தினத்தந்தியின் பவள விழா விருதாளர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் ,எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .



புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ள கவிஞர் இரா .இரவியின் 17  வது நூலான ஹைக்கூ உலா விற்கு தினத்தந்தியின் பவள விழா  விருதாளர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் ,எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .
நூல் வெளியிடும் நாள் 17.12.2017

.
உணர்ச்சிக் கவிதைகள் !

******
கவிஞர் புலிப்பால் இரவி இலக்கியத்தின் இதயத் துடிப்பை நுகர்ந்து வாழ்பவர். தமிழ் இலக்கியத்தின் புதிய தரவுகள் குறித்தும், இலக்கியவாதிகள் குறித்தும் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். யாருடைய முகவரியையும் கை நொடிப்பதற்குள் கொண்டுவந்து கொடுத்து விடுவார்.  தினமும் ஏதேனும் எழுத வேண்டும் என்ற அடிப்படையில் எப்போதும் இயங்கி வருபவர்.
ஹைக்கூ உலா என்கிற  இந்நூலை தரமான கவிதைகளோடு உருவாக்கியிருக்கிறார். அவருடைய படைப்புகளில் தமிழ் குறித்த பற்றும், சமூகம் குறித்த சிந்தனையும், எளியவர்கள் பற்றிய பரிவும் எப்போதும் காணப்படும்.

கவிதையை அழகுசாதனமாகப் பயன்படுத்தாமல் கை வாளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். புரட்சிகரமான கருத்துகளை வாசிப்பதும், நேசிப்பதும் அவருடைய ஆர்வத்தின் தீவிரப் போக்குகள்.

இரவியின் ஹைக்கூ ஜப்பானிய வகையைச் சார்ந்தது அல்ல. அது தமிழுக்கான வடிவத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஜப்பானிய ஹைக்கூ உணர்தல் வகையைச் சார்ந்தது. இவரது ஹைக்கூ உணர்ச்சி வகையைச் சார்ந்தது. இதில் மெய்ஞானக் கூற்றை விட சமூகப் பார்வை தூக்கலாக இருப்பதைப் பார்க்கலாம். நினைத்து அசைபோடத்-தக்க வகையில் அமையாமல் பட்டாசுக்காயைப் போல வெடித்து சிதறும் அமைப்பில் இவை எழுதப்பட்டவை.

ஆப்பிரிக்கர்களை கறுப்பு என்று கூறும்போது அது வெறும் நிறத்தைச் சார்ந்தது அல்ல. இனத்தைச் சார்ந்தது என்பதை அவர்கள் வலியுறுத்துவதைப் படித்திருக்கிறேன். இரவியின் “

கிராமத்து முரண் 
நிறமோ கறுப்பு 
பெயரோ வெள்ளாடு ! 

என்ற கவிதையை வாசித்தபோது அது நினைவுக்கு வந்தது.
எடிசன் மின்விளக்கை அவரே கண்டுபிடிக்கவில்லை. அவர் அந்த கண்டுபிடிப்பில் மூழ்குவதற்கு முன்பு பலர் அதற்கான கருத்தாக்கத்தைத் தயாரித்து வைத்திருந்தார்கள்.  அந்த பெருமை சென்றது.

 எடிசன் பிறக்காவிடில் 
 இன்றும் இருட்டு தான் 
 உலகம் ! 

என்ற கவிதை அவருக்கும் டெஸ்லாவிற்கும் நடந்த ஆய்வுப் போராட்டத்தை முன்னிறுத்தும்.
அழகுணர்வு ததும்பும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

  நதி நடந்தால் 
  பளபளப்பானது
 கூழாங்கல் ! 

என்ற கவிதை அதற்குச் சான்று.
வைராக்கியத்தை வலியுறுத்தும் வகையில்

 நிலக்கரி வைரம்
 இரண்டும் 
மண்ணுக்கடியில் ! 

என்கிற கவிதை, மழை வெள்ளம் வந்தபோது சென்னையில் எல்லா பேதங்களும் விலகி மனிதநேயம் மட்டுமே கோலோச்சியது. முன்பின் தெரியாதவர்களை மக்கள் காப்பாற்றி தங்கள் வழிபாட்டுத் தலங்களில் இருக்க வைத்தார்கள்.  அதைக் குறிப்பிடும் வகையில் 

செத்துப் போனது 
 சாதிமத பேதம்
 மழை வெள்ளம் ! 
என்ற ஹைக்கூ. எப்போதும் சோதிடம், ஜாதகம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய வண்ணம் இருப்பவர் அவர்.

 கைரேகையில் இல்லை 
 கைகளில் உள்ளது 
 எதிர்காலம் ! 

என்ற ஹைக்கூ முயற்சியை முன்னிறுத்தும் வரிகள்.

வசப்படுவதில்லை 
 வாசிக்கும் அனைவருக்கும் 
 புல்லாங்குழல் !. 

புல்லாங்குழல் மட்டுமா, அனைத்துமே கையாளுபவர்களுடைய திறமையைப் பொறுத்தே அமைகிறது.

யாரும் வளர்க்காமலேயே
 வளர்ந்து விடுகின்றன 
 எருக்கஞ்செடிகள் !

என்றொரு ஹைக்கூ. களைகளை யாரும் வளர்ப்பதில்லை. அவை தாமாக வருகின்றன, வளர்கின்றன, பயிர்களின் விதைகளை விட அவற்றின் விதைகளுக்கு வீரியம் அதிகம். அதிக ஆண்டுகள் தாக்குப்பிடித்து சூழல் சாதகமாக மாறியதும் முளைத்து விடுகின்றன.

நடுவதோடு சரி 
 பராமரிப்பதில்லை 
 மரம் ! 

என்பது வெறும் எண்ணிக்கைக்காகவும், சாதனைகளுக்காகவும் நடத்தப்படும் மரம் நடு விழாக்களைப் பற்றி அங்கதச் சுவையோடு குறிப்பிடுகிறது.

மேலாண்மையில் சிவப்பு உஷ்ண அடுப்பு என்கிற கருத்தாக்கம் தண்டனை வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதை நினைவுறுத்துகிறது. 

தூக்கி எரியும்
 யார் தொட்டாலும் 
 மின்சாரம் ! 

என்ற கவிதை. சில நுணுக்கமான தரிசனங்களையும், காட்சிகளையும் கவிஞர் பதிவாக்கியிருக்கிறார்.

 காப்பாற்ற ஆசை 
 பல்லியின் வாயில் 
 பூச்சி !.

அறம் என்கிற தலைப்பில் மும்மூன்று வரிகளாக சிந்தனைகளைத் தொடுத்திருக்கிறார். அது ஹைக்கூ பூச்சரமாக உள்ளது.

இப்படி எடுத்தால் எளிதில் முடித்து விடுமளவு எளிமையாகவும், சுவையாகவும் இந்த நூலை உருவாக்கித் தந்திருக்கும் இரவிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்
இறையன்பு.

கருத்துகள்