நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





நச்சு சோறு !
நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

பவகணேஷ் வெளியீடு, 65, பாரதியார் தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.  பக்கம் : 24, விலை : ரூ. 15

******
பூமிக்கூடு என்ற நூலின் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை விதைத்த கவிஞர் பவகணேஷ் அவர்களின் அடுத்த படைப்பு நச்சுசோறு.  நூலின் தலைப்பே யோசிக்க வைத்தது. கையடக்க நூலில் கருத்தடக்க நூலாக வந்துள்ளது, பாராட்டுகள்.
திருக்குறளோடு நூலை தொடங்கி இருப்பது சிறப்பு.  கவிஞர் பெண்ணியம் செல்வ குமாரி அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.
நல்லதை உண்! நல்தை எண்! என்ற அடைமொழியை அணிந்துரையில் பாராட்டியது சிறப்பு.  இந்த வைர வரிகளை வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்து வந்தால் நோய் கவலை இன்றி இன்புற்று நீண்ட நாட்கள் வாழலாம்.  வாழ்நாளை நீட்டிக்க உதவிடும் வரிகள்.
குவியல் குவியலாய்
செத்துக் கிடக்கின்றன
மண்புழுக்கள்!
ஆம், உரம் என்ற பெயரிலும், பூச்சிமருந்து என்ற பெயரிலும் இரசாயணத்தைக் கொட்டிக் கொட்டி நிலத்தையே விசமாக்கி வருகின்றனர்.  மண்ணே விசமானதால் மண்புழுக்களும் செத்து மடிகின்றன.  வேளாண் விஞ்ஞானி மாமனிதர் நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயத்திற்க்கு விவசாயிகள் மாற வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கும் வைர வரிகள்.

யோசி !
இயற்கையை நாம் மதித்தால்
இயற்கை நம்மை காக்கும்!

நமக்காக மட்டுமல்ல இனி வருங்கால சந்ததிகளும் வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்கு இயற்கையை மதித்து நடக்க வேண்டியது மனிதர்களின் தலையாய கடமை என்பதை உணர்த்தி உள்ளார்.
பால்சோறும் அம்மாவும்!
நிலவைக் காட்டி அம்மா அன்பு ஊட்டுகையில் 
       ஆரோக்கியம் கூடி விடும், ஜீரணமும் ஆகி விடும்!
  
இன்று அடுக்ககங்களில் இயந்திர வாழ்க்கை வாழும் அம்மாக்களுக்கு நிலாச்சோறு ஊட்டி விட நேரம் இருப்பதில்லை.  ஆயாக்களிடம் விட்டுவிட்டு அலுவலகம் சென்று விடுகின்றனர்.  

உலகப்பொதுமறை வடித்த திருவள்ளுவர், குழல் இனிது, யாழ் இனிது என்றாற் போல, ‘கூழ் இனிது’ என்கிறார் கவிஞர் பவகணேஷ்.

கூழ் இனிது!
காசு பண்ண முதலில் பானைகள் உடைத்தான்
கூழினைப் பறித்து ஆரோக்கியம் கெடுத்தான்!

கூழ் என்பது ஏழைகளின் உணவு என்று சொல்லி, நகரங்களில் வாழ்பவர்கள் கூழ் குடிப்பதை விட்டு விட்டனர்.  அதற்குப் பதிலாக மதுக்கடைகளுக்குச் சென்று மது குடிப்பதை நாகரிகம் என்று கருதி உடலுக்கும், உள்ளத்துக்கும் கேட்டைத் தேடிக் கொள்கின்றனர்.  கூழ் என்பது மனிதனுக்கு நலம் பயக்கும் நல்ல உணவு என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோ பாய்ஷன், சிக்கன் ரையிசும், பிணத்துண்டுகளும், கொல்லும் எண்ணெய், சத்தமிடும் இறைச்சித் துண்டு – இப்படி பல்வேறு தலைப்பிட்டு இன்றைய நவீன உணவுகள் யாவும் நச்சு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.  உணவு பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் வைர வரிகள் நன்று.

நெகிழியின் தீமைகள் பற்றியும் விளக்கி உள்ளார்.  

