முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

முடிவு எடுத்தல் ! 

நூல் ஆசிரியர் : 
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! 

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968 
பக்கங்கள் : 30 விலை : ரூ. 50 
***** 
பொருத்தமான படங்கள், அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பளபளப்பான தாள்கள் என மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். 
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட 60 நூல்களில் “முடிவு எடுத்தல்” நூலும் ஒன்று. 
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், மேலாண்மை போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். கையடக்க நூலாக இருந்தாலும் கருத்தடக்க நூலாக உள்ளது. 
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதை எல்லாம் தாண்டி சிறந்த நிர்வாகி என்பதால் தாம் உணர்ந்தவற்றை பிறர் படித்துப் பயன்பெறும் வண்ணம் நூலாக்கி உள்ளார். 
நூலிலிருந்து சில துளிகள் இதோ! 
“முடிவெடுப்பதை நிறுவனங்கள் மாத்திரமே செய்வதில்லை, ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை முடிவெடுத்து கொண்டே இருக்கிறான். பிச்சைக்காரன் கூட, ‘யாரிடம் பிச்சை எடுக்கலாம்’ என்று முடிவெடுத்து தான் பிச்சை எடுக்கிறான். யார் பிச்சை போடுவார்கள் என்று அவனுக்குள் தீர்மானிக்கிறான். 
முடிவு எடுத்தலின் முக்கியத்துவத்தை நன்கு விளக்கி உள்ளார். தனியார் நிறுவனத்தில் ஊழல் செய்தவரை உடனடியாக பதவி நீக்க முடியும். ஆனால் அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழல் பணியாளர்களை அவ்வளவு எளிதாக பணி நீக்கம் செய்ய முடிவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக்காட்டி உள்ளார். 
“முடிவு எடுக்க முடியாத பணக்காரர்களை விட முடிவு எடுக்க முடிந்த வறியவர்களே வளமானவர்களாக வாழ்த்துப் பெற்றவர்கள். பெண்களின் போராட்டமெல்லாம் முடிவு எடுப்பதில் அவர்களுக்குப் பங்கு வேண்டும் என்பது தான்”. 
ஆணாதிக்க சிந்தனை காரணமாக ஆண்கள் அவர்களாகவே முடிவெடுத்து விடுகின்றனர். மனைவி, கணவன் நம்மிடம் கலந்து ஆலோசிக்கவில்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கு உண்டு. மனைவியிடம் கலந்து பேசி முடிவெடுத்தால் மனைவிக்கு மகிழ்ச்சி. கணவனுக்கும் மகிழ்ச்சி. குடும்பத்தில் சண்டை இருக்காது. அமைதி நிலவும். இதுபோன்ற வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக விளக்கிடும் நூல். 
“யாரோ எப்படியோ போகட்டும், நான் சாமானியன், எனக்கு முடிவெடுப்பது எப்படி முக்கியம்? என்று பலர் கேட்கலாம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஏதேனும் ஒரு வகையில் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர்கள் மட்டுமே உன்னதங்களை அடைய சம்மதங்களைத் தருகிறார்கள். ஒரே ஒரு முடிவால் சரிந்து விழுந்தவர்கள் உண்டு”. 
உண்மை தான், முடிவு எடுப்பது எப்படி என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. எனக்கு மதுரையிலிருந்து பெங்களூருக்கு இடமாற்றம் வந்து 1¼ வருடங்கள் சிரமப்பட்ட போது, விருப்ப ஓய்வில் சென்று விடலாம் என்று முடிவெடுத்தேன். எனது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போது மகனின் திருமண அழைப்பிதழில் உங்கள் பணியை அச்சிட வேண்டும் அதில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் நன்றாக இருக்காது என்றார். அவர் சொன்னதிலும் அர்த்தம் உள்ளது என்பதை உணர்ந்து விருப்ப ஓய்வு முடிவை கைவிட்டேன். தற்போது மதுரைக்கு இடமாற்றம் கிடைத்து வந்து விட்டேன். 
“முதலில் பிரச்சனையை அறிந்து கொள்வதும், ஆழமாய் யோசிப்பதும் முடிவெடுப்பதற்கு முதல் படி” உண்மை தான். நன்றாக யோசித்து சிந்தித்து முடிவெடுத்தால் நல்ல முடிவாக இருக்கும். அவசரப்பட்டு சிந்திக்காமல் எடுத்த முடிவிற்காக பின்னால் அதை நினைத்து நினைத்து வருந்த வேண்டிய நிலையும் வருவதுண்டு. 
சொந்த வீடு கட்டுவது எப்படி? அலுவலகம் நிர்வாகம் செய்வது எப்படி? தேர்வை எதிர்கொள்வது எப்படி? இப்படி பல எப்படிகளுக்கு விடை சொல்லும் விதமாக நூல் உள்ளது. 
திட்டமிடுவது எப்படி? விழா நடத்துவது எப்படி? கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? 
இந்த நூலில் பல உதாரணமாக நபர்களைக் காட்டி இருந்தாலும், அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாதது சிறப்பு. பெயர் குறிப்பிட்டு இருந்தால் சம்மந்தப்பட்டவர் படிக்க நேர்ந்தால் அவர் மனம் புண்படும் என்பதற்காக பொதுவாகவே எழுதியது சிறப்பு. 
துணிக்கடைக்கு சட்டை எடுக்கச் சென்று பலவிதமான சட்டைகள் எடுத்துக் காட்டியும் முடிவு எடுப்பதில் தாமதம் செய்யும் பலரை நாம் பார்த்து இருக்கிறோம். அவர்களைப் பற்றியும் நூலில் எழுதி உள்ளார். சட்டை தேர்ந்தெடுக்கும் முடிவில் சில சட்டைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் சிறப்பு. பல சட்டைகளிலும் ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் முடிவு எடுக்கத் தயங்குபவர்களாக இருக்கிறார்கள். சட்டைக்கே இப்படி என்றால் மற்ற முடிவுகள் பற்றி சொல்லவும் வேண்டுமா? 
சிலர் இலஞ்சம் பெற்று அவமானப்பட்டு மகளின் திருமணத்தை நிறுத்திய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளுக்கும் சில அறிவுரைகள் நூலில் உள்ளன. கட்சி நடத்துவது, கூட்டணி சேருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாவின் முக்கியத்துவமும் நூலில் உள்ளது. 
“முடிவு எடுப்பவர்கள் அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முடிவைத் தாங்கள் எடுத்து விட்டு, வேறு ஒருவரைப் பலிகடா ஆக்கும் நிலையை நாம் பார்க்கிறோம். துணிச்சலுடன், “நான் தான் முடிவெடுத்தேன்” எனச் சொல்லக் கூடியவர்களை பொதுவாழ்வில் சந்திப்பது அரிது. ‘புகழ் வந்தால் எனக்கு, பழி வந்தால் அடுத்தவருக்கு’ என்கிற சித்தாந்தத்திலேயே இயங்குபவர்கள் உண்டு” . 
‘செம்மொழி சிற்பப் பூங்கா’ முடிவு இரண்டே நிமிடங்களில் எடுத்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி முடிவு எடுப்பதில் உள்ள முக்கியத்துவத்தையும் தயக்கத்தையும் தெளிவாக விளக்கி உள்ளார். வாசகர்களாக நீங்களும் உடன் முடிவெடுத்து இந்த நூலை வாங்கிப் படியுங்கள்.

கருத்துகள்