சங்க இலக்கியச் சாறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சங்க இலக்கியச் சாறு!
நூல் ஆசிரியர் :
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம் : 198, விலை : ரூ. 130. பேச : 044 24342810 / 24310769
***
அட்டைப்பட வடிவமைபில் உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நூலினை சிறப்பாகப் பதிப்பித்துள்ள வானதி பதிப்பகத்திற்கு முதல் பாராட்டு. நூலாசிரியர் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்களுக்கு இரண்டாம் பாராட்டு. வெற்றிக் கூட்டணியாக அமைந்து விட்ட காரணத்தால் தொடர்ந்து நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் , இலக்கிய உலகமும் நல்ல வரவேற்பை தந்துள்ளன.
பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் உள்ளது. பாராட்டுகள். அணிந்துரையின் முடிவுரையில் குறிப்பிட்டுள்ள முத்தாய்ப்பான வாழ்த்துரை.
“பேராசிரியர் மோகன் அவர்களின் தமிழ்ப்பணி வாழ்க’ இன்னும் இன்னும் நூல்கள் எழுதித் தகுதியான அதிக நூல்கள் படைத்த பேராசிரியர் என்னும் புகழைப் பெறத் தமிழன்னை அருள்புரிவாளாக”.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் எழுத்துக்கரங்கள் ஓய்வின்றி எழுதி எழுதி மேற்சென்று கொண்டே இருக்கின்றன, பாராட்டுகள்.
திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், ‘தமிழாகரர்’ பட்டம் வழங்கி வாழ்த்திய வாழ்த்துப்பாவும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளது சிறப்பு. மிக நல்ல வாழ்த்துக் கவிதை. முதல் நான்கு வரிகள் மட்டும்.
மாமதுரை ‘செந்தமிழ்த் தாய்த் தொட்டி’ லென்று
வரலாறு பேசும் அந்த மதுரை வாழும்
தேமதுரத் தமிழறிஞர் முனைவர் மோகன்
செவிமதுரத் தேன்பாய்ச்சும் பேச்சா ளர்காண்!
இந்த நூலை நான்கு பகுதிகளாக பிரித்து, தொல்காப்பியய் நெறி என்ற முதற்பகுதியில் 3 கட்டுரைகள், சங்க இலக்கிய மாண்பு என்ற இரண்டாம் பகுதியல் 6 கட்டுரைகள், திருக்குறள் திறம் என்ற மூன்றாம் பகுதியில் 3 கட்டுரைகள், உரைவளம் என்ற நான்காம் பகுதியில் 4 கட்டுரைகள் ஆக மொத்தம் 16 கட்டுரைகள் 16 செல்வங்கள் போல உள்ளன. படிக்க மனமகிழ்வைத் தருகின்றன.
'சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் ஆட்சி' என்ற முதல் கட்டுரையே முத்தாய்ப்பாக உள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு ஆற்றுப்படை, திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் உள்பட பல இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக்காட்டி விளக்கி உள்ளார். சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி பாரதியார் பாடல், ஜெயகாந்தனின் புதிய வார்ப்புகள் வரை தொல்காப்பியத்தின் தாக்கம் உள்ளது என்பதைப் படித்து வியப்புற்றேன்.
தொல்காப்பிய இலக்கண நூல் மட்டுமல்ல இலக்கிய நூலாகவும் திகழ்ந்து பல இலக்கிய நூல்களுக்கு கருப்பொருள் வழங்கி உள்ள உண்மையை நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறையின் தலைவராக பணியாற்றியவர் என்பதால், ஒப்பிலக்கியம் என்பது நூலாசிரியர் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர் சுவைத்த அல்வாவை அல்ல, அவர் சமைத்த அல்வாவை வாசகர்களுக்கு இலக்கிய விருந்து வைத்துள்ளார்.
தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்க வேண்டிய நூல் இது.
சங்க இலக்கியம் தொடங்கி சாமானியர் இலக்கியம் வரை பருவ இதழ்கள் அனைத்தும் வாசிக்கிறார் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். அவரது வெற்றிக்கும், சாதனைக்கும் உறுதுணையாக இருப்பது வாசிப்பே. இன்றைய இளைய-தலைமுறையினர் தினமும் சில மணி நேரம் வாசிப்பிற்கு ஒதுக்கினால் தான் முன்னேற முடியும், சாதிக்க முடியும் என்பதற்கு முன் உதாரணமாக விளங்குபவர் நூல் ஆசிரியர்.
