இறப்பு ! கவிஞர் இரா .இரவி !

இறப்பு ! கவிஞர் இரா .இரவி ! 

நிழலின் அருமை 
வெயிலில் தெரியும் 
பெற்றோர் மரணம் ! 

தடுக்கமுடியாது மருத்துவர் 
தள்ளிப்போடலாம் 
இறப்பு ! 

மனம் விரும்புவதில்லை 
மிக மூத்தோருக்கும் 
இறப்பு ! 

பலருக்கு சோகம் 
சிலருக்கு இன்பம் 
ஒருவர் இறப்பு ! 

இரண்டில் ஒன்றுதான் 
எரிப்பு புதைப்பு 
இறப்பு ! 

அழுதன 
நாளைய பிணங்கள் 
இன்றைய பிணத்தின் முன் ! 

உயிர் பிரிந்ததால் 
நிரந்தரமானது தூக்கம் 
இறப்பு ! 

போனால் திரும்பாது உயிர் 
ஒருவழிப்பாதை 
இறப்பு ! 

பாராட்டு திட்டு 
எதுவும் கேட்காது 
இறப்பு ! 

நாளைக்கு என்று தள்ளாதே 
இன்றே நிகழலாம் 
இறப்பு ! 

வருமென்று அஞ்சாதே 
வரும்போது வரட்டும் 
இறப்பு ! 

மனக்காயம் தரும் 
மாயமாய் பின் மறையும் 
இறப்பு ! 

இறுதிச் சடங்கின்போது 
தொடங்கியது 
சொத்துச்சண்டை ! 

தொடாமல் போங்கள் 
உறவுகளின் எச்சரிக்கை 
அடுத்த வீட்டில் இறப்பு ! 

வேண்டாம் ஆணவம் 
வேண்டும் பண்பு 
உறுதி இறப்பு ! 

இல்லை என முடியாது 
உண்டு ஒரு நாள் 
இறப்பு ! 

சின்ன ஆசை எப்படி அழுவார்கள் 
பார்த்துவிட்டு 
பிழைக்க வேண்டும் !

கருத்துகள்