படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! எந்நாளோ? -கவிஞர் இனியன்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

எந்நாளோ?  -கவிஞர் இனியன்

                    கனடா : 22.08.2017.

தமிழர்கள் தமிழரிடம் தமிழ்ப்பேச
  தயக்கமற ஒழிவதுவும் எந்நாளோ?
அமிழ்தொத்த அருந்தமிழே அரியணையில்
  அமர்வதுவும் தமிழ்நாட்டில் எந்நாளோ?

தலைப்பெழுத்தைத் தவறாமல் தமிழிலேயே
  தமிழர்கள் எழுதுவதும் எந்நாளோ?
முலைப்பாலாய்க் கருதுகின்ற முத்தமிழை
  மூச்செனவே கொள்வதுவும் எந்நாளோ?

அழைப்பிதழைச் செந்தமிழில் அச்சிட்டு
  அழைக்கும்முறை வருநாளும் எந்நாளோ?
பிழைக்கவழி ஆங்கிலமே எனக்கருதும்
  பேதைமை ஒழிவதுவும் எந்நாளோ?

பெற்றவர்தம் குழந்தைக்குத் தனித்தமிழில்
  பெயரிட்டு மகிழும்நாள் எந்நாளோ?
கற்றவர்கள் முன்வந்து நற்றமிழில்
  கையொப்ப மிடுவதுவும் எந்நாளோ?

தமிழ்நாட்டில் தமிழர்தம் கடைப்பெயரைத்
  தமிழினிலே எழுதும்நாள் எந்நாளோ?
அமிழ்ந்துவரும் மொழிப்பற்றை மீட்டெடுத்து
  அணையாமல் காப்பதுவும் எந்நாளோ?

அப்துல்கலாம் பெயரினிலே குறளுக்கென
  ஆய்வுமையம் அமைவதுவும் எந்நாளோ?
எப்பாடு பட்டேனும் நம்தமிழை
  ஏற்றமுறச் செய்வதுவும் எந்நாளோ?
                 

கருத்துகள்