பொதிகைத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! தமிழுக்கு அமுதென்று பேர்! கவிஞர் இரா. இரவி !

பொதிகைத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! 

தமிழுக்கு அமுதென்று பேர்! கவிஞர் இரா. இரவி ! 

தமிழுக்கு அமுதென்று பேர்! என்று அன்றே 
தமிழை அமுதமென்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ! 
அமுதம் என்பது இறப்பு தராத அருமருந்து என்பர் 
ஆம் தமிழ் படித்தவருக்கும் இறப்பு இல்லை! 
பூத உடல் பூமியை விட்டு மறைந்த போதும் 
புகழுடல் தமிழறிஞர்களுக்கு நிலைத்து நிற்கும்! 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திட்ட வள்ளுவன் 
இன்றும் நிலைத்து நிற்கிறான் உலகம் முழுவதும். 
அவ்வை இன்று உலகில் இல்லை என்றாலும் 
அவள் பாடிய ஆத்திசூடி நிலைத்து நின்றது! 
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் 
அகிலத்தின் முதல்மொழி நம் தமிழ்மொழியன்றோ! 
முதுமை வராமல் காக்கும் அருமருந்து தமிழ் 
முத்தமிழ் அறிந்து கொண்டால் இளமை நிலைக்கும்! 
தொன்மை இலக்கியம் தொல்காப்பியம் மட்டுமல்ல 
தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும் உண்டு! 
சில நூறு ஆண்டு வரலாறு மற்ற மொழிகளுக்கு 
பல நூற்றாண்டு வரலாறு தமிழுக்கு மட்டுமே! 
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மற்றமொழி 
நானிலம் தோன்றிய போதே தோன்றியது தமிழ்மொழி 
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர் 
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன் நான் ! 
தமிழன்னையை அரியணை ஏற்றிட தரணி வாழ் 
தமிழர்கள் யாவரும் ஓரணியில் அணி திரள்வோம்!

கருத்துகள்