நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நகர்ந்து செல்லும்
நத்தைக் கூடுகள் !
நூல் ஆசிரியர் :
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நம்மொழி பதிப்பகம், 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை-600 011. பேச : 98409 12010, பக்கங்கள் 80, விலை : ரூ. 80
******
கவிஓவியா மாத இதழின் ஆசிரியர் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் உழைப்பாளி, படைப்பாளி. இனிய நண்பர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதியின் ஹைக்கூ நூல். இந்த நூலை கவிப்பேரசு வைரமுத்துவின் ஆசிரியர், பேராசிரியர், முனைவர், ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் இராம.குருநாதன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி, சாகித்ய அகாதெமி சார்பில் ஆயிரம் ஹைக்கூ நூலை தொகுத்து வழங்கிய தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன், கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை நிறுவி ஹைக்கூ நூல்களுக்கு பரிசு வழங்கி வரும் கவிஞர், முனைவர் கவிமுகில் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் வரவேற்பு தோரணங்களாக வரவேற்கின்றன.
நகர்ந்து செல்லும்
நத்தைக் கூடுகள்
பள்ளிக் குழந்தைகள் !
நூலின் தலைப்பிலான ஹைக்கூ மிக நன்று. புத்தகங்களே, பிள்ளைகளைக் கிழித்து விடாதீர் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதியது போல இன்றைக்கு குழந்தைகள் பொதி மூட்டைப் போல சுமந்து செல்லும் காட்சியை மனக்கண்ணில் காட்சிப்படுத்தி, வெற்றி பெறுகின்றார்.
துள்ளிக் குதிக்கின்றன
துடுப்பசைவில்
அடிபடாத மீன்கள் !
படகு சவாரியையும், துடுப்பு போடுவதையும் காட்சிப்படுத்தி விடுகின்றார். துடுப்பு போடும் போது அடிபடும் மீன்களும் உண்டு. தப்பித்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன என்று தண்ணீருக்கு அடியில் உள்ள மீன்களின் மனசைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார், பாராட்டுக்கள்.
வியர்வைத் துளி
மின்னுகிறது
ஈரச்சூரியன் !
இந்த உலகை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் உன்னத உழைப்பாளியின் உடல் வியர்வையில் மின்னிடும் சூரியனை ரசித்து ஹைக்கூவாக வடித்த மனசு ஹைக்கூ கவிஞனுக்கு மட்டுமே கைவரப்பட்ட ஒன்று.
யாருமற்ற சாலை
வழித்துணையாக வருகிறது
நிலா!
யாருமில்லை என்று தலைவன் சொன்னாலும், தலைவி மேலே நிலவு உள்ளது. எனது சகோதரி போன்ற புன்னை மரம் உள்ளது என்று சங்க இலக்கியத்தில் வரும் காட்சிப் போல யாருமில்லை என்று வருந்த வேண்டாம். வழித்துணையாக நிலவு வரும் என்கிறார் கவிஞர்.
உண்மை தான். நிலவை ரசித்துக் கொண்டு வந்தால் தனிமை நீங்கி துணை கிடைக்கும்.
நசுக்கப்பட்டன
நதி நீர்த் தடங்கள்
பெருமழை சூழ்ந்த நகரம்!
சென்னையின் பெருமழையை யாரும் மறக்க முடியாது. 'இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழிக்கும்'. என்று உணர்த்தியது. இனியாவது நீர்த்தடங்கள் மீதான ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். வருமுன் காக்கும் எச்சரிக்கை உணர்வு வேண்டும் என்பதை உணர்த்தியது.
தள்ளாடுகிறான்
குடிமகன்
தவிக்கிறது குடும்பம்!
ஆம். குடும்பத் தலைவனே, குடித்து விட்டு தள்ளாடும் போது குடும்பம் தவிக்கும் என்பது உண்மை. மதுக்கடைகளை மூடி மதுவிலிருந்து குடிகாரர்களை மீட்டெடுத்து குடும்பங்களை வாழ வைக்க வேண்டிய பொறுப்பு ஆள்வோருக்கு வரவேண்டும்.
