பவள விழா பாராட்டின் போது அம்மாவையும்
பாராட்டுவது அவசியம்.
மதுரை தல்லாகுளத்தில் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழறிஞர்கள் பிறந்த நாள்,
நினைவு நாள்களின் போது மாலையிட்டு மரியாதை செய்து வருகிறார். அங்கு நடப்பது சிறிய விழா என்ற போதும் முனைவர்
இ.கி. இராமசாமி அய்யா தவறாமல் வந்து கலந்து கொள்வார். வாழ்த்திப் பேசுவார்.
வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியின் தாளாளர் திரு. பி. வரதராசன் அவர்கள்,
புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் நடத்தும் மாதாந்திர விழாக்களிலும், அய்யா,
அம்மா இருவருமே இலக்கிய இணையராக வந்து விழாவை சிறப்பித்துச் செல்வார்கள்.
முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள் தனித்தமிழில் பேசுவதில் ஆழ்ந்த ஈடுபாடும்
புலமையும் மிக்கவர். சிலர் மேடையில்
பேசும் போது மட்டும் தனித்தமிழில் பேசுவாரகள்.
மற்றபடி பேசும்போது பிறமொழிச்சொற்கள் கலந்து பேசுவார்கள். ஆனால் அய்யா அவர்கள் பிறமொழிச்சொற்களின்
கலப்பின்றி நல்ல தமிழிலேயே நாளும் பேசி வருபவர்.
இவர் போலவே நாடு முழுவதும் தமிழர்கள் நாம் பேசத் தொடங்கினால் தமிழுக்கு
என்றுமே அழிவு என்பது வரவே வராது.
என்னுடைய நூல்களை வழங்கினால் தவறாமல் மதிப்புரை தந்து உதவுவார்கள். மரபுக்கவிதைகளின் மேல் மாறாத் அன்பு
இருந்தாலும் என்னுடைய ஹைக்கூ கவிதைகளையும் ரசித்துப்பாராட்டி எழுதிய உயர்ந்த
உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
முனைவர்
இ.கி.இராமசாமி அவர்கள் தலைமுடிக்கு சாயம் பூச விரும்பாதவர். எதிலும்
வேடம் போட விரும்பாதவர். இயல்பானவர். இவரின் தலைமுடி மட்டுமல்ல,
உள்ளமும் வெள்ளை தான். குழந்தை உள்ளத்திற்குச் சொந்தக்காரர். கோவையில்
வாழ்ந்து,
மதுரை வந்தவர் என்பதால் கோவையின் மரியாதை கலந்த, “வாங்க, போங்க” என்று நல்ல
உரையாடுபவர்.
பாவேந்தர் பாரதிதாசன் குறித்து நூல் எழுதி உள்ளார். ‘சோ’ பற்றிய நூல் எழுதிட முனைவர்
பட்ட மாணவருக்கு உறுதுணையாக இருந்து உள்ளார்.
திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் நான் எழுதி இருக்கிறேன். அதில் எழுத்துப்பிழை திருத்தி நூலாக வருவதற்கு உதவியவர்.
இரும்பு கூட சும்மா இருந்தால் துரு பிடித்து விடும். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர்,
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வது போல எப்போதும் இயங்கிக் கொண்டே
இருக்கும் மாமனிதர் இ.கி. இராமசாமி.நடமாடும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் நடத்திடும் கருத்தரங்குகளிலும், விழாக்களிலும் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் உரைவீச்சு மிளிரும். பலரின் அன்பைப் பெற்ற பண்பாளர் பகுத்தறிவாளர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களுக்கு பவள விழா வாழ்த்தை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறறேன்.
முனைவர் இ.கி. இராமசாமி அவர்களுக்கு மலர் வெளியிட்டு பவள விழா நடத்திட முனைந்துள்ள முனைவர்கள், பேராசிரியர்கள், அய்யாவின் மாணவர்கள் அனைவருக்கும் அன்பான பாராட்டு .குரு சீடர் உறவிற்கு நல் இலக்கணமாகத் திகழும் உங்களுக்கு வாழ்த்துக்கள் .பவள விழாவில் சந்திப்போம் .
http://eraeravi.blogspot.in/ 2015/01/blog-post_6.html
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக