தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! தீ தின்ற உயிர்! கவிஞர் இரா. இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

தீ தின்ற உயிர்!  கவிஞர் இரா. இரவி !


அல்வாவிற்கு பெயர்ப் பெற்ற ஊர் திருநெல்வேலி 
அல்லல் அடைந்ததில் பெயர்ப் பெற்றது நெஞ்சுக்கு வலி ! 

பார்த்தவர்கள் மனதில் பற்றியது தீ
பாவம் குடும்பமே தீயுக்கு இரையானது !

காவல் நிலையத்தில் புகாரளித்து பயனில்லை
கால்கடுக்க நின்று மனுநீதியில் மனுஅளித்தும் பயனில்லை !

அசலுக்கும் அதிகமாக வட்டி கட்டிய போதும் 
அடியாளாக வந்து காவலரே மிரட்டிய போதும் !

வாழ்க்கையை வெறுத்து தீக்குளித்து வெந்தனர்
வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கதையை முடித்தனர் !

சிறு பிஞ்சுக் குழந்தைகளும் தீயில் வெந்து 
சிதைந்து கரிக்கட்டையாகித் தரையில் விழுந்தனர் !

எந்தத் தீங்கும் செய்யாத குழந்தைகளுக்கும் 
வெந்தத் தீயை தந்தது சமுதாயக் கொடுமை !  

ஏவுகணைகள் ஏவிய போதும் ஆள்வோரே 
ஏழ்மையை  இல்லாமல் ஆக்குங்கள் அதுபோதும் !

அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யுங்கள்
அடாவடி கந்துவட்டி கயவர்களைக் கைது செய்யுங்கள் !

ஏழைகளுக்கு உதவிட வங்கிகளின் சட்டதிட்டங்களை
எளிமையாக்கி மனிதநேயம் பேணுங்கள் !

தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை
தீயவர்களைத் திருத்த முயன்றும் முடியவில்லை !

கந்துவட்டி தடுப்புச் சட்டம் சட்டமாகவே உள்ளது
கந்துவட்டியை ஒழிக்க சட்டத்தால் இயலவில்லை !

கந்துவட்டிக்காரனுடன் காவல்துறையும் கூட்டு
களங்கம் கற்பித்த காவலருக்குத் தரவேண்டும் வேட்டு !

வட்டிக்கு விடுவதே தீங்கு என்கின்றது நீதிநூல்
வட்டிக்கு வட்டி வாங்கும் கொடுமை தொடர்கின்றது !

மனிதனால் அச்சடிக்கப்பட்ட பணம் இன்று
மனிதனின் உயிரையே வாங்கி விடுகின்றது !

நெஞ்சு பொறுக்கவில்லை கண்டிட்ட காட்சி
நயவஞ்சகர்கள் நயநெஞ்சகர்கள் திருந்திட வேண்டும் !

டயனோசர் விலங்கு உலகில் இல்லை என்கின்றனர்
டயனோசரை விடக் கொடிய கந்துவட்டிக் கும்பலை ஒழியுங்கள் !

தீ தின்ற உயிர் திரும்ப வரப்போவதில்லை ஆனால்
தீ திங்க இனி ஒரு உயிரையும் தராமல் காப்போம்!

கருத்துகள்