வனமகன் ! எழுத்து, இயக்கம் : விஜய் ! நடிப்பு : ஜெயம் ரவி ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வனமகன் !
எழுத்து, இயக்கம் : விஜய் !
நடிப்பு : ஜெயம் ரவி !
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
*******
      இயக்குநர் விஜய் வழங்கி உள்ள தரமான படைப்பு.  காட்டுமிராண்டி என்று சொல்லும் காட்டுவாசிகள்.  மனிதாபிமானத்துடன் வாழ்கின்றனர்.  ஆனால் நாட்டில் வாழும் மனிதர்கள் தான் பணத்தாசை காரணமாக மனிதாபிமானமின்றி வாழ்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றது திரைக்கதை.

       கதாநாயகனாக வரும் காட்டுவாசி வனமகன் ஜெயம் ரவிக்கு படத்தில் பேசுவதற்கு வசனம் இல்லை.  உடல்மொழியால் படம் முழுவதும் ஆளுமை செய்துள்ளார்.பாராட்டுக்கள். குழந்தையைக் கொல்வதற்கு பாய இருக்கும் புலியை கத்தியால் கீறி குழந்தையைக் காப்பாற்றுகின்றார்.  பின் காயம்பட்ட புலிக்கும் முள் வைத்து தையல் போட்டு மூலிகை மருந்து வைக்கிறார்.  மனிதாபிமானம் மட்டுமல்ல விலங்காபிமானத்துடன் காட்டுவாசிகள் வாழ்கிறார் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

       படத்தின் இறுதிக் காட்சியில் காவலர்களை தாக்கும் புலி, வனமகன் ஜெயம் ரவி மருந்து தடவி காப்பாற்றியதை நினைவில் வைத்து வனமகனைக் கண்டதும் தாக்காமல் நிற்கின்றது.  விலங்குகளும் 'நன்றி மறப்பது நன்றன்று.' என்ற திருக்குறளைக் கடைபிடிப்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.  கதாநாயகியும் பணக்காரப் பெண் பாத்திரம் பொருத்தமாக உள்ளது.  நடனமும் சிறப்பாக ஆடி உள்ளார்.  வனமகனின் சேட்டைகளை ரசிக்கும் காட்சி நன்று.

       தொழிற்சாலை கட்டுவதற்காக வனத்தில் வாழும் பூர்வக்குடிகளை விரட்டியடிக்க முற்படுகின்றனர்.  வனவாசிகள் தாக்குகின்றனர்.  இறுதியில் யார் வென்றார்கள் என்பதை திரையில் பார்த்து ரசியுங்கள்.

       வனவாசி ஜெயம் ரவி, கார் விபத்தில் அடிபட்டு மயக்கம் அடைய குணப்படுத்த சென்னை கொண்டு வருகிறார்கள்.  பின் கதாநாயகி வீட்டில் செய்யும் சேட்டைகள் நகைச்சுவைகள்.

 அலைபேசியில் பேசியே சண்டையிட்டுக் கொள்ளும் கணவன் மனைவியை வனமகன் சேர்த்து வைப்பது நன்று.  நேரில் சந்தித்துப் பேசினால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பதை இணையர்களுக்கு உணர்த்தி உள்ளார்.

       அந்தமான் காட்சிகள் கண்களுக்குக் குளுமை.  ஹாரிஸ் ஜெயராஜ் 50வது படம், பாடல்களும் பிண்ணனி இசையும் மிக நன்று.  ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது.  தேசிய விருது பெற்ற தம்பி ராமையா நன்கு நடித்து உள்ளார்.  வழக்கம் போல் வில்லத்தனத்தில் பிரகாஷ்ராஜ் முத்திரை பதித்து உள்ளார். ஜெயம் ரவி, இயக்குனர் விஜய் இருவரும் வெற்றிக்கூட்டணி அமைத்து உள்ளனர்.

கருத்துகள்