வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வனநாயகம் !
நூல் ஆசிரியர் :
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968
பக்கங்கள் : 30 விலை : ரூ. 50
*****
“வனநாயகம்” என்ற நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. ‘காடு அதை நாடு’ என்ற எனது கவிதை நினைவிற்கு வந்தது. நூல் ஆசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் இயல்பாகவே இயற்கையை நேசிப்பவர். வனத்துறையின் செயலராக இருந்து வனம் காத்து, மதுரை விமான நிலையயம் செல்லும் வழி உள்பட பல இடங்களில் மரங்கள் நட வழிவகை செய்தவர். இன்று செழித்து வளர்ந்து நிற்கின்றன.
2015ஆம் ஆண்டு மக்கள் சிந்தனை பேரவை, ஈரோடு மாநகரில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ஆற்றிய உரை தான் இந்நூல். 2017ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் எது ஆன்மீகம்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அந்த உரையையும் விரைவில் நூலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் கடல்அலை போல கூடி இருந்தார்கள். 1¾ மணி நேர உரையை ,மக்கள் ஒருவர் கூட எழுந்து செல்லாமல் ரசித்து மகிழ்ந்தனர்.
வனம் பற்றிய ஆய்வுக் கட்டுரை என்றே சொல்ல வேண்டும். வனம் பற்றியும் வனத்தில் வாழும் பல்வேறு விலங்குகள் பற்றியும் இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் என பலவற்றை மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள். நூலை பொருத்தமான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் தரமாக அச்சிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் ரசனைக்கு.
“தோட்டம் வேறு, வனம் வேறு, பூங்கா வேறு, காடு வேறு, பூங்காவில் நுழையும் போது திகில் இல்லை, செயற்கையான கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறோம். பரந்து விரிந்த காட்டில் நுழையும் போது நம்மையும் அறியாமல் நாம் பரவசப்படுகிறோம். அடுத்தது என்ன நடக்கும் என்று அறிய முடியாமல் சிலிர்ப்பு உண்டாகிறது. ஏதேனும் சலசலப்பைக் கேட்டால் சிறுத்தை கடந்து சென்றிருக்குமா? பாம்பு ஊர்ந்து போயிருக்குமா? என்றெல்லாம் விழிப்புணர்வோடு உற்றுப்பார்க்கிறோம்”.
இந்த நூல் படிக்கும் வாசகர்களை தன் வைர வரிகளின் மூலம் காட்டிற்கே அழைத்துச் சென்று மனக்கண்ணில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர்.
காட்டிற்கு செல்வபவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதை செய்யக் கூடாது எனபதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் அறிவுறுத்தி உள்ளார். ஒரு வன அதிகாரி தனது உறவினருக்காக புலியைக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டு ஆடு ஒன்றை கட்டி வைத்து புலியை வர வைத்து மகிழ்ந்து இருக்கிறார். பின்னர் ஆடு கட்டி வைத்த காவலரையும் புலி கடித்து கொன்று விட்டு, மனித வேட்டையாடும் புலியாக மாறிய நிகழ்வை நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
வனத்தின் முக்கியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். காடுகளை அழித்து நாடுகளாக்கும் நாகரீக மனிதர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் உள்ளது.
“வனங்கள் நாம் வாழ்வதற்கான மூலாதாரங்கள். ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவிகிதம் வனங்கள் இருக்க வேண்டும். அப்போது தான் மழை சரியாகப் பெய்யும்; மண்ணரிப்பு தடுக்கப்படும்; அருவிகள் உண்டாகும்; ஆறுகள் பெருகும்; வெப்பமயம் குறையும்; வேளாண்மை செழிக்கும்; கால்நடைகள் தழைக்கும்; சிறுதொழில்கள் மேம்படும்; பணச்சுழற்சி அதிகரிக்கும்; பொருளாதாரம் உயரும்”.
வனங்களை அழித்து விட்டு மரங்களை வெட்டி விட்டு மழை பெய்யவில்லையே என்று வருந்துவதில் அர்த்தமில்லை. காடு இருந்தால் தான் நாடு செழுக்கும் என்பதை நன்கு விளக்கி உள்ளார்.
“நம் மண் சார்ந்த மரங்கள் திட மரத்தைத் தருகின்றன; காற்றைச் சுத்தப்படுத்துகின்றன; மண்ணை செழுமைப்படுத்துகின்றன; கரியமில-வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றன” மரத்தின் மகத்துவத்தை, வனத்தின் வனப்பை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்.
விலங்கு காட்சிச்சாலைக்கு செல்பவர்கள் விலங்குகளைத் தீண்டாமல், சீண்டாமல் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் நூலில் உள்ளது. முதலைப் பண்ணையில் முதலையைச் சீண்டிவிட்டு மாட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடித்தவரின் நிகழ்வும் நூலில் உள்ளது. தேன் சேர்க்கும் தேனீ பற்றி, சிறுத்தை, சிங்கம், யானை, பூனை, குரங்கு, பாம்பு மற்றும் வனத்தில் வசிக்கும் விலங்குகள் பற்றிய பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.
“மரங்கள் இயற்கையின் சாசனம், காற்றின் வாகனம், மலரின் ஆசனம், இனிமையின் பாசனம், பாதசாரிகளுக்கு நிழற்குடை, பயணிகளுக்குப் பஞ்சு மெத்தை, பறவைகளுக்கு சரணாலயம், வியாபாரிகளுக்குக் கூடாரம், கால்நடைகளுக்குப் பயணியர் விடுதி”
மரத்தின் பயனை கவித்துவமாக எழுதி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது உரையிலும், எழுத்திலும், கவித்துவம் மலர்கின்றது.
யானைகள் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள்.
“யானைகளுக்கு எல்லைகள் இல்லை, தமிழகத்து யானை வங்காளம் வரை கூட செல்லக் கூடியது, எடுத்த எடுப்பிலேயே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு ஓடக் கூடியது”.
மன்னர் காலத்தில் போர் என்ற பெயரில் குதிரைகளும், யானைகளும் அழிந்த வரலாற்றை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். புலி, பசி எடுக்காமல் மானை விரட்டாது, புசித்து விட்டால் மானே அருகில் வந்தாலும் தொடாது என்ற உண்மையை எழுதி உள்ளார்.
வன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார். விலங்குகளிடம் பல நல்ல குணங்கள், விலங்காபிமானம் பற்றி, குட்டியிட்ட குரங்கை கடித்துக் கொன்ற சிறுத்தை, குரங்கு குட்டியைப் பார்த்ததும் நெகிழ்ந்து, தான் கொன்ற குட்டியிட்ட குரங்கை உண்ணாமல் பாசம் காட்டிய நிகழ்வு நூலில் உள்ளது. இதனை கட்செவியில் காட்சியாகவும் பார்த்து நெகிழ்ந்தேன். வனநாயகம் நூல் வனத்திற்கான மதிப்பைக் கூட்டும் விதமாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.
--
.
கருத்துகள்
கருத்துரையிடுக