மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மெர்சல்!

திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
******
      சுமாரான மசாலாப் படத்திற்கு அரசியல்வாதிகளும், மருத்துவர்களும் மிகப்பெரிய விளம்பரத்தை இலவசமாக வழங்கி விட்டனர்.  அப்பாவைக் கொன்றவனை திருப்பிக் கொல்லும் மிகப்பழைய கதைதான். மருத்துவம் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

      மூன்று வேடத்தில் வரும் விஜய்-க்கு மிகப்பெரிய வேறுபாடு நடிப்பிலும் இல்லை, ஒப்பனையிலும் இல்லை.  சிவாஜி, கமல் போன்றோர் மூன்று வேடம் என்றால் மூன்றையும் நடிப்பால் வேறுபடுத்திக் காட்டி இருப்பார்கள்.

      படத்தில் நல்ல கருத்து என்றால், தமிழரின் அடையாளம் வேட்டி என்பது, உலகமொழிகளின் தாய்மொழி தமிழ் என்பது, தமிழன் ஆளப்போகிறான் என்பது, ஒரு உயிரும் இனி போகக்கூடாது என்று சொல்லி, கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டுவது – என்று இப்படி சில அம்சங்கள் படத்தில் உள்ளது, பாராட்டுக்கள்.இனமுரசு சத்யராஜ் அவர்கள் காவல் அதிகாரியாக மிக இயல்பாக நடித்து உள்ளார் .பாராட்டுக்கள் .

      ஜிஎஸ்டி தொடர்பான கருத்து நன்று.  28 சதவீதம் நம் நாட்டில் வாங்குவது  உண்மை.  ஆனால் அதற்கு தகுந்தாற்போல மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்பதும் உண்மை.தாய்மார்களின் தாலியைப் பறிக்கும்   மதுவிற்கு  ஜிஎஸ்டி உண்டு, மதுவிற்கு  ஜிஎஸ்டி இல்லை என்பது தவறான தகவல், வசனகர்த்தா கவனமின்மை. பெட்ரோலுக்கு மாநில வரி, மத்திய வரி என பல வரிகள் உண்டு. ஆனால் ஜிஎஸ்டி இல்லை. அதனை படத்தில் சொல்லி இருக்கலாம்.  பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி போட்டுவிட்டு மற்ற வரிகளை நீக்கினால் விலை குறையும்.எல்லா விலையும் குறையும். 

    விஜய்  மருத்துவத்திலும்  விமான நிலையத்தில் ஒரு பயணியின் உயிர் காக்கும் விதத்திலும் குறைபாடு இருப்பதாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார்.

      ஒரு திரைப்படம் எடுக்கும் போது மருத்துவம், ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லும் போது, முழுமையாக அறிந்து கொண்டு, சரியாக கருத்தைச் சொல்ல வேண்டும்.

      சண்டைக்காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வழக்கம்போல் விஜய் தனி முத்திரை பதித்து உள்ளார். மூன்று வேடம் என்பதற்கு ஏற்ப மூன்று கதாநாயகிகளும் வந்து விழிகளுக்கு விருந்து வைத்துள்ளனர்.

      ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலரை விலை பேசி தனியார் மருத்துவமனைகள் சில, ஈர்க்கும் தகவலில் உண்மை உள்ளது.  மருத்துவம் என்பது தனியார் வியாபாரமாக, வணிகமயமாக மாறி விட்டது என்பது உண்மையே.  ஏழைகளிடமும் தனியார் மருத்துவமனைகள், பிணத்தை வைத்துக் கொண்டு, பணம் கட்டினால் தான் பிணம் தருவோம் என்று சொல்லும் அவலமும் நாட்டில் நடந்து வருவது உண்மையே!.இதற்க்கு தீர்வு மருத்துவமும், கல்வியும் தனியாரிடமிருந்து பறித்து அரசுடைமையாக வேண்டும் .அதனை படத்தில் சொல்லவில்லை .i

      எஸ்.ஜே.சூர்யாவை மருத்துவராக மனிதாபிமானமற்ற வில்லனாக காண்பித்துள்ளது. திரைப்பட மசாலாத்தனம் என்றாலும், இப்படி ஒரு மருத்துவர் இருப்பாரா ? என்ற வியப்பையே ஏற்படுத்துகின்றது.

      அரசு மருத்துவமனையை ஒட்டுமொத்தமாக குறை கூறி விட முடியாது.  தன்னலமற்ற தியாக உணர்வுடன், உயிர்ப்புடன் பல உயிர்களைக் காக்கும் உன்னத மருத்துவர்கள் உள்ளனர்.

      மருத்துவ பரிசோதனை என்பது ஒட்டுமொத்தமாக தேவையற்றது என்ற முடிவுக்கும் வர முடியாது.  புற்றுநோய் போன்றவற்றை மருத்தவ பரிசோதனை மூலம் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடர்ந்தால் இறப்பை தவிர்க்கலாம்.மட்டை விளையாட்டு வீரர் யுவராஜ் அதற்க்கு எடுத்துக்காட்டு .

      ஒட்டுமொத்தமாக மருத்துவ பரிசோதனையே பித்தலாட்டம் என்று சொல்வது தவறான கருத்து. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வசனம் வருகிறது.  மொத்தத்தில் மருத்துவத்தையே அரசுடைமையாக்கினார், தனியாரின் மருத்துவக் கொள்ளை இருக்காது என்பது கருத்து.

      படத்தில் புதுமை, புரட்சி என எதுவுமே இல்லை, இருந்தாலும் திரையரங்கில் மக்கள் கூட்டம் பெருமளவு இருக்கின்றது.  காரணம், அரசியல்வாதிகளும், மருத்துவர்களும் தந்த எதிர்ப்பின் காரணமாக, ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள், பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

      படத்தில் நீக்க வேண்டும் என்று சொன்ன காட்சிகளையும், வசனங்களையும், மக்கள் கட்செவி மூலம் பரப்பி, படமே பார்க்காதவர்-களையும் பார்க்க வைத்து விட்டனர்.

      தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டு வெளியான படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், காட்சிகளை நீக்க வேண்டும், வசனங்களை நீக்க வேண்டும் என்று சொல்வது அபத்தம். மக்களாட்சி என்று உலகளவில் மார்தட்டிக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது நன்றன்று.

      திரைப்படத்தை குடும்பத்துடன் எல்லோரும் பார்க்கலாம்.  ஆனால் மருத்துவர்கள் என்பவர்கள் உயிர் காக்கும் உன்னதப்பணி செய்பவர்கள். அவர்களை வில்லனாகப் பார்க்கும் பார்வையை மட்டும் மனதிலிருந்து நீக்கி விட்டு வெளியேற வேண்டும்.

      மேஜிக் என்ற பெயரில் பல நம்ப முடியாத காட்சிகள் உள்ளன. கேள்விகள் பல கேட்கலாம். ஆனால் பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படத்தில் அறிவார்ந்த கேள்விகள் அவசியமில்லை என்று நீக்கிவிட்டு படத்தை ரசிக்கலாம்.

கருத்துகள்