சுட்டு விரல் சொர்க்கம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





சுட்டு விரல் சொர்க்கம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : நிகழ் பதிப்பகம், சென்னை-50  பேச : 044 4951230
புத்தக தொடர்புக்கு : 98941 16580, 0422 4516580
70 பக்கங்கள் விலை : ரூ.50

*****
      திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது, பாராட்டுக்கள்.  காதல் கவிதைகள் என்றும் வரவேற்கப்படுகின்றன.  வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கும் கவிதைகளாக காதல் கவிதைகளே உள்ளன. இந்நூல் முழுவதும் காதல் கவிதைகள்.
      நூல் ஆசிரியர் கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி காதல் கவிதைகளை புரியாத புதிராக எழுதாமல் பொழிப்புரைம, தெளிவுரை தேவைஅல்லாத அளவிற்கு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருப்பதற்கு முதல் பாராட்டு.
      யாதுமாகி !
      உன் சுந்தர வதனத்திலும்
      சொக்குப்பொடிப்
      பேச்சிலும்
      கிறங்கி கிறுக்குப் பிடித்து விட்டது!
      யாதுமாகி தெரிகிறாய் எங்கும்!

காதலித்தவர்கள் கட்டாயம் உணர்வார்கள்.  காதல் உணர்வை அப்படியே கவிதை ஆக்கி இருப்பது சிறப்பு.  காதலால வரும் இன்பம் சொல்லில் அடங்காது.  காதலித்தவர்கள் மட்டுமே உணர்ந்திடும் உன்னத சுகம் என்பதை உணர்த்திடும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.

என்ன நிலை இது!
எங்கிருந்தாய் எத்தனை நாள்!
எப்படி என்னை
      எட்டிப் பிடித்தாய்
பட்டென மொட்டு வீழ்ந்த தாமரை
      பார்த்த சூரிய தரிசனம் நீ
தொடங்குகிறது வாழ்க்கை
      புதிதாய்
கூப்பிடு தூரத்தில் சொர்க்கம்!
      வாயில் சாவியுடன் நீ!

கூப்பிடு தூரத்தில் சொர்க்கம் உள்ளதாம், சொர்க்கவாயிலின் சாவியுடன் காதலன் காத்திருக்கிறாராம்.  நல்ல கற்பனை. ஆன்மீகவாதிகள் வானத்தில் உள்ளது சொர்க்கம் என்கின்றனர்.  நூலாசிரியர் கூப்பிடு தூரத்தில் மண்ணில் உள்ளது சொர்க்கம் என்கிறார்.
கண்டு கொள்
உன்னை நினைவுபடுத்தும்
      எல்லாவற்றையும் சேமிக்க ஆசை
ஒவ்வொன்றிலும்
      நீயே தெரிகிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
      கேட்கும் ஒலி எல்லாம்
பாரதியின் காதல் புரிகிறது. !

மகாகவி பாரதியாரின் காதல் வரிகளோடு காதல் உணர்வை கவிதைகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.

சின்ன சொர்க்கம்!
திணறடித்து திக்குமுக்காட
      வைத்தும்
ஆழ்ந்த சுவாசம் காட்டும் அந்த
      நேரத்தின் வாசனையில்
கலந்து கரைந்து கரைந்து
      போதும் இந்த சின்ன சொர்க்கம் !

வாழ்க்கையை ரசித்து, காதல் செய்து, அன்பு செலுத்தி வாழ்ந்தால் சொர்க்கத்தை மண்ணிலேயே காணலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

என்ன நிலை இது! என்ற கவிதை 14ஆம் பக்கத்திலும், 29ஆம் பக்கத்திலும் இருமுறை பிரசுரம் ஆகி உள்ளது, அடுத்த பதிப்பில் ஒன்றை நீக்கி விடுங்கள்.

தோள் சாய்த்துக் கொள்
துயில் மறந்த மழைஇரவு
      கொட்டும் மழையில் கொஞ்சமும்
      கரையாத நினைவுகள் சுமக்க
இலகுவாய்
      எடையற்ற பாரம் தான்
இறக்கி வைக்காதே
      இறுகப்பற்றி
தோள் சாய்த்துக் கொள்!

காதலியே காதலனை தோள் சாய்த்துக் கொள் என்று உரைப்பது வரம். கவலைகளைக் காணாமல் போக வைக்கும்.  அனுபவித்தவர்கள் அறிந்திடும் அற்புத சுகம்.  கொடி படர கொம்பு கிடைத்தது போன்றது காதலியின் ஆறுதல்.  அரவணைப்பு, கதகதப்பு.

துளிர்க்கட்டும் உயிர் !
கரிசனையை எடுத்துக்கொள்
      கைவிரலைக் கொடுத்தனுப்பு
நீ தொட்ட
      வாசனை நுகர்ந்து
துளிர்க்கட்டும் என்
      உயிர் மீண்டும் !

கற்பனை தான் என்றாலும், காதலியின் கோணத்திலிருந்து படித்துப் பார்த்தால் உண்மையான உணர்வு என்பது விளங்கும்.

காய்ச்சல் இன்று
தணலாய கொதிக்கும்
      உடலுக்கு தெரியும்
காய்ச்சல் என்று
      வேகிறதா குளிர்கிறதா மனதுக்கு
விளங்கவில்லை !
      தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள
உன் மீது
      வழக்கு உணடு
வாக்கு சாதுர்யத்தில் உன்னை
      வெல்ல முடியாது தான்!

காதலை மானே, தேனே, மயிலே, குயிலே என்ற பழைய சொற்களைப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக “தொடர்பு எல்லைக்கு அப்பால்” என்று அலைபேசியில் கேட்ட சொற்களைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. காதலன் பேச்கில் சிறந்தவன், அவனை வெல்ல முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது சிறப்பு.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் தலைவியின் கூற்றை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளன.  பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.

வீரன் தான் !
ஒற்றைச் சொல்லில் வீழ்த்தும்
      வீரன் தான் நீ
பத்ம வியூகத்துக்குள் வந்து விட்டாய்
      இனி திரும்ப முடியாது கள்வனே !

பத்ம வியூகம் என்ற புராண நிகழ்வை நினைவூட்டி காதலனை உள்ளத்தில் சிறை வைத்து விட்டதை கவிதை உணர்த்துகின்றது.  பாராட்டுகள்.

நீ தான் நான்
எத்தனை பொக்கிசங்களைப்
      பதுக்கி வைத்திருக்கிறாய் என்னுள்
எடுத்து வைத்து
      செல்வளிக்கிறாய் தாராளமாய்
எனக்கே பொறாமை
      என் மேல்
பங்கு கொடுக்கிறாய். இருந்தும்
      பாதி கூட நிறையவில்லை
கஞ்சப்பயல் நீ !
காதலின் கூடலை மிக கண்னியமாக, அதே நேரத்தில் மிக நுட்பமாக கொடுப்பதும், எடுப்பதும் காதலுக்கு அழகு என்ற விதத்தில் கவிதையில் உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள். காதலனை கஞ்சப்பயல் என்பதும் புதிய யுத்தி.

போக்கிரி தான்
உன்னை மறைக்க மட்டுமே
      சொற்களுக்கு
சிலம்பாட்டம்
முழுதாய்
      தெரியாமல் மூடி மூடி
மறைத்தும் ஒளித்தும்
      இருட்டடைப்பு செய்தாலும்
முகம் காட்டி விடுகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தில் உள்ள காதலன் முகத்தில் தெரிந்து விடுகிறான் என்கிறார், சிறப்பு.
தாம்பத்யம்!
நீ தலைவன் என்றானதினால்!
      நான் தலைவியானேன்
மற்றபடி உனக்கு மட்டுமே
      உரியவள் தான்
பெற்றவர்களிடமிருந்து
      அழகாய்
பிரித்து பதியம் செய்து விட்டாய்
      என் தோட்டத்தில்!
காதல் வயப்பட்டவுடன் இருபது ஆண்டுகள் வளர்த்த பெற்றோரைப் பிரிந்து காதலன் வசம் செல்வது காவியக் காலம் முதல் கணினிக் காலம் வரை நடக்கும் ஒன்று.  சங்க இலக்கியத்திலும் உண்டு உடன்போக்கு.  ‘பிரித்து பதியம் செய்து விட்டாய்’ புதிய சொல்லாட்சி.  பாராட்டுகள்.  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

.

கருத்துகள்