காந்தியடிகளின் அகம் !
கவிஞர் இரா. இரவி.
******
இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் மிகச்சிறந்த நேர்மையாளர் காந்தியடிகள். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழியை போல காந்தியடிகள் மாணவனாக இருந்த போதே கல்வி அதிகாரி ஆய்வின் போது ஆசிரியர், சக மாணவனைப் பார்த்து, ‘கெட்டில்’ என்ற சொல்லை சரியாக எழுதச் சொன்ன போதும் பார்த்து எழுதிட மறுத்த நேர்மையாளர் காந்தியடிகள்.
காந்தியடிகளை ‘தேசப்பிதா’ என்று அழைத்தவர் நேதாஜி. தந்தை பெரியார், இந்த நாட்டிற்கே ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார். காந்தியடிகளின் அஞ்சல் தலையை உலக நாடுகள் முழுவதும் வெளியிட்டுள்ளன. காந்தியடிகளின் சிலை உலகம் முழுவதும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில், இரவில், குளிரில், பெட்டி, படுக்கை வீசப்பட்ட இடத்தில் இன்று நினைவுச்சின்னம் வைத்துள்ளனர்.
ஒபாமா அவர்களிடம் உங்களின் ஆசை என்ன? என்று கேட்ட போது, காந்தியடிகளுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றார். உலகளாவிய பல புகழ் காந்தியடிகளுக்குக் கிடைப்பதற்கு, அவருடைய நேர்மை, நாணயம், உண்மை, தூய்மையான அகம் இவைகளே காரணங்களாக அமைந்தன.
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பவும் மறுமுறை சென்றபோது, சிலர் அவர் மீது கற்களையும், முட்டைகளையும் வீசி தாக்கினார்கள். அவர்களை காவல்துறையினர் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். காந்தியடிகளிடம் என்ன தண்டனை தரலாம்? என்று கேட்ட போது,நீதிபதியிடம் மன்னித்து விட்டு விடுங்கள் என்றார். இது தான் காந்தியடிகளின் அகம். காந்தியடிகளின் கொள்கை, கோட்பாடு, வாழ்க்கை அனைத்தையும் ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். குறள் 314.
இந்தத் திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்தவர் டால்ஸ்டாய். காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர். திருக்குறளை படிக்க வேண்டும் என்பதற்காகவே காந்தியடிகள் தமிழ் மொழியைக் கற்றார். தமிழில் கையொப்பம் இட்டார். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், திருக்குறளைப் புரிந்து படிப்பதற்காக தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.திருக்குறள் என்ற ஒப்பற்ற இலக்கியம் அவரது வாழ்வில் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
காந்தியடிகள் மனம் என்ற அகத்தில், அகிம்சையையும், உண்மையையும் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். கொடியவ கோட்சே சுட்ட போதும், "ஹே ராம் " என்று சொல்லியே சாய்ந்தார்.சுட்டவனை வசைபாடவில்லை .
அழகிய முகத்திற்காக மக்கள் யாரையும் போற்றுவதில்லை. அழகிய அகத்திற்காகவே மக்கள் போற்றுகின்றனர். காந்தியடிகள் காலத்தில் முகஅழகோடு மட்டும் வாழ்ந்த யாரையும் இன்று மக்கள் நினைத்ததே இல்லை. ஆனால் காந்தியடிகளை மக்கள் போற்றிட காரணம் அக அழகே.
பொதுத் தொண்டுக்காக வந்த நன்கொடையாக 52 பவுன் நகையை கஸ்தூரிபாய் ஆசைப்பட்டு கேட்டபோது, தரமறுத்து இது பொதுநலத் தொண்டிற்காக வந்தது. இதனை நாம் எடுப்பது தவறு என்று எடுத்துக் கூறினார். கஸ்தூரிபாயும் மனம்மாறி 52 பவுன் நகை வேண்டாம் என்றார்.