சங்க இலக்கியத்தின் மாண்பு, “நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலிலும் ஆழம் மிக்கது” எனலாம்.
சங்க இலக்கியம் போன்ற அறம் சொல்லும் இலக்கியம், அன்பு சொல்லும் இலக்கியம், காதல் சொல்லும் இலக்கியம் வேறு எந்த மொழியிலும் இந்த அளவிற்கு இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. இந்த நூலினைப் படித்த பொழுது நாமக்கல் கவிஞரின் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற வைர வரிகள் நினைவிற்கு வந்தன.
தினமணி, கவிதைமணி தந்த தலைப்பிற்கு ‘என்ன தவம் செய்தேன்’ என்பதற்கு தமிழராகப் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேன்’ என்று எழுதிய என் கவிதையும் நினைவிற்கு வந்தன.
சங்க காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்பாற் புலவர்கள் இலக்கியத்தில் மேலோங்கி நின்றதை நூலில் நன்கு விளக்கி உள்ளார். ஆதிமந்தியார், பாரிமகளிர், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினியார், பொதும்பில் புல்லாநங்கண்ணியார் ஆகியோர் பாடிய பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கிய விதம் அருமை.
திறனாய்வாளர் ந. முருகேச பாண்டியன் அவர்கள் சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள் என்னும் தம் தொகைநூலுக்கு எழுதியிய முன்னுரையையும் மேற்கோள் காட்டி உள்ளார் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள்.
சங்க காலத்தில் இருந்த அளவிற்கு இன்று பெண்பாற்புலவர்கள் பெருகவில்லை என்பது உண்மை. கவிதை உலகில் பெண்கள் இன்னும் இன்னும் கூடுதலாக ஈடுபட வேண்டும், முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதமாகவே இந்த நூலை நான் பார்க்கின்றேன். வாருங்கள் பெண்களே முத்திரை பதிக்க.
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்களின் பொருத்தமான மேற்கோள்களை மேற்கோள் காட்டி கட்டுரையை கட்டு அமைத்த விதம் மிக நன்று. இதனை அணிந்துரை நல்கிய பேராசிரியரும் பாராட்டி உள்ளார்.
“ஒருவன் தமிழ் உரைநடையில் சிறந்த பயிற்சி பெற வேண்டுமெனில் உரையாசிரியர்களின் உரைநடைகளையும், உரைகளையும் படித்தே ஆக வேண்டும்” – தமிழண்ணல்.
தமிழண்னல் அவர்கள் சொன்ன கூற்றுப்படி இந்த நூல் படித்தால் போதும் தமிழ் உரைநடையில் சிறந்த பயிற்சி கிடைத்து விடும்.
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், சங்க இலக்கியம் படித்ததோடு நின்று விடவில்லை. சங்க இலக்கியம் தொடர்பாக தமிழ் அறிஞர்கள் எழுதிய உரை விளக்கங்களையும் படித்து ஒப்பீடு செய்கின்றார். அன்றைய மூதறிஞர்கள் எழுதியது மட்டுமன்றி இன்றைய பேராசிரியர்கள் சங்கத்தமிழ் தொடர்பான நூல் வெளியிட்டால் அவற்றையும் படித்து விடுகின்றார். பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, முனைவர் இர. பிரபாகரன் ஆகியோரின் நூலையும் மேற்கோள் காட்டி எழுதி உள்ளார்.
தமிழ்வளர்ச்சித் துறையின் செயலராக இருந்தவர் தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு உறுப்பினராக உள்ள முனைவர் மூ. இராசாராம் அவர்களின் மேற்கோள் நூலில் உள்ளது.
“கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல, மக்களின் விழிப்புணர்வைத் தூண்டி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்வது, நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும்” – மூ. இராசாராம்.
இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு நற்பண்புகளை ஊட்டுவதாக உள்ளது. சங்க இலக்கியம் என்னும் பொக்கிசத்தின் தங்க நாணயங்களை படிக்கும் வாசகர்களுக்கு நற்குணங்களாக வழங்கி உள்ளார், பாராட்டுகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக