நிழலாடும் நினைவு ! கவிஞர் இரா .இரவி !



நிழலாடும் நினைவு   !  கவிஞர் இரா .இரவி !

காதல் தோல்வியில் முடிந்து விட்டாலும்
காதல் நினைவுகள் மூளையில் நிழலாடும்!

மறந்து விடு என்று உதடுகள் உரைத்தாலும்
மறக்க முடியாமல் உள்ளங்கள் தடுமாறும் !

பசுமரத்து ஆணி போல பதிந்திட்ட நினைவுகள்
பழையது என்ற போதும் பசுமை நினைவுகள் !

கடவுள் உண்டா? இல்லையா? தர்க்கத்தில்
காதல் முதல்படி  எடுத்து வைத்தோம் !

இளையராசாவை இருவருக்கும் இனிதே பிடித்தது
இசையால் இருவரும் கருத்து ஒருமித்தோம் !

நடிகர் கார்த்திக் பிடிக்கும் என்றாள் அவள்
நடிகர் கார்த்திக் பிடிக்காமல் ஆனது எனக்கு !

கவிதை எழுதிடக் காரணமாக இருந்தவள்
கவிதையை ரசித்து ஊக்கப்படுத்தி மகிழ்வித்தாள் !

கருப்புத் தான் என்ற போதும் அழகாக இருந்தாள்
கார்மேகக் கூந்தலோ இடைக்குக் கீழ் இருக்கும் !

பொது அறிவில் போதுமான நுட்பம் உண்டு
பொதுவாக நல்ல குணம் தான் அவளுக்கு !

சொல்வதை அப்படியே ஏற்பதில்லை அவள்
சொல்லியதில் மறுப்பு இருந்தால் தெரிவிப்பாள் !

நல்லதைப் பாராட்டிட தயங்கியது இல்லை
அல்லதை நீக்கிட அறிவுறுத்தியது உண்டு !

அவள் அருகே இருந்தால் நேரம் போதாது
அவள் பிரிந்து இருந்தால் நேரம் போகாது !

அதிகம் பேசாமல் அளந்தே பேசுவாள்
அறிவார்ந்த பேச்சாக அவை இருக்கும் !

மனித நேயம் காட்டுவதில் மகத்தானவள் அவள்
மனிதர்களை மதிக்க வேண்டுமென வலியுறுத்தியவள் !

வருடக் கணக்கில் காலங்கள் கழிந்தாலும்
வஞ்சியின் நினைவு எஞ்சியுள்ளது இன்னும் !

நிழல் என்பது பிரியாது உடன் வரும்
நினைவு என்பது மறக்காது உள் இருக்கும் !

கருத்துகள்