மழை நீர் போல!
கவிஞர் இரா. இரவி
தனக்காக பெய்யவில்லை ஊருக்காகவே பெய்யும்
தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ் !
மழை நீர் போல உதவியாக இருந்திடு
மண்ணில் விழுந்தால் மகசூல் அதிகம் !
மற்றவருக்கு உதவிடும் உயர்ந்த உள்ளம்
மழை நீர் மனிதர்களின் உயிர் வளர்க்கும் நீர் !
மழை பொய்த்தால் வறட்சி வரும்
மழை பொழிந்தால் வளங்கள் பெருகும் !
வானிலிருந்து வழியும் அமுதம் மழை
வான்சிறப்பில் வள்ளுவர் பாடியதும் மழை !
நீரின்றி அமையாது உலகு என்பது உண்மை
நீரின் வருகை மழையால் என்பது உண்மை !
மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறம்
விண்ணிலிருந்து விழுந்தாலும் நதியாக நடக்கும்!
மரங்கள் வளர்ந்திடக் காரணம் மழைநீர்
மழைநீர் பொழிந்திடம் காரணம் மரங்கள் !
ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்கின்றன
உலக மனிதர்களும் அன்பு செலுத்து வாழுங்கள் !
கழுதைக்கு கல்யாணம் செய்வதால் வருவதில்லை
காடுகள் செழிக்க வைத்தால் வரும் மழை !
யாகம் வளர்ப்பதால் வருவதில்லை மழை
யாவரும் மரம் வளர்த்தால் வரும் மழை !
ஆடு வெட்டுவதால் சேவல் அறுப்பதால் வராது மழை
அனைவரும் இயற்கையை நேசித்தால் வரும் மழை !
பொதுவுடைமைவாதிக்கு இலக்கணம் மழைநீர்
பொதுநலம் பேணி வாழ்ந்தால் நீயும் மழைநீர் !
வானிலிருந்து வந்த மழைநீர் ஆவியாகி
வானம் செல்லும் கதிரவனின் உதவியால் !
வான்புகழ் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமா?
வான்மழை நீர் போல வாழ்ந்திடப் பழகு!
அளவிற்கு அதிகமானால் மழை நீரும் நஞ்சாகும்
அளவோடு யாரிடமும் பழகுவது நன்றாகும் !
கருத்துகள்
கருத்துரையிடுக