காந்தியடிகள், தான் மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்களின் அகத்தையும் அழகாக்கினார். பலரை நேர்மையாளராக ஆக்கிய பெருமை காந்தியடிகளையே சாரும்.
தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் காமராசரிடம், அவரது அம்மா, மாதம் ரூ. 120 அனுப்புகின்றாய். ரூ. 150 அனுப்பு என்று வேண்டினார். எதற்காக என்றார், நீ முதல்வர் என்பதால் சிலர் என் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு சோடா, கலர் வாங்கிக் கொடுக்க செலவாகின்றது என்றார். வருபவர்களுக்கு சோடா, கலர் தர வேண்டாம், தண்ணீர் மட்டும் கொடு, நான் ரூ. 120 மட்டுமே அனுப்புவேன். கூடுதலாக 30 ரூபாய் அனுப்ப முடியாது என்றார் . இப்படிப்பட்ட முதல்வரை இதுவரை யாரும் கண்டதும் இல்லை, இனி காணப்போவதும் இல்லை.
காந்தியத்தை கடைபிடித்த பல நேர்மையாளரகள் வாழ்ந்த மண் நம் மண். மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன்ஜி அவர்கள். காமராசரின் அமைச்சரவையில் அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அமைச்சராகவும் இருந்தவர் கக்கன்ஜி அவர்கள். சாலையில் வந்து கொண்டிருந்த போது, வீட்டுக்காவலரைப் பார்க்கிறார். என்ன என்று விசாரிக்கிறார். 'அம்மா ரேசன் கடையில் அரிசி வாங்கி வரச் சொன்னார்கள்' என்றார். அப்படியே அதனை சாலையில் கீழே வையுங்கள் என்று சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்று மனைவியை மிகவும் கடிந்து கொள்கிறார். அரசு ஊழியரான காவலரை சொந்த வேலைக்கு நீ எப்படி அனுப்பலாம், அரிசி சாலையில் உள்ளது, நீ போய் எடுத்து வா, என்றார்.
காமராசர், கக்கன்ஜி போன்ற பல நேர்மையாளர்கள் உருவாவதற்கு அடித்தளமாக இருந்தவர் காந்தியடிகள். இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதை விட, அடைவதற்குச் செல்லும் வழி நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் எனக்குப் பிடிக்கும், காரணம், அவர் உலக அழகி என்பதற்காக அல்ல, அவர் கண்தானம் எழுதிக் கொடுத்துள்ளார் என்பதற்காக.
அன்னை தெரசா அயல்நாட்டில் பிறந்த போதும், இந்தியாவில் உள்ள அனைவரும் அவரை ‘அன்னை’ என்று அழைக்கின்றோம். காரணம் என்ன? அவரது முக அழகா? அல்ல அக அழகே காரணம். புறத்தோற்றத்தால் எவரையும் மதிப்பிடுவதை விடுத்து, அகத் தோற்றத்தால் மதிப்பிடுவதே சிறப்பாகும்.
கல்கத்தா வீதிகளில் அன்னை தெரசா கையேந்தி வந்த போது, கடையில் இருந்தவன் காறி உமிழ்ந்தான். நாமாக இருந்திருந்தால் ஓங்கி அறைந்து இருப்போம். ஒன்று நன்கொடை கொடு, இல்லையென்றால் ‘இல்லை’ என்று சொல், எப்படி நீ எச்சில் துப்பலாம் என்று சண்டையிட்டு இருப்போம். ஆனால், அன்னை தெரசா என்ன சொன்னார் தெரியுமா? துப்பிய எச்சில் எனக்குப் போதும், விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு என்ன தருவீர்கள்? என்றார், எச்சில் துப்பியவர் அன்னை தெரசாவின் பாதம் பணிந்து வணங்கி நன்கொடை வழங்கினார்.
இது தான் காந்தியடிகளின் அகம் வழிவந்த, திருக்குறள் வழி நடந்ததன் வெற்றி.அன்னை தெரசாவும் திருக்குறள் வழி வாழ்ந்தார் .