        ஹைவே அக்கிரமக்காரர்கள் !
அவன் நிர்ணயிப்பது தான் விலை
மனசாட்சி! சோற்றில் கிடக்கும் மயிரா போச்சு !

உண்மை தான். நெடுஞ்சாலைகள் வழியே நிறுத்தப்படும் உணவகங்கள் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை, விலையும் அதிகம், ஓட்டுனர், நடத்துனர் இருவருக்கு இலவசமாக உணவு தருவதற்காகவே எல்லோருடைய உணவிலும் விலையை ஏற்றி வைத்து விடுகின்றனர். கவிஞர் பவகணேஷ் ஆதங்கத்தை கடுமையாக பதிவு செய்துள்ளார்.

இன்றைய இளையதலைமுறையினர் குளிர்பானத்துக்கு அடிமையாகி விட்டனர்.  உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்துவது போலவே குளிர்பானம் அருந்துகின்றனர்.  குளிர்பானம் அருந்துவது உடலுக்கு கேடு தரும் என்பதை அவர்கள் உணரவில்லை.

        இட்லியும் கோலாவும்!
மூளைச்சலவையின் உச்சபட்சம்
டீக்கடை விளம்பரங்களில், ‘இட்லிக்கு ஜோடி கோக்’.

பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது போல தமிழக வணிக நிறுவனங்களில், தமிழக வீதிகளில் தமிழ் தான் இல்லை என்பது இன்றைக்க்கும் வருத்தம் தரும் தகவல்.  

தமிழ் உணவும், தமிழுணர்வும்
‘சாப்பாடு தயார்’ என்கிற பலகை
எப்போது ‘மீல்ஸ் ரெடி’ ஆனதோ, அப்போதே
தமிழனுக்கு சூடு சுரணை குன்ற ஆரம்பித்து விட்டது.
விளம்பரங்கள் பார்த்து அயல்தீனி உண்டதில்
விபரீதங்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டன!

பிடித்த நடிகனோ, நடிகையோ விளம்பரத்தில் வந்தால்  அந்தப் பொருள் நல்லதா? கெட்டதா? என்று பகுத்தறிந்து பாராமல், கண்டவை வாங்கி உண்டு புதிய புதிய நோய்களை வரவழைத்துக் கொள்கின்றனர்.
எண்பது வயதில் கண்ணாடி இன்றி படிக்கும் முதியவர்கள் உள்ளனர்.  எட்டு வயதில் கண்ணாடி இன்றி படிக்க முடியாத குழந்தைகளும் இருக்கின்றனர்.  காரணம், அன்றைய உணவு நலம் தந்தன, இன்றைய உணவு நோய்களைத் தருகின்றன.
உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள்.  உணவு உண்பதில் கவனம் செலுத்தி, நல்ல உணவை உண்டு வந்தால் நலமாக நீண்ட நாட்கள் வாழலாம் என்ற விழிப்புணர்வை விதைக்கும் நல்ல நூல் இது.  நூல் ஆசிரியர் பவகணேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.  

வீட்டு உணவே அமிர்தம்.
என் அம்மா தயாரித்து பரிமாறும்
இட்லி போல இனிதாவது எங்கும் காணோம் !
உண்மை தான்.  வீட்டு உணவு தான் அமிர்தம்.  அம்மாவின் கைமணத்திற்கு ஈடு இணை இல்லை. அய்யா அப்துல் கலாம் அவர்களும் அம்மாவின் சமையலை நேசித்தார்.

மைய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி, இன்று காபி குடித்தாலும் போட்டு விடுகின்றனர்.  பயந்தே பலர் உணவகம் செல்வதை விட்டு விட்டனர்.  நல்லது. உணவகத்தில் இட்லி வேக வைக்க துணிக்குப் பதிலாக  நெகிழி பயன்படுத்துகின்றனர்.  முடிந்தவரை உணவகம் செல்வதை தவிர்த்து நலமாக, மருத்துவச் செலவின்றி வளமாக வாழ அறிவுறுத்தும் நல்ல நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் அவர்களிடம் வேண்டுகோள் அடுத்த நூலில் ஆங்கிலச்சொற்களும் ,வட  சொற்களும்தவிர்த்து எழுதுங்கள் .  

கருத்துகள்