புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !



புத்தனைத் தேடும் போதி மரங்கள் !

நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி !

நூல் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி !
******
ஈழத்தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ் உணர்வுடனும், தமிழ் இன உணர்வுடனும் வாழும் உணர்வாளர்கள் புதுவைத் தமிழர்கள்.  புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் புதுவைத்தமிழ் நெஞ்சன்   ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் போலவே தமிழ் உணர்ச்சிப்பாக்கள் எழுதி வருபவர், அவரது மகள் தான் செல்வி தமிழ்மொழி.  புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப இவரும் தந்தையைப் போலவே துளிப்பாக்கள் எழுதி வருகிறார்.  அவரது நூலிற்கு அணிந்துரை எழுதிடக் கிடைத்த வாய்ப்பை பெருமையாகவே கருதுகிறன்.  நூல்ஆசிரியர் செல்வி தமிழ்மொழி சிறுவயது முதலே துளிப்பா எழுதி வரும் ஆற்றல் மிக்கவர்.  குடும்பத்தோடு துளிப்பா எழுதி வருகின்றனர்.  

 சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால், இதனால் சகலமானவர்களுக்கும் என்று நீட்டி முழக்கி விளக்காமல், சொற் சிக்கனத்துடன் வடிப்பதே துளிப்பா.  சுண்டக் காய்ச்சிய பால் போல, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல, கடுகு சிறிது காரம் பெரிது என்பது போல, தேவையற்ற பகுதிகளை நீக்கிட கிடைக்கும் அழகிய சிலை போல, துளிப்பாவிற்கு உடைய அத்தனை இலக்கணங்களும் பொருந்தும் விதமாக படைத்துள்ள துளிப்பா இலக்கியம் இந்த நூல். நூல் முழுவதும் உள்ள துளிப்பாக்களும் பிடித்து இருந்தாலும், பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு தோரண வாயிலாக இங்கே வைக்கின்றேன். 

குழந்தைகளின் கூட்டம்
இருப்பினும் அமைதி
மழலைப்பள்ளி!

குழந்தைகளைப் பார்த்து ஆசிரியர்  'அமைதி காக்க' என்று சொன்னால் போதும், அனைத்து குழந்தைகளும் அமைதியாகி விடும்.  குண்டூசி கீழே விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாகி விடுவார்கள்.  இந்த துளிப்பா படிக்கும் அனைவருக்கும் மனக்கண்ணில் பள்ளிக்கூடம் காட்சிக்கு வந்து விடும்.  இது தான் படைப்பாளியின் வெற்றி.  

சண்டையிட்ட அப்பா
அமைதியானார்
மகளதிகாரம்!

உண்மை தான்.  அம்மா சொன்னால் கேட்காதவர், மனைவி சொன்னால் கேட்காதவர், மகள் சொன்னால் கேட்டு விடுவார்.  இல்லங்களில் நடக்கும் காட்சியை துளிப்பாவாகக் காட்சிப்படுத்தி உள்ளார்.  அப்பா, அம்மாவுடன் சண்டையிட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது, அப்பா பேசாம இருங்கப்பா என்று மகள் அதிகாரம் செய்ததும் அன்பிற்குக் கட்டுப்பட்டு அப்பா அமைதியாகி விடுவது இயல்பு.  

நினைவஞ்சலிக் கூட்டத்தில்
இறந்து கொண்டிருந்தன
மலர்கள்.

உண்மை தான், நினைவஞ்சலிக் கூட்டத்தில் மலர்மாலையிட்டு மலர்வளையம் வைத்து வருந்துவது வாடிக்கை, ஆனால் படைப்பாளி இயற்கை நேசர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால் மலருக்காக வருந்தும் மனசு உள்ளது, பாராட்டுகள்.

நவீன 
தீண்டாமை
நீட் தேர்வு !

ஒரே தேர்வாம்
வேறு வேறு கேள்விகள்
நீட்!

அனிதாவின் உயிரைப் பறித்த கொடிய நீட் தேர்வின் ஊழலை உணர்த்தும் துளிப்பா நன்று.  நீதியரசரே கேள்வி கேட்டார், ஒரே தேர்வு என்றால் வடக்கிற்கும், தெற்கிற்கும் ஒரே கேள்விகள் தான் இருக்க வேண்டும்.  தெற்கே கடினமாகவும், வடக்கே எளிதாகவும் ஏன் என்று கேட்டு இருந்தார்.  வெளிநாட்டவர்களும் நீட் எழுதி உள்ளனர்.  அவர்களுக்கு முன்கூட்டியே ரகசியமாக கேள்விகளும் கிடைத்து விட்டன என்ற தகவலும் இப்போது வந்துள்ளது.  சமூக நீதிக்கு வைக்கப்பட்ட அணுகுண்டான நீட் தேர்வை  ஒழிக்க வேண்டும் . கல்வி என்பது மாநிலத்தின் வசமே இருக்க வேண்டும் .என்ற  உணர்வை தந்தது துளிப்பா.

மன நோயானது
குடி
கைகால் நடுக்கம்!

இன்றைய இளைய தலைமுறை குடிக்கு அடிமையாகி வருகின்றது.  பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் முதலில் பீரில் தொடங்கி பின்னர் பிராந்திக்கு அடிமையாகி வருகின்றனர்.  தடுக்கி விழுந்தால் மதுக்கடை. தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளை, நீதிமன்ற தீர்ப்பின்படி மூடிய கடைகளை நகரின் உள்ளே திறக்கும் ஆர்வத்தை விட்டு விட்டு மூடி இருக்கும் அரசுப்பள்ளிகளைத் திறக்க அரசு முன்வர வேண்டும்.  ஒரே ஒரு துளிப்பா, பல சிந்தனைககளை  விதைக்கின்றன, பாராட்டுக்கள்.

தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில்
குளிர் அறை !

நல்ல காற்றை நல்கும் மரங்களை வெட்டி, தோட்டங்களை அழித்து வீடுகளைக் கட்டி வருகின்றோம்.  குளிர்சாதனப்பெட்டி மூலம் வருகின்ற குளிர் நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். குளிர்சாதன மகிழுந்துகள் திடீரென தீப்பிடித்து உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன. இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைக்கும் துளிப்பா நன்று!

உதிர்ந்த இலை
தாங்கிப் பிடித்தது
குளத்தில் கல் !

துளிப்பா என்றால் இயற்கையை மட்டும் தான் பாட வேண்டும் சிலர் கொடி பிடித்து வருகின்றனர். துளிப்பா என்றால் இயற்கையையும் பாடலாம், எதனையும் பாடலாம் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது. இயற்கையைப் பாடுவதில் சப்பானியத் துளிப்பா கவிஞர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நமது தமிழ்த் துளிப்பா கவிஞர்கள். இயற்கையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர் செல்வி தமிழ்மொழி.

துளிப்பா நூற்றாண்டு நிறைவு விழாவில் இந்நூல் வெளியிடுவது மிகப் பொருத்தம். நூலாசிரியர் செல்வி தமிழ்மொழிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.  தொடர்ந்து சிந்தியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

கருத்துகள்