நட்சத்திரத் தோரணங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. ராஜேந்திர பாபு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நட்சத்திரத் தோரணங்கள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. ராஜேந்திர பாபு !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
புதுகைத் தென்றல் வெளியீடு : 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை – 600 026. அலைபேசி : 98410 42949
பக்கம் : 96. விலை : ரூ. 70
******
‘நட்சத்திரத் தோரணங்கள்’ கவித்துவமான தலைப்பு. நூலாசிரியர் கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபு அவர்கள் பாரத மாநில வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் ஓய்வுக்கு தந்து கர்னாடக மண்ணில் பெங்களூர் நகரில் இயங்கி வரும் படைப்பாளி. நான் பெங்களூரில் பணிபுரிந்த 1-1/4 வருடங்களில் இருவரும் ஹைக்கூ குறித்து உரையாடிய உரையாடல்கள் மலரும் நினைவுகளாக வந்து போனது.
இந்நூலின் மகுடத்திற்கு வைத்திட்ட வைரக்கற்களாக தமிழ்த்தேனீ இரா. மோகன், பதிப்பாளர் புதுகைத்தென்றல் ஆசிரியர் மு. தருமராசன் ஹைக்கூ ஆய்வாளர் படைப்பாளி கவிஞர் அமரன் ஆகியோரின் கருத்துக்கள் மின்னுகின்றன.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் இயற்கையை ரசித்தல், இயற்கை பாடுதல் சிந்தனையில் சிறு மின்னல் உருவாக்குதல் என்ற ஹைக்கூ யுத்திகளை உணர்த்தும் விதமாக ஹைக்கூ கவிதைகள் உள்ளன, பாராட்டுக்கள்.
நூலாசிரியர் கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு அவர்கள் கண்ணதாசன் மீது ஆழ்ந்த பற்று மிக்கவர். காலந்தோறும் கண்ணதாசன் நூல் வடித்தவர். மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைக்கூ கவிதை என மூன்று வகை பாக்களையும் வடிக்கும் வல்லவர். எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் தனி முத்திரை பதித்து வருபவர். பணி ஓய்விற்குப் பின் வாழ்க்கையை அர்த்தமாக்கி ஆனந்தமாகி இலக்கியத்தில் லயித்து வருபவர்.
என்னுரையையே ஹைக்கூ வடிவில் மூன்று மூன்று வரிகளாக வடித்தத் அருமை.
ஞாயிற்றுக்கிழமை
வீட்டுக்குள் ஒரு நாளேனும்
மிதிபடாமல் சாலை!
வீட்டுக்குள் ஒரு நாளேனும்
மிதிபடாமல் சாலை!
ஞாயிற்றுக்கிழமை என்றால் பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுப்பது வழக்கம். அன்றைய தினமாவது மிதிபடாமல் இருக்கட்டும் சாலை என்று சிந்தித்தது வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.
நிதம் குடித்துப்
பழகி விட்டது
நெருப்புக் சூடாய் தேநீர்!
பழகி விட்டது
நெருப்புக் சூடாய் தேநீர்!
மிகவும் சூடாகக் குடிப்பது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ரசித்து ருசித்து குடிக்க நேரம் இல்லை என்று சுடச்சுட அருந்துவதை உற்றுநோக்கி அதையும் ஒரு ஹைக்கூவாக வடித்து விட்டார் பாருங்கள்.
கண்காட்சியில்
மலர்கள் எதிர்பார்ப்பு
மழலைப் பட்டாம்பூச்சிகள்!
மலர்கள் எதிர்பார்ப்பு
மழலைப் பட்டாம்பூச்சிகள்!
கண்காட்சியைக் காண பெரியவர்கள் வருவதை விட குழந்தைகள் வருவதையே மலர்கள் விரும்புகின்றன என்று மலர்களின் மனதைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார் பாருங்கள்.
துடுப்பு சுமையாச்சோ
தொலைந்து விட்ட
பிறை நிலா!
தொலைந்து விட்ட
பிறை நிலா!
ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டது போல கவிஞர் அமரன் இயேசுதாசின் பாடலான ‘துடுப்புக்கூட பாரமென்று தரையைத் தேடும் ஓடங்கள்’ என்ற பாடல் கவிஞர் கே.ஜி.இராஜேந்திர பாபுவிற்கு நல்ல ஹைக்கூ வழங்கி உள்ளது. பிறை நிலாவை துடுப்பு இழந்த படகாகப் பார்க்கும் கவிப்பார்வை நன்று.
இணைப்பறவைகள்
வளர்க்கின்றார்
விவாகரத்தானவர்!
வளர்க்கின்றார்
விவாகரத்தானவர்!
விவாகரத்தானவர் இணைப்பறவைகளைப் பார்க்கும் நேரமெல்லாம் இணையின் நினைவு வந்து விடும். இணைப்பறவைகள் ஏன் இப்படி நீ இணையைப் பிரிந்து வாடுகின்றாய் என்று குறிப்பை உணர்த்தும் இப்படி பல சிந்தனை விதைக்கும் ஹைக்கூ நன்று. முரண்சுவை ஹைக்கூ யுத்திகளில் ஒன்று.
சம்பாதிக்கத் தொடங்கியதும்
திருமணம்; பின்
சம்பாதிக்கத் தனித்தனியாய!
திருமணம்; பின்
சம்பாதிக்கத் தனித்தனியாய!
ஆனால் இன்றைய பெற்றோர்களோ சாதி, அந்தஸ்து, படிப்பு, ஊதியம் என்று பார்த்து அவசரப்பட்டு மணமுடித்து வைத்து விடுகின்றனர். இதனால் மணம் முடித்து விட்டு கணவன் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் வாழ்ந்து வருகின்றனர். பணம் ஈட்டுதல் தேவை என்ற போதிலும் சேர்ந்து வாழுதல் என்பது முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
வைகறை எழில்
வர்ணித்துக் கவிதைகள்
விழித்தால் எட்டு மணி!
வர்ணித்துக் கவிதைகள்
விழித்தால் எட்டு மணி!
மகாகவி பாரதி சொல்வான் கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்று. அதுபோல அதிகாலை எழுந்து வைகறை எழில் ரசியுங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு எழுதிய கவிஞன் எட்டு மணிக்கு எழுவது முறையன்று என்று உணர்த்துகின்றார், நன்று.
போற்றப்படும்
சாப்பிடும் வரை
வாழை இலை!
சாப்பிடும் வரை
வாழை இலை!
நெகிழியின் கேடு, புற்றுநோய் வரவழைக்கும் காரணி என்பதை உணர்ந்திட்ட காரணத்தால் இன்று உணவு விடுதிகளில் இலையில் போடுங்கள் என்று கேட்டும் காலம் வந்து விட்டது. இலையின் மதிப்பு கூடி விட்டது. ஆனால் சாப்பிட்டு முடித்த பின் இலை செல்லுமிடம் குப்பைத் தொட்டி தான். பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் மனிதர்களின் தன்னலமிக்க குணத்தையும் உணர்த்துவதாக உள்ளது.
ஆழமான வேர்
புயலிலும் சாயாது
அறிவு!
புயலிலும் சாயாது
அறிவு!
மரத்தை ஒப்பீடு செய்து அறிவு மிக்கவர்கள் எந்த துன்பத்திற்கு கவலை கொள்ள மாட்டார்கள் என்பதை குறிப்பால் உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள்.
தண்ணீர் ஊற்றாததால்
கோபித்துக் கொண்டதோ
வாடிய செடி!
கோபித்துக் கொண்டதோ
வாடிய செடி!
இது கற்பனை என்றாலும் உண்மை தான். பயிர்களுக்கும் உயிர்கள் உண்டு என்கிறது விஞ்ஞானம். கும்மிப்பாட்டு பாடி அந்தத் தண்ணீரை ஊற்றி வளர்க்கும் ‘முளைப்பாரி’ சில நாட்களில் ஓங்கி வளர்வதை இன்றும் காண்கிறோம்.
அது போல தண்ணீர் ஊற்றாவிட்டால் பயிர்கள் மனம் வாடி உடலும் வாடி விடுகின்றன என்ற கற்பனையும் உண்மை தான்.
மொழியில்லா
விழிப்பேச்சில்
விசித்திரக் கலை!
விழிப்பேச்சில்
விசித்திரக் கலை!
கண்ணதாசனின் தாசன் சீடன் ரசிகர் காதலைப் பாடாமல் இருப்பாரா? காதலையும் பாடி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து பாடுவார், விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு என்பார். காதலர்கள் இதழ்களில் பேசுவதை விட விழிகளால் பேசுவதே அதிகம் என்பதை ஹைக்கூவில் நன்கு உணர்த்தி உள்ளார்.
இனிய நண்பர் கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபு அவர்கள் பசுமை நகரமான பெங்களூரு மாநகரில் உள்ள மரங்களை, செடிகளை, மலர்களை ரசித்து வடித்திட்ட ஹைக்கூ கவிதைகள் மிக நன்று. ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில் நிறைவான ஹைக்கூ நூல் தந்தமைக்கு பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக