உன்னை அறிந்தால் சகமனித உள்ளம் புரிந்தால் ! நூல் ஆசிரியர் : முனைவர் இரா.ப. ஆனந்தன் !



உன்னை அறிந்தால் சகமனித உள்ளம் புரிந்தால் !நூல் ஆசிரியர் : முனைவர் இரா.ப. ஆனந்தன் !******
வாழ்த்துரை கவிஞர் : இரா.இரவி, 
உதவி சுற்றுலா அலுவலர்www.kavimalar.com
******
      இனிய நண்பர் நூல் ஆசிரியர் முனைவர் இரா.ப.ஆனந்தன் அவர்கள் அயல்நாட்டில் பணி செய்து வாழ்ந்து போதும் தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக தொடர்ந்து எழுது வருகின்றார்.  இவரது முதல் நூல் : ‘ரசித்து வாழ வேணும், பிறர் ரசிக்க வாழ வேணும்’.  இரண்டாவது நூல் : ‘வேறுபட்ட மனிதர்களும், மாறுபட்ட கோணங்களும்’. மூன்றாவது நூல் : ‘பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்’.  மூன்றாவது நூல் வெளியீட்டு விழா, கும்பகோணத்தில் நட்சத்திர விடுதியில் ஒரு மாநாடு போல நடந்தது.  நானும் இலக்கிய இணையர் இரா. மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம் இராமனாதன் உள்ளிட்ட பலரும் சென்று வந்தோம்.  மறக்க முடியாத நிகழ்வாக மனதினில் பதிந்தது.
      இந்த நூல் நான்காவது நூல். நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது.  பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளை நினைவூட்டும் விதமாக நூல்களின் பெயர்கள் அமைந்துள்ளன.  கட்செவியில் நான் அனுப்பும் படைப்புகளைப் படைத்து விட்டு உடன் பாராட்டையும் அனுப்பி விடுவார்.  இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் இனிய இளவல்.  இந்த நூலில் முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன.  30ம் முத்திரைக் கட்டுரைகள்.  வாழ்வியல் கூறும் சிறந்த கட்டுரைகள்.
      உளவியல் சிந்தனைகள். வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது.  அலுவலக்த்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? வெளி உலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகவும், விரிவாகவும் எழுதி உள்ளார்.  இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல்.
      கட்டுரைகளின் தலைப்புகள் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்றா ஆவலைத் தூண்டும் வண்ணம் சூட்டி உள்ளார்.  பாராட்டுகள்.  பெண் பாதி ஆண் பாதி, நரை கூடிய கிழப்பருவ எதிர்பார்ப்பு, உறவு கொள்முதல், தன்னிறைவு, கேள்வியும் பதிலும் இப்படி மிகச் சிறப்பான தலைப்புகளில் கட்டுரைகள் வடித்துள்ளார்.
      முதல் கட்டுரையான ‘நோக்கமற்றும் பயணம் கொள்’ முடிவுரையிலிருந்து சில வரிகள்.
      “ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வடிவமைத்து வாழ்வதும் பயணிப்பதும் தவறல்ல.  இயந்திரத்தனமல்லாது இடையிடையே வரும் சிற்சில காரணமற்ற பயணங்களையும், பயணிப்பவர்களையும் அனுசரித்து ஏற்றுக் கொள்ள வேணும்.  சரியான புரிதலில் நோக்கமற்று சிறு-குறு விசயங்களின் தாக்கங்கள் நம்மை கட்டாயம் இலகுவாக்கும், பக்குவமாக்கும்”.
      மனிதர்கள் இயந்திரமாக வாழாமல் இயல்பாக வாழுங்கள்.  வாழ்க்கை இனிமையாகும் என்ற கருத்தை கட்டுரையில் நன்கு விளக்கி உள்ளார்.
      ‘யாரென்ன சொன்னாலும்’ என்ற இரண்டாம் கட்டுரையின் முடிப்பிலிருந்து சில துளிகள்.
      “எதற்கும் செவி மடுக்காத மேதாவித்தனமும், எல்லாவற்றிற்கும் செவிமடுத்து ஆடும் பத்தாம்பசலித்தனமும் என்றென்றும் இடும்பை தரும்”. செவிமடுப்பது நம் பிறவிக் குணமாகும். மற்றவரையும் அவரது உணர்வினையும் மதிக்கும் முதல்படியாகும்.  அதனை நம் வளர்ச்சிக்கும் இயன்றவரையில் யாரையும் பாதிக்காத வரையிலும் பயன்படுத்துவோமென உறுதி கொள்வது உகந்தது”.
      உலகப் பொதுமறையில் திருவள்ளுவர் கூறிய,

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பது அறிவு        (குறள் : 423)

திருக்குறளை வழிமொழிந்து கட்டுரைகள் வடித்துள்ளார். நூலாசிரியர் முனைவர் இரா.ப. ஆனந்தன் அவர்கள் கவிஞர் என்பதால் கட்டுரைகள் அனைத்தும் கவித்துவமாக உள்ளன.  பாராட்டுக்கள்.
      ‘வசீகரம்’ என்ற கட்டுரையில் உள்ள வைர வரிகள்.
      அடுத்தடுத்து தாயின் முகமும் குரலும் மொழியும் பரிட்சயமாகி ஆழ்மனதில் வேரூன்றி விருட்சமாகும். காலம் கடக்கையில் ஐம்புல உணர்வுகள் மேலோங்கி நிற்கும்.  பேரின்பம் இங்கே காணாமல் போகும். உலகை மறந்து உன்னை உணர்ந்து உண்மை அறிந்தால் மீண்டும் இங்கே பேரின்பம் பிரசவமாகும்.
தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கும் போதே தாய்மொழி, அதாவது தாய் பேசும் மொழி, கேட்கும் மொழி, கருவில் உள்ள சிசுவிற்கு பதிவாகும் என்ற அறிவியல் உண்மையை கட்டுரையில் உணர்த்தி உள்ளார். 
அதனால் தான் தேசப்பிதா காந்தியடிகள் தொடங்கி, கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், மகாகவி பாரதியார், மாமனிதர் அப்துல் கலாம் வரை அனைவரும் தாய்மொழிக் கல்வியே ஆரம்பக் கல்வியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய கருத்தை அறிவியல் உண்மையோடு வலியுறுத்தியது சிறப்பு.
உலகிற்கே பண்பாடு பயிற்றுவித்த தமிழகத்தில், முதியோர் இல்லங்கள் பெருகி வருவது வேதனையான ஒன்று.  முதியோரை எப்படி நடத்த வேண்டும் என்பதை மிக இயல்பாக விளக்கி உள்ளார்.  ‘நரை கூடிய கிழப்பருவ எதிர்பார்ப்பு’ கட்டுரையின் முடிப்பில் உள்ள முத்தாய்ப்பு வரிகள்.
“விலைஉயர்ந்த பொருட்களும் நிறைவான வசதிகளும், இன்னபிறவும் முதுமைக்கு மனநிறைவினைத் தர இயலாது.  அவர்களுடன் நாம் செலவிடும் காலமும், நிபந்தனையற்ற நம்முடைய அரவணைப்பும், அவர்களை சரிசெய்யக் கூடிய மருந்தாக இருக்கக் கூடும்.  புண்சிரிப்பும், உணர்ந்து கொடுக்கும் பாராட்டும், இறுதி வரை தொடர்ந்த மரியாதையும் அவர்களது உள்ளத்தை வருடி உட்சென்று, என்றும் அகலாத இடம் பிடித்து, அவர்கள் வாழ்ந்து சென்ற பின்னும் வாழும்’’.
தமிழ் பண்பாட்டையும், அறநெறிக் கருத்துக்களையும், உளவியல் கருத்துக்களையும் மிக இயல்பாக எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் இரா.ப. ஆனந்தன் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்