ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி



.
பெரிய மீன்கள் 
சின்ன மீன்களைத் தின்றது 
அரசியல் 

இலவசங்களால் 
வசமாக்கி திருடினர் 
மூளையை 

மாற்றுங்கள் பெயரை 
தொலைக்காட்சி அன்று 
தொல்லைக்காட்சி என்று 

பதக்கங்கள் பெற்றும் 
பெருமை இல்லை 
மேடையில் கொலைபாதகன் 

நிதிக்கு அதிபதியானால் 
சில நீதிபதியும் 
உன் வசம் 

இயக்கையைச் சிதைக்க 
மனித இனம் சிதைந்தது 
சுனாமி 

பெண்கள் இட ஒதிக்கீடு 
உள்ஒதிக்கீடு இருக்கட்டும் 
மன ஒதிக்கீடு தருக 

பெரிய மனிதர்களிடமும் 
சின்னப்புத்தி வளர்க்கும் 
சின்னத்திரை 

குழந்தைகளுக்குக் கொடுக்கும் 
குச்சி மிட்டாய் 
வாக்களிக்கப் பணம் 

கோடிகள் கொள்ளை அங்கே 
வறுமையில் தற்கொலைகள் இங்கே 
வலிமையான பாரதம் 

முதலிடம் 
பெண்களை அழவைப்பதில் 
தொலைக்காட்சிகள் 

பித்தலாட்டம் 
மூலதனம் 
ராசிக்கல் சோதிடம் 

விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம் 
ஆபாச நிகழ்ச்சிகளுக்கு 
செந்தமிழ்ப்பெயர் 

வேதனையிலும் வேதனை 
போகப் பொருளாகச் சித்தரிப்பதை 
பெண்களே ரசிப்பது 

குடியால் கோடிகள் 
குடிமகன் தெருக்கோடியில் 
குடு்ம்பம் நடுத்தெருவில் 

நல்ல முன்னேற்றம் 
சீருடையில் மாணவன் 
மதுக் கடையில் 

என்று தெளியுமோ 
போதையில் பாதை மாறிய 
தமிழன் 

விளைநிலங்களும் 
மின்சாரமும் இலவசம் 
வெளிநாட்டவர்க்கு 

விரைவில் கிட்டும் 
உலக அளவில் முதலிடம் 
ஊழல் 

கொடிகளை விட 
கோடிகளே முக்கியம் 
அரசியல் 

சமாதானமானார்கள் 
சண்டையிட்டப் பெற்றோர்கள் 
குழந்தையால் 

முந்தைய சாதனையை 
முறியடித்தனர் அரசியல்வாதிகள் 
மெகா ஊழல் 

யாரும் வாங்காமலே 
மலர்ந்தன பூக்கள் 
வாடினாள் பூக்காரி

கருத்துகள்