தமிழ்க் கல்வி என்றால் என்ன ? (5 தலைப்புகளில் காண்க)

ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதோடு தமிழ்க் கல்விக்கான இந்த நுட்பமான அடித்தளத்தையும் திட்டமிட்டு உருவாக்கினால் தமிழ் மொழியை உலகே கண்டு வியந்து வணங்கும்.

1. தமிழ் கற்றல் கல்வி
தமிழ் எழுத்துகளின் வரிவடிவம், ஒலிவடிவங்களை எளிய படிநிலைகளில் அறிமுகம் செய்தல். எளிய முறையில் மிகக் குறைந்த நாள்களில் தமிழ்ப் படிக்க வழி அமைத்தல். படித்தல், புரிதல், உள்வாங்குதல், செரித்தல், படைத்தல் - என்கிற படிநிலைகளில் தமிழ் மொழி கற்றலுக்கான அடிப்படைக் கூறுகளை வரிசைப்படுத்துதல். மொழிப் புலமை ஆக்குதல். பிழையின்றி பேசுதல் / எழுதுதல் - அயற்சொற்கள் கலக்காமல் பேசுதல் / எழுதுதல் - கவிதை, கதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு என்கிற படைப்பாக்க நுட்பங்களை வரிசைப்படுத்தி, அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தல். (காலம் : 10 ஆண்டுகள், திறன் : மரபுக்கவிதை, விமர்சனம், ஆய்வு என்கிற பன்முக ஆற்றல்களை அடைதல்)

2. தமிழ் வழிக் கல்வி 
அன்று வரிசைப் படுத்தியது 64 கலைகள் - இன்றோ 120 க்கும் மேற்பட்ட கலைகள் (கலைகளைப் பட்டியலிடுதல், கலைகளின் வரலாற்றைப் பாதுகாத்தல் (ஓலைச்சுவடி மற்றும் நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தல், வாழ்ந்த கலைஞர்களை பட்டியலிடுதல், படைப்பாக்கங்களைப் பாதுகாத்தல், கலைகளை ஆய்வு செய்த முனைவர்களின் ஆய்வுக் குறிப்புகளைச் சேகரித்துப் பாதுகாத்தல்) நம்மிடம் உள்ள கலைஞர்களின் வழி கருத்துருக்களை வரிசைப்படுத்தி - 10 பக்கங்களில் கலைகள் பற்றிய அறிமுகத்தையும், 150 பக்கங்களில் கலைகள் பற்றிய கருத்துருக்களையும் நூலாகத் தொகுத்தல். பாடவல்லுநர்களைக் கொண்டு கலைகளுக்கான பாடத் திட்டங்களை வரிசைப்படுத்தித் தொகுத்தல். ஒரு மாணவர் விரும்புகிற ஏதேனும் 5 கலைகளில் நுட்பமான அறிவும், அனைத்துக் கலைகளைப் பற்றிய பொதுவான அறிவும் அடைவதற்கான வழியை உருவாக்குதல். (5 ஆம் வகுப்பு முதல் கலைகளைக் கற்பித்தல்)

3. சூழலோடு பொருந்திய கல்வி 
தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது சூழலில் பல்வேறு மொழிகள் உள்ளன. தமிழை இலக்கண முறைப்படி நுட்பமாகக் கற்பித்தால் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் எளிமையாகப் படிக்கலாம் என்பதற்கான அடிப்படைய உருவாக்கி, அதன் வழி உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் எளிமையாகக் கற்பதற்குரிய வழிமுறையை வரிசைப்படுத்துதல். தமிழர்கள் வாழும் சூழலில் உள்ள ஏதேனும் இரண்டு மொழிகளில் நுட்பமும், தொடர்பு மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாகத் தமிழையும் படிப்பதற்குரிய பாடத்திட்டத்தை உருவாக்குதல். சூழலில் உள்ள இரண்டு மொழிகளைப் பேசவும், எழுதவும், புரிந்து கொள்வதற்குமான அடிப்படை ஆற்றலை அமைத்துக் கொடுத்தால்.

4. சிறப்புக் கல்வி 
ஒவ்வொரு உயிரியும் மகிழ்வாக வாழ்வதற்கே விரும்புகிறது. மகிழ்வான இந்த வாழ்க்கை, தமிழிய வாழ்முறையில்தான் உள்ளது என்பதற்கான அடிப்படையைத் தொகுத்தல். தமிழிய வாழ்முறைக்கான இயங்குமுறைகளை வரிசைப்படுத்தி, பயிற்சி கொடுத்து உலக மக்கள் அனைவரும் மகிழ்வாக வாழ வழி அமைத்தல்.

5. வரலாற்று அடிப்படைக் கல்வி 
தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, ஆளுமை, நுட்பம், என்கிற கருத்தாக்கங்களை வரிசைப்படுத்தி, வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்து வரிசைப்படுத்திய, கருத்துருக்களை இன்றைய நடைமுறையோடு பொருத்தி, இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் பதிவுசெய்வதும், பாதுகாப்பதும், பரவலாக்குவதற்குமான நுண்ணறிவைக் கற்பித்தல்.

அன்புடன் 
ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)
email : pollachinasan@gmail.com,  mobile : 9788552061,  8667421322

கருத்துகள்