கேள்வியும் நானே! பதிலும் நானே! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




கேள்வியும் நானே! 
பதிலும் நானே!

நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர்  வெ.இறையன்பு இ.ஆ.ப.!

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
   தினத்தந்தி பதிப்பகம், 86-ஏ, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை. பக்கம் : 240, விலை : ரூ. 180மதுரை  நியூ  செஞ்சுரி   புத்தக நிலையத்திலும் நூல் கிடைக்கின்றது .
******
      ‘ராணி வார இதழில் வாரா வாரம் ஆரவாரமாக வந்து கொண்டிருக்கும் ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்ற பகுதியில் ஒரு பகுதி மொத்தமாக நூலாக வந்துள்ளது.  வாரந்தோறும் படித்து விட்டு வலைப்பூவில் பதிவதுடன் மின்அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பி முகநூலிலும் பதிந்து வருகிறேன். பலத்த வரவேற்பு இணையத்தில் உள்ளது.  இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மைச் செயலர், முதுமுனைவர்  வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதியுள்ள அறிவார்ந்த நூல் இது.

      முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்விகள் கேட்டு பதிலும் தந்து நாளிதழ்களுக்கு அனுப்பி விடுவார்.  நிருபர்கள் கேள்வி கேட்கும் வேலையே இருக்காது.  கேள்வியிலும் கிண்டல் பதிலிலும் நையாண்டி எள்ளல் இருக்கும்.  ஆனால் நூலாசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் அறிவார்ந்து சிந்தித்து அவரே கேள்விகள் கேட்டு பதில்களில் எள்ளல் சுவை உள்ளது.  அதே நேரத்தில் பல புதிய தகவல்களும் உள்ளன.  வாழ்வியற் சிந்தனைகள் உள்ளன.  அறக்கருத்துக்கள் உள்ளன.

      வித்தியாசமான நூல் இது. சுவையாக உள்ளது. சுவாரஸ்யமாக உள்ளது.  படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நூல் அல்ல. மறு வாசிப்பு செய்து அறியை விரிவு செய்து கொள்ள உதவிடும் நூல்.  நூலில் உள்ள அனைத்து கேள்வி பதிலும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ!

      கேள்வி ; எது சிறந்த உதவி?

   பதில் ;செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது தான் சிறந்த உதவி.  ஒருமுறை சொன்னாலும் அதன் பலனை அனுபவித்தவர்களாக ஆகி விடுவோம்.  நாம் மற்றவர்களுக்குச் செய்த உதவியை உடனே மறந்து விடுவது மிக நல்ல பழக்கம்.

      உண்மை தான். ஒரு உதவியை நண்பருக்குச் செய்து விட்டு அதை ஒன்பது முறை சொல்லிக் காட்டும் நபர்களைப் பார்த்து இருக்கிறோம்.  செய்த உதவியை செய்தவுடன் மறப்பதே சிறப்பு.  ஆனால் உதவியை பெற்றவர் மறக்காமல் நன்றியோடு இருக்க வேண்டும்.

      இதைத்தான் உலகப் பொதுமறையில் திருவள்ளுவர் உரைத்தார்.

      நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
      அன்றே மறப்பது நன்று.     
            
செய்ந்நன்றி அறிதல் 108

     கேள்வி ; “துன்பம் வரும் போது சிரிக்க முடியுமா? 

    பதில் ; துன்பத்தை எண்ணி இடிந்து போகாமல் துணிவுடன் அதை எதிர்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது நம் சிந்தனை மழுங்கி விடாமல் கூர்மை அடைந்து, அந்தப் பிரச்சனை தீர்வதற்கான உபாயங்களும் தோன்ற ஆரம்பிக்கும் பல நெருக்கடியான நேரங்களில். துணிந்து நிற்பவர்கள் வெற்றி பெறுவது துன்பத்தை சோதனையாகக் கருதாமல் சவாலாக கருதுவதால் தான்”.

      உண்மை தான் துன்பம் வரும் போது சிரிங்க என்று வள்ளுவர் சொன்னதன் பொருள் வாய்விட்டு சிரிங்க என்ற பொருளில் அல்ல.  துன்பம் வரும் போது சோர்ந்து விடாமல் துணிந்து எதிர்கொள்ளுங்கள் என்பதே அதன் பொருள். 

 ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற திருக்குறளுக்கு விளக்கம் தருவது போன்ற கேள்வி பதில் மிக நன்று. தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக அமைந்து விட்டது பழமொழி.  கிராமங்களில் இன்றைக்கும் மேற்கோளாக பழமொழிகள் உதவுகின்றன.  ஹைக்கூ கவிஞர்களும் பழமொழிகளை ஒட்டியும் வெட்டியும் ஹைக்கூ படைத்து வருகின்றனர்.

    கேள்வி ;  பழமொழிகள் என்பவை?

 பதில் ;பழமொழிகள் நடைமுறை இலக்கியங்கள் ; ஞானப்பிழிவுகள்.  சாமானியர்களின் உதடுகளில் இருந்தும் உச்சரிக்கப்படும் உன்னதக் கவிதைகள்.

     கேள்வி ; பணம் பாதாளம் வரை பாயும் என்கிறார்களே! அப்படியென்றால்?

     பதில் ; அதிகம் பணம் சம்பாதிப்பவர்களும். குறுக்கு வழியில் ஈட்டுபவர்களும் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைப்பதற்காக அடித்தள  அறை’ அமைப்பாளர்கள் என்று பொருள்.

      எள்ளல் சுவையுடன் உள்ள இந்த பதிலில் அர்த்தம் உள்ளது.  வருமான வரி சோதனைகளின் போது ‘அடித்தள  அறைகள்’ உள்ளனவா? என்ற சோதனையும் நடந்து வருகின்றன.  இன்றைய நிகழ்வுகளையும் உணர்த்துவதாக உள்ளது.

    கேள்வி ;  வசந்த காலம் பள்ளியிலா? கல்லூரியிலா?

   பதில் ;   பள்ளியில் வனக்குதிரையாக வலம் வருகிறோம்.  கல்லூரியில் கடிவாளமிட்ட குதிரையாக களைத்து ஓடுகிறோம்.  எப்போதுமே வசந்தம் இடத்தில் இல்லை.

 நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.  புதிய தலைமுறை கல்வி வார இதழில் ‘அன்புள்ள மாணவனே   ’ என்ற அன்புத் தொடர் எழுதி வருகிறார்கள்.  அதில் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் மிக பயனுள்ள தகவல்களை உருக்கமாகவும் நெகிழ்ச்சியாக எழுதி வருகிறார்கள்.  இந்த நூலில் படித்த இந்த கேள்வி பதில் அந்தக் கட்டுரைகளை நினைவிற்குக் கொண்டு வந்தன.

     கேள்வி ; உறக்கம் எப்போது இனிமையாகிறது?

    பதில் ;  கடுமையாக உழைத்த பிறகு மேற்கொள்ளும் உறக்கம் இனிமையானதாக இருக்கிறது.

      உண்மை தான். ஒரு நாள் முழுக்க கடுமையாக உழைத்து விட்டால் நம்மை அறியாமலே நமக்கும் தூக்கம் வந்து விடும்.  இன்றைக்கு பலர் கவலையின் காரணமாக தூக்கமின்றி உடல்நலம் வாடி இழந்து வருவதைக் காண்கிறோம்.

      ஜென் தத்துவம் போன்ற மிக நுட்பமான அறிவார்ந்த தத்துவார்த்தமான கேள்வி பதில்களும் நூல் முழுவதும் உள்ளன. சில கேள்விகள் திரும்பவும் மனதில் வந்து போகின்றன.  படித்து முடித்து விட்டு அசை போட்டுப் பார்க்கும் விதமாக பல கேள்வி பதில்கள் உள்ளன.  அவற்றில் ஒன்று,

     கேள்வி ; பகல் உணர்த்து முரண்?
   பதில் ;  பகலில் வெள்ளையாக இருப்பவர்களின் நிழலும் கருப்பாகவே இருக்கிறது.

      நிழல் அனைவருக்குமே கருப்பு என்பது சமத்துவம் தான்.  ஆனால் மனம் கருப்பாக இல்லாமல் வெள்ளையாக இருக்க வேண்டும்.  புற அழகை விட அக அழகே முக்கியம் என்பதை உணர்த்திடும் நல்ல பதில். அறவழி நடப்பவர்கள் பொதுமக்கள் எல்லோரும் கேட்கும் கேள்வி ஒன்று.

