நன்றி .கலைச் சோலை இணையம்
நன்றி .கலைச் சோலை இணையம்

https://kalaisolai.com/2017/09/11/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/
.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய மலையகத் தமிழ் இலக்கிய ஆய்வரங்கம்
11 SEPTEMBER 2017KALAISOLAI
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 11.09.2017 அன்று ‘மலையகத்; தமிழ் இலக்கியம்| எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.


11.09.2017 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற இவ் ஆய்வரங்க நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆசுதிரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தமிழ்த்திரு.மாத்தளை சோமு அவர்கள், ‘மலையகத் தமிழ் இலக்கியம்| குறித்து தொடக்கவுரை ஆற்றினார்.

அவர்தம் உரையில், “மலையகத் தமிழ் இலக்கியத்தை தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பரவலாக்க வேண்டும். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக, தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்கே தங்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் இவற்றை தங்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்கிடையே தக்க வைத்துள்ளனர். இலக்கியம் என்பது மனிதனின் வாழ்வியலைச் சித்தரிப்பது. அது வெறும் கலையல்ல. கலை என்பது மக்களுக்காக. அப்படியெனில் இலக்கியமும் மக்களுக்கானவையே. இலக்கியம் என்பது மக்களுக்காகப் படைக்கப்பட வேண்டும்.

மக்களுக்கான இலக்கியங்களே நிலைத்து நிற்கின்றன. அவ்வகையில் மலையகத் தமிழ் இலக்கியம் நாட்டார் பாடல்கள், சிறுகதை, புதினம், கவிதைகள் என பல இலக்கிய வடிவங்களில் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மலையக இலக்கியங்களில் மலையக மக்களின் பண்பாடு, கலை, உணர்வு, அவர்களின் வலி, வேதனை அனைத்தையும் தாங்கி வெளிவந்துள்ளன. அவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ‘சிறுகதை நாவல் பரவலான இலக்கியங்கள்| எனும் தலைப்பில் தெளிவத்தை ஜோசப் அவர்களும் ‘மலையக நாட்டார் பாடல் இலக்கியங்கள்| எனும் தலைப்பில் திரு.மு.சிவலிங்கம் அவர்களும் ‘மலையகக் கவிதை இலக்கியங்கள்| எனும் தலைப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மல்லியப்பு சந்தி திலகர் அவர்களும்; ‘மலையக நாடக அரங்கியல்| எனும் தலைப்பில் அ.இலட்சுமணன் அவர்களும் ஆய்வுரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து மாமதுரைக் கவிதைப் பேரவையினரின் கவிதைப் படைப்புகளும் நிகழ்த்தப்பட்டன. முன்னதாக உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையர் திருமதி ஜ.ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். ஆய்வரங்கத்தில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள் எனத் திரளானோர்;;; கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்