சிறுமை கண்டு பொங்குவாய் ! கவிஞர் இரா. இரவி



சிறுமை கண்டு பொங்குவாய் !
கவிஞர் இரா. இரவி
அநீதி எந்த வடிவில் வந்தாலும்
அதனைத் தட்டிக் கேட்க தயங்காதே!

சக மனிதன் துன்புறுத்தப்பட்டால்
சகோதரனாக நினைத்து ஏன் என்று கேள்!

நியாயவிலைக் கடையில் நிறுக்கையில்
நியாயமின்றி நடந்தால் ஏன் என்று கேள்!

கடமையைச் செய்திட அரசு அலுவலகத்தில்
கையூட்டு கேட்டால் ஏன் என்று கேள்!

திரைப்படத்தின் கட்டணம் உயர்த்தினால்
திரையரங்கில் காரணம் ஏன் என்று கேள்!

திரையரங்கில் விற்கும் உணவுப்பண்டம் விலை
திகிடுமுகடாக இருந்தால் ஏன் என்று கேள்!

குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால்
கூட்டமாகச் சென்று ஏன் என்று கேள்!

பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றால்
பேருந்து நிலையம் சென்று ஏன் என்று கேள்!

பொதுவான சாலைகள் குண்டு குழியானால்
பொதுப்பணித் துறைக்கு சென்று ஏன் என்று கேள்!

கல்விக் கட்டணம் அதிகம் வசூலித்தால்
கல்வி நிறுவனம் சென்று ஏன் என்று கேள்!

மண்ணில் குப்பைகள் அகற்றாமல் இருந்தால்
மாநகராட்சிக்குச் சென்று ஏன் என்று கேள்!

வரிசையில் வராமல் ஒழிங்கின்றி வருவோரை
வரிசையில் வரச் செய்திட ஏன் என்று கேள்!

மின் தடை அடிக்கடி வந்தால் உடன்
மின் அலுவலகம் சென்று ஏன் என்று கேள்!

கடவுளின் பெயரால் ஆலயத்தில் தவறு நடந்தால்
கோயிலுக்குச் சென்று ஏன் என்று கேள்!


தட்டினால் தான் திறக்கும் கேட்டால் தான் கிடைக்கும்
தட்டிக் கேட்க எதற்கும் தயங்காது பொங்கு!

கருத்துகள்