   கேள்வி ; நம் கண் முன்னே அநியாயங்கள் ஜெயிக்கின்றனவே! 

 பதில் ;அநியாயங்களை மனிதர்களின் வெற்றி பெறச் செய்கின்றனர்.  நியாயங்களை இறுதியில் இயற்கை வெற்றி பெறச் செய்கிறது.

      உண்மை தான் அநியாயம் செய்பவர்கள் பெறும் வெற்றி வெற்றியே அன்று. இறுதியில் அவர்கள் படுதோல்வியைச் சந்திக்கிறார்கள் என்பதை இன்றும் நம் கண்முன்னே காணும் நிலைகளாக நிகழ்ந்து வருகின்றன. 

 ‘தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், கடைசியில் தர்மம் வெல்லும்’ என்பது உண்மை தான் என்பதற்கு வலுச் சேர்க்கும் நல்ல பதில்.  ஆனால் இன்று அநியாயம் செய்யும் அக்கிரமக்காரர்களும் ‘தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் கடைசியில் தர்மம் வெல்லும்’ என்று உச்சரித்து வருவது நமக்கு நல்ல நகைச்சுவையாகி வருகின்றது.

      மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களை கனவு காணுங்கள் என்றார். அதற்காக உழையுங்கள் கனவு நனவாகும் என்றார். நூலாசிரியருக்கும் ஒரு கனவு உள்ளது. அது என்ன கனவு என்று பாருங்கள்.

    கேள்வி ;  தங்களின் ஒரே கனவு?

    பதில் ;  எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இது இந்தியர்கள் செய்த பொருள்? என்று பெருமையாய்ப் பேசி நாம் செய்த பொருட்களை, நாம் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை, நாம் வெளிக்கொணர்ந்த விஞ்ஞானத்தை எல்லா நாடுகளும் பெருமையாகப் பேச வேண்டும் என்பதே அது.  அந்த அளவிற்கு இந்திய இளைஞர்கள் எல்லாவற்றிலும் உயர வேண்டும்.

      கனவு நனவானால் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் ஓங்கும்.  அப்போது இந்தியாவும் நல்லரசாகவும் வல்லரசாகவும் விளங்கும். அந்த நாள் இனிய நாள்.

 கேள்வி ;குற்றமுள்ள நெஞ்சு உண்மையிலேயே குறுகுறுக்குமா?

 பதில் ;முதல்முறை செய்யும் போது குறுகுறுக்கும், அதற்குப்பின் அதை செய்யப் பரபரக்கும்.

      குற்றம் செய்யாதிருப்பதே அறம். ஒருமுறை செய்து விட்டால் அதுவே பழகி பழக்கமாகி திரும்பத் திரும்ப செய்யத் தூண்டும். வாழ்வியல் நெறி போதிக்கும் விதமாக பல கேள்வி பதில்கள் உள்ளன.

  கேள்வி ;  நல்லவராக இருப்பதில் என்ன பயன்?

 பதில் ; நல்லவர்கள் பயனை எதிர்பார்ப்பதில்லை.  ரத்தினச் சுருக்கமான பதிலில் அறிவார்ந்த கருத்துக்களை அற்புதமாக எழுதி உள்ளார். குறுகிய பதில்களும் உண்டு. நீண்ட நெடிய பதில்களும் உண்டு. தகவல் களஞ்சியமாக உள்ளது.

      இலக்கிய உலகம் இந்த நூலைப் பாராட்டி வரவேற்கும்.  குறிப்பாக இளைஞர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.  விழிப்புணர்வு விதைக்கும் விதமாக உள்ளது. தந்தை பெரியார், சாக்ரடீஸ் போன்ற அறிஞர்கள், எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என கேள்விகள் கேட்கச் சொல்வார்கள். 

 நூல் ஆசிரியர் அவர்களும் தனக்குள்ளேயே ஏன்? எதற்கு? எப்படி? எதனால் ? என கேள்விகள் கேட்டு பதில்கள் தந்துள்ள அறிவுப் பொக்கிசம் இந்த நூல். பாராட்டுக்கள்.

தினத்தந்தி பதிப்பகம்  கேள்வி பதில்களுக்குப் பொருத்தமான வண்ணப்படங்களுடன் மிக நேர்த்தியான அச்சிட்டு உள்ளனர்  பாராட்டுக்கள் .

-- 

.

கருத்துகள்