விழித்துக் கிடக்கின்றன
பசித்த வயிறுகள்
உயரும் விலைவாசி!
நாடு முழுவதும் ஒரே வரி என்று சொல்லி விட்டு பல்வேறு வரி வசூலித்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் வரி, எதிலும் வரி, எங்கும் வரி என்றானது. இதனால் விலைவாசி ஏறிக்கொண்டே செல்கின்றது. ஏழைகளின் வாழ்வாதாரம் ஆட்டம் கண்டு வருவதை ஹைக்கூவாக வடித்துள்ளார்.நம்நாட்டில் தான் பெட்ரோல் விலைக்கு நிகராக வரி .மைய வரி மாநில வரி . பெட்ரோல் விலை ஏற ஏற எல்லாவிலையும் ஏறி வருகின்றது .
கோடீசுவரர்கள் மேலும் கோடீசுவரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் வழிவகுத்து வருகின்றனர்.
நட்பை பகையாக்கி
செய்கிறார்கள்
இலக்கிய அரசியல்!
இலக்கியவாதி என்பவன் மேன்மையானவனாகவும், மென்மையானவனாகவும், மனிதாபிமானம் மிக்கவனாகவும், பாரதி சொல்வது போல, எழுதுவது போலவே வாழ்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இன்று சில இலக்கியவாதிகள் இலக்கியத்திலும் அரசியல் செய்து நட்பை பகையாக்கிக் கொள்ளும் அவலத்தைச் சுட்டிக்காட்டும் ஹைக்கூ நன்று.!
இல்லாதவனிடம்
இருக்கிறது
வாக்குரிமை!
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு நம் நாடு, பெருமை மிக்க நாடு. ஆனால் இன்று ரூ. 500க்கும், ரூ. 1000க்கும் பணத்திற்கு வாக்குகளை விற்கும் அவலம் கண்டு உலகம் சிரிக்கின்றது. இனியாவது ஒப்பற்ற வாக்கை பணத்திற்கு விற்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்போம் என்ற விழிப்புணர்வை விதைத்து நன்று.
நசுங்குகிறான்
நகர வாழ்க்கையில்
கிராமத்து மனிதன் !
உண்மை தான். கிராமத்து மனிதர், நகரத்து முக்கிய வீதிகளில் நடந்தால் நசுங்கி விடுவான். மனிதத் தலைகள் மூச்சு முழுவதும் வெப்பமாகி விடுகின்றது. கூட்டம் என்றாலே வெறுப்பு வந்து விடும்.
விளை நிலம்
விற்பனைக்குத் தயாரானது
கவலையில் உழவு மாடுகள்!
கவலையில் உழவு மாடுகள்!
கரும்பு விற்ற பணத்தை மூன்று ஆண்டுகள் முடிந்த போதும் தராமல் இழுத்தடிக்கும் அவல நிலை. விவசாயத்தை வெறுத்து, விவசாயி விளைநிலத்தை விற்று விடுகிறான். உழவு மாடுகள் கூட கவலைப்படுகின்றன என்பதைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
இனிக்கும் கரும்பு நட்ட விவசாயியின் வாழ்க்கை கசப்பாகி விடுகின்றது என்பது கசப்பான உண்மை.
ஏறு பூட்டிய நிலம்
தார் சுமக்கப் போகிறது
தூக்கிலிட்டுக் கொண்டான் விவசாயி !
பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க தனியார் நிலங்களை தாரை வார்த்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் வெறுத்து போராடி முடியாத போது தற்கொலை செய்வது தொடர்கதையாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.
வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியடிகள் கிராமத்தை, விவசாயத்தை இந்தியாவின் முதுகெலும்பு என்றார். ஆனால் இன்று வெளிநாட்டு வெள்ளையர்களே எம் நாட்டை கொள்ளையடிக்க வருக, வருக! என்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
நூலாசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதிக்கு பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக