நடிப்புச் சுதேசிகள் ! செய்வதறியார்! கவிஞர் இரா. இரவி !

நடிப்புச் சுதேசிகள் ! 
செய்வதறியார்!   கவிஞர் இரா. இரவி !

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்பது
அரசியல் என்று அன்றே சொன்னார் தந்தை பெரியார்!
உலக அளவில் தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றி
உளறி வருகின்றனர் வாய்க்கு வந்தபடி!
ஒரே கட்சியில் மூன்று அணிகள் உள்ளன
ஒவ்வொரு அணியிலும் உள்அணிகளும் உள்ளன !
உலகம் வியந்து பாராட்டிய மக்களாட்சியை
உருக்குலைத்து கேலிக் கூத்தாக்கி வருகின்றனர் !
அய்நூறு ஆயிரம் என்று சின்ன மீன்களைப் போட்டு
கோடிகள் என்னும் சுறாமீன் பிடித்து வருகின்றனர் !
எடுக்க எடுக்க கோடிகள் வந்து கொண்டே இருக்கின்றன
பிடிக்கப் பிடிக்க கோடிகள் பிடிபட்டுக் கொண்டே இருக்கின்றன !
இவர் அழைக்கிறார் அவர் அழைக்கிறார் என்று 
எங்கும் கூடுவது ஒரே கூட்டம் தான் !
இலவசம் இலவசம் என்று சொல்லி மக்களை
இளிச்சவாயர்களாக மாற்றி விட்டனர் !
ஐம்பூதங்களையும் கொள்ளையடித்து வருகின்றனர்
பெரிய மலைகளையும் தரைமட்டமாக்கி விட்டனர் !
கல்லை ஏற்றுமதி செய்து கொள்ளை அடிக்கின்றனர்
மண்ணைக் கடத்தி கோடிகள் கொள்ளை அடிக்கின்றனர் !
குதிரைபேர அரசியல் நடத்தி வருகின்றனர்
கூவத்தூரிலும் புதுச்சேரியிலும் கூத்தடித்து வருகின்றனர் !
அரசியல் என்றால் கெட்ட வார்த்தை என்றாக்கினார்கள்
அரசியல்வாதிகள் என்றால் கெட்டவர்கள் என்றாக்கினார்கள் !
ரத்தத்தின் ரத்தம் என்றும் உடன்பிறப்பு என்றும் சொன்னவர்கள்
ரத்தம் சிந்தி சண்டை இட்டு கேவலப்பட்டு வருகின்றனர்!
போட்டியிட்டு ஜால்ரா போட்டு தினந்தோறும்
பதவிக்காக பல் இழித்து கேவலப்பட்டு வருகின்றனர் !
மருத்துவப் படிப்பை அவாள் மட்டும் படிப்பதற்கு
முன்பு சமஸ்கிருதம் நுழைவுத்தேர்வில் வைத்தார்கள் !
தமிழர்கள் விழித்து சமஸ்கிருதம் நீக்கி விட்டதால்
தமிழர்கள் வீழ்த்திட நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர் !
அவாள் செய்திட்ட சதி தான் நீட் தேர்வு
அவாளைத் தவிர வேறு யாரும் படித்து விடக் கூடாது !
தமிழகத்திற்கு விலக்கு அளிக்கிறோமென நாடகமாடி
தமிழகத்திற்கு ஆப்பு வைத்து விட்டனர் !
கொலைக் குற்றத்திற்காக சாமியார் கைதான போது
கொஞ்சம் கூட வருந்தவில்லை தமிழக மக்கள் !
பாலியல் குற்றத்திற்காக சாமியார் கைதான போது
பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர் இங்கே !
வடக்கே ஒரு சாமியார் குற்றவாளி என்றதும்
வட இந்தியாவே தீப்பிடித்து உயிர்கள் பலியாகின !
பகுத்தறிவை ஊட்டிய மண் எங்கள் மண்
பாழ்போன மதவெறிக்கு இடமில்லை இங்கு !
அமைதி பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் சிலர்
அட்டூழியம் செய்து மதவெறி தூண்டி வருகின்றனர் !
அய்நூறு ஆயிரம் செல்லாது  என்று சட்டமிட்டு
அல்லல் பட வைத்தனர் மக்களை நாளும் !
தோல் நாணயம் வெளியிட்ட முகமது பின் துக்ளக்கை 
தள்ளி விட்டு தர்பார் நடத்துகின்றனர் நாளும் !
நடிப்புச் சுதேசிகள் பெருக்கி விட்டனர்
நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜியை வென்றுவிட்டனர் !
சிவாஜி திரைப்படத்தில் மட்டுமே நடித்தார்
சதா சர்வ சமயமும் அரசியல்வாதிகள் நடிக்கின்றனர் !
கேடிகளுக்கு நாட்டில் நல்ல மரியாதை தருகின்றனர்
கோடிகளால் ஆட்கள் விலை பேசப்படுகின்றனர் !
காந்தி காமராசர் கக்கன் இருந்த அரசியலில்
கண்டவர்கள்   எல்லாம் நர்த்தனம் ஆடுகின்றனர் !
மதத்தின் பெயரால் மலிவான அரசியல் நடத்துகின்றனர்
மனித நேயத்தை மறந்து மதவெறி போதிக்கின்றனர் !
சாதியின் பெயரால் சகதி அரசியல் செய்கின்றனர்
சகோதர உணர்வினை சாகடித்து வருகின்றனர் !
காலில் விழுந்து வணங்கவும் தயங்குவது இல்லை
காலை வாரி விடவும் யோசிப்பது இல்லை ! 
நானே பெரியவன் என்ற அகந்தையில் அரசியல்வாதிகள்
நாடு முழுவதும் பெருகி விட்டனர் இன்று !
பொதுநலம் புரிந்திட வந்தனர் அரசியலுக்கு அன்று
தன்னலம் குடும்பநலம் காக்கும் அரசியல் இன்று !
நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை இன்று
நயவஞ்சகரகளுக்கு மட்டுமே அரசியல் என்றானது இன்று !
அவர் இவரை ஊழல் என்கிறார், இவர் அவரை ஊழல் என்கிறார்
அரசியல் இன்று எங்கும் எதிலும் ஊழலின் ஆதிக்கமானது !
நேற்றுவரை ஊழல்வாதி என்று வசை பாடியவரோடு
இன்று கைகோர்த்து பதவியும் பெறுகிறார்கள் !
ஆடும் பொம்மைகளாக தமிழக அரசியல்வாதிகள்
ஆட்டி வைக்கும் மோடி மஸ்தான் வேலை அறிந்திலார்!
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அவர்கள்
தமிழகத்தில் காலூண்ட நாடகமாடி வருகிறார்கள் !
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும்
தமிழகத்தில் தாமரை மலரவே மலராது.

கருத்துகள்