காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
காகிதம் !
நூல் ஆசிரியர் :
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 008. பேச : 044 26251968
பக்கங்கள் : 30 விலை : ரூ. 50
*****
‘காகிதம்’ என்ற சொல்லை முனைவர் பட்ட ஆய்வு போல நிகழ்த்தி உள்ளார் நூலாசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். காகிதம் பற்றிய சிறப்புக்களை காகிதம் மூலம் விளக்கியுள்ள நல்ல நூல்.
நூல் படித்து முடித்ததும், காகிதத்தின் பயன்பாடு இவ்வளவா? என்று பிரமித்து விட்டேன். காகிதம் எந்த எந்த விதங்களில், எப்படி எப்படி, எங்கு எங்கு பயன்படுகிறது என்பதை அலசி ஆராய்ந்து உள்ளார்.
காகிதம் பற்றிய நூலை நல்ல காகிதத்தில் அச்சிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். பொருத்தமான படங்களும் மிக நன்று.
காகிதம் என்ற சொல்லை படித்தவுடன் எனக்கு கரூர் புகழூர் அருகே உள்ள காகிதபுரம் TNPL நிறுவனம் தான் நினைவிற்கு வந்தது. தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களுடன் இலக்கிய நிகழ்விற்கு அங்கு சென்று சுற்றிப் பார்த்த நினைவு மலர்ந்தது. உலகத்தரம் வாய்ந்த காகிதங்கள் அங்கே உற்பத்தி செய்து வருகின்றனர். ஆட்சியர் பதவிக்கு நிகரானவர்களின் நிர்வாகத்தில் சீரும் சிறப்புமாக இயங்கி வருகின்றது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது .உலகத்தரம் வாய்ந்த காகிதம் அங்கே தயாராகின்றது .மின்சாரமும் உற்பத்தி செய்கின்றனர் .நல்ல இலாபத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனம்.தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.
இந்த நூலின் ஆரம்பத்தில் உள்ள வைர வரிகளே காகிதத்தின் சிறப்பை உணர்த்துகின்றது. பாருங்கள்.
“மனித வாழ்வில் மகத்தான இடம் காகிதத்திற்கு உண்டு, மணச் செய்தியையும், மரணச் செய்தியையும் காகிதத்தின் மூலமே நாம் பரிமாறிக் கொள்கிறோம். மனித வரலாற்றில் காகிதத்திற்கு முக்கிய பங்கு இருந்தது. அது எழுதுபொருளாகப் பரவலான பிறகு தான் அறிவு பொதுவுடைமையாகப்பட்டது. அதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே உரிமையாக இருந்த கல்வி, பலருக்கும் சென்றடைய காகிதங்களே அறிவு அம்புகளாகச் செயல்பட்டன.”
மணச் செய்தியையும், மரணச் செய்தியையும் என்று எழுதி சொல் விளையாட்டு விளையாடி உள்ளார் . நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் சொற்கள் கவித்துவமாக வந்து விழுகின்றன.
உண்மை தான், எல்லோருக்குமான கல்வி என்ற சமூக நீதி பரவிட முக்கியக் காரணம் காகிதம் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
“மணச் செய்தியையும், மரணச் செய்தியையும்” கணினியுகமாக இருந்தாலும் திருமண அழைப்பிதழை காகிதத்தில் அச்சிட்டு வழங்கினால் தான் திருமணத்திற்கு வருவார்கள். மின்அஞ்சலில் அனுப்பினேன் என்றால் கிடைக்கவில்லை, பார்க்கவில்லை என்பார்கள். மரணச் செய்தியை அறிவிப்பதிலும் காகிதமும் முன் நிற்கிறது. மதுரையில் சாதாரண ஒருவர் இறந்தாலும் 'இமயம் சரிந்தது' என்று சுவரொட்டிகள் ஒட்டி விட்டு தான் பிணத்தை எடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
“இந்தியாவில் காகிதத்தின் உபயோகம் அது கண்டுபிடிக்கப்பட்டு 1200 ஆண்டுகளுக்குப் பின்பு தான் புழக்கத்திற்கு வந்தது” என்ற உண்மை தொடங்கி முன்பே காகிதம் புழக்கத்திற்கு வந்து இருந்தால், தமிழும் தமிழரும் இன்னும் முன்னேறி இருக்க முடியும் என்பதை உணர்த்தியது.