காந்தியடிகளிடம், இனிப்பு உண்ணும் குழந்தையைக் கண்டிக்க வேண்டும் ஓர் அம்மா அழைத்து வந்தார். ஒரு வாரம் கழித்து வரச் சொன்னர், ஒரு வாரத்திற்கு பின்னர் வந்ததும், குழந்தையிடம் அதிகம் இனிப்பு உண்ணக் கூடாது, உடல் நலத்திற்குக் கேடு என்று அறிவுரை வழங்கினார், அம்மா கேட்டார், இந்த அறிவுரை சென்ற வாரமே கூறி இருக்கலாமே? என்றார். அதற்கு காந்தியடிகள் சொன்னார், இனிப்பு உண்ணும் பழக்கம் எனக்கும் இருந்தது. இப்போது விட்டுவிட்டேன். அதனால் அறிவுரை வழங்கும் தகுதி வந்து விட்டது என்றார்.
மகாகவி பாரதியார், கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல, கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்று சொன்னார், பாரதியாரை இன்னும் உலகம் போற்றி வருவதற்குக் காரணம், எழுதியபடி வாழ்ந்தவர் என்பதால்.பாரதி மன்னரைச் சந்தித்து விட்டும் வரும்போதும் பொன்நகை வாங்கி வரமால் ,புத்தகத்தையே வாங்கி வந்தான் .தான் பசியோடு இருந்தபோதும் சிட்டுக் குருவிகளின் பசியாற்றி மகிழ்ந்தவன் .
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் கிடையாது. நான், புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் எதிராக பல கவிதைகள் எழுதி வருகிறேன். காரணம் எனக்கு அந்தத் தகுதி உண்டு என்பதால்.
தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்றத்தில் நீதிபதி காந்தியடிகள் அணிந்திருந்த தலைப்பாகையை எடுக்கச் சொன்ன போது எடுக்கவில்லை, பாரம்பரிய உடையை ஏன் எடுக்க வேண்டும் என்று சிந்தித்தார். அங்கே நடந்தது சிறுபான்மையினரின் உரிமைப் பிரச்சனை.
அதே காந்தியடிகள் 22-09-1921 அன்று மதுரை மேலமாசி வீதியில் அரையாடை அணிந்தார். என் நாட்டில் அடிப்படைத் தேவையான போதிய ஆடையின்றி ஏழை மக்கள் வாடும் போது எனக்கு ஆடம்பர ஆடை தேவை இல்லை என்று முடிவெடுத்தார், அது கொள்கை முடிவு. வட்டமேசை மாநாட்டிற்கே அரையாடையுடனே சென்று வந்தார். இந்த ஆடையோடு வருகிறீர்களே என்று கேட்டதற்கு, எனக்கும் சேர்த்து, உங்கள் மன்னர் ஆடை அணிந்துள்ளார் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
காந்தியடிகளைப் பார்த்து ஒரு குழந்தை தாத்தா நான் சட்டை வாங்கித் தருகிறேன் .போடுவீர்களா என்று கேட்டபோது ,எனக்கும் மட்டும் சட்டை தந்தால் பத்தாது .இந்த நாட்டில் சட்டை இல்லாத கோடிக் கணக்கான ஏழைகளுக்கு சட்டை வாங்கித் தந்தால் நான் சட்டை அணிகிறேன் .என்றார் .
காந்தியடிகளின் அகம் என்பது வாய்மையானது, தூய்மையானது, அழுக்கற்றது, அழகானது. காந்தியத்தை முழுமையாகக் கடைபிடிக்காவிட்டாலும், புலால் உண்ணாது இருப்போம் ,மது அருந்தாது இருப்போம் .இலஞ்சம் வாங்காதிருப்போம் .பொய் பேசாதிருப்போம் முடிந்தவரைப் பின்பற்றுவோம்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக