காந்திக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி



காந்திக்கு ஒரு கடிதம்! 

கவிஞர் இரா. இரவி 
மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை 
மறுபடியும் நீ வருவாய் என நம்பிக்கை இல்லை ! 

ஆர்வம் மிகுதியில் சிலர் அழைக்கின்றனர் 
அண்ணலே நீ மறுபடியும் வர வேண்டாம் இங்கு ! 

செய்யக்கூடாது என்று சொன்ன ஏழு பாவங்களையும் 
செய்து வருகின்றனர் நாட்டில் உள்ள மக்கள் ! 

கொள்கையற்ற அரசியல் கூடாது என்றாய் 
கொள்ளையடிப்பதே கொள்கை என்றானது அரசியல் ! 

உழைப்பற்ற செல்வம் கூடாது என்றாய் 
உழைக்காமலே குறுக்குவழியில் செல்வம் சேர்க்கின்றனர் ! 

நெறியற்ற வாணிபம் வேண்டாம் என்றாய் 
நெறிதவறிய வாணிபமே எங்கும் நடக்கின்றது ! 

பண்பாடற்ற கல்வி கூடவே கூடாது என்றாய் 
படிக்கும் மாணவன் ஆசிரியையே கொல்கின்றான் ! 

மனசாட்சியற்ற மகிழ்ச்சி வேண்டாம் என்றாய் 
மனசாட்சியையே மதிக்காமல் மகிழ்ச்சியில் வாழ்கின்றனர் ! 

மனிதாபிமானமற்ற அறிவியல் கூடாது என்றாய் 
மனிதர்களே இயந்திரமாக மாறி வருகின்றனர் ! 

தியாகமற்ற வழிபாடு வேண்டாம் என்றாய் 
திரும்பிய பக்கமெல்லாம் வழிபாடு வியாபாரமானது ! 

நீ சொன்ன விரதங்களையும் கடைபிடிக்கவில்லை 
நீ சொன்ன பாவங்களையும் வாழ்வில் நீக்கவில்லை ! 

சமூக நல்லிணக்கம் வேண்டுமென வலியுறுத்தினாய் 
சாதிமதச் சண்டைகளால் சாந்தி காணாமல் போனது ! 

வெள்ளையரை வெளியேற்ற அகிம்சையால் போராடினாய் 
வெள்ளையர் கொள்ளையடிக்க சிவப்புக்கம்பள வரவேற்பு ! 

உப்புக்கு வரியா? என்று உணர்ச்சியோடு எதிர்த்தாய் 
உதடு பேசினால் இனி வரி வசூலிப்பார்கள் இங்கு ! 

உலக நாடுகள் எல்லாம் உன்னை உணர்ந்தது 
உலகமெங்கும் உன் சிலைகள் உன் தபால்தலைகள் ! 

பணத்தாளில் மட்டும் உன் படத்தை அச்சடித்துவிட்டு 
பாரதத்தின் தந்தை உன்னை மறந்து விட்டோம், வர வேண்டாம்! 

கருத்துகள்