கணினி யுகத்தில் வங்கிகளில் கணக்குப் புத்தகம் காகிதத்ஹில் தான் பயன்படுகிறது. பதவி நியமன ஆணை மின்னஞ்சலில் பார்த்தாலும், அதனை காகிதத்தில் அச்சிட்டுக் காண்பதில் தான் ஆனந்தம் உள்ளது என்பதை எழுதி உள்ளார்..என் முதல் கவிதையை மதுரை மணி இத்தலகில் அச்சில் பார்த்த மகிழ்வில்தான் நான் தொடர்ந்து கவிதைகள் எழுதினேன் .16 நூல்கள் வரை வளர்ந்தது
கடித இலக்கியம் பற்றி பெரியவர்கள் பொதுநலன் குறித்தே கடிதங்கள் எழுதியதால் அவை இலக்கியமானது என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார்.
எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை உயரக் காரணமாக இருந்தது. காகிதம் தேநீர் கடைகளில் செய்தித்தால் படிப்பதற்காக வரும் மாணாக்கர்கள் முதியவர் என்ற போதும் அவர்களுக்கு மொழி கற்பித்த ஆசான் காகிதம் என்பதை அறிய முடிந்தது.
அறிவுப் புரட்சிக்குக் காரணம் காகிதம். பணம், பணம் என்று அடித்துக் கொள்ளும் மனிதர்கள் பயன்படுத்தும் பணம் அச்சிடப்பட்டதும் காகிதத்தில் தான். முன்பொரு காலத்தில் லாட்டரிச் சீட்டு பரிசுச் சீட்டு அச்சிடப்பட்டதும் காகிதத்தில் தான். பல்வேறு கோணங்களில் காகிதம் பற்றியே சிந்தித்து நூல் எழுதி உள்ளார். காகிதத்திற்கு புகழ் மகுடம் சூட்டி உள்ளார். இந்த நூல் படித்தால் யாரும் காகிதத்தை கசக்கி எறிய மனம் வராது.
உணவகங்களில் இலையோடு காகிதம் வைத்து மடித்து வழங்கும் காட்சி, சிறுவனாக இருந்த போது, பட்டம் விட்ட காட்சி மனதில் காட்சியாக விரிகின்றன.
சிற்றுண்டி வழங்கிட பயன்படும் காகிதம், திரைப்பட சுவரொட்டிக்கு பயன்படுவது காகிதம், பரிசுப் பொருட்களை சுற்றி வழங்கிடப் பயன்படுவது காகிதம், மேல்நாடுகளில் கழிவறைகளில் பயன்படுவது காகிதம், அரசியல் கட்சிகளின் தோரணங்களாக காகிதம், பாயாகவும் பயன்படும் காகிதம். அழைப்பிதழை வாழை இலை வடிவத்தில் அச்சிட்ட நிகழ்வு உலக வரைபடங்கள் அச்சிட்ட காகிதம், தட்டச்சு செய்திட பயன்படும் காகிதம் இப்படி எந்த எந்த விதங்களில் காகிதம் மனித வாழ்வில் பங்களிப்பு செய்து வருகின்றது என்பதை சுவைபட எழுதி உள்ளார்.
“காகிதத்தைப் பார்க்கிற போதெல்லாம் திருநங்கைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனென்றால் காகிதத்தைக் கண்டுபிடித்தது ஓர் அரவாணி தான்”.
அறியாத பல தகவல்களை அறியும் தகவல் களஞ்சியமாக உள்ளது. காகிதம் மட்டும் கண்டுபிடிக்காமல் காத்திருந்தால் எல்லோரும் ஆதிவாசியாக இருந்திருப்போம். காகிதத்தின் மேன்மை உணர்த்தும் மேன்மையான நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக