‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
‘உள்ளுவதெல்லாம்’
நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழ்மணி புத்தகப்பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. பக்கம் : 224, விலை : ரூ. 200.
*******
‘உள்ளுவதெல்லாம்’ என்ற உயர்ந்த சொல் உலகப் பொதுமறையில் திருவள்ளுவர் தந்த சொல். தந்தையின் பாதையில் நடந்து வரும் சிறந்த மகன் வா.மு.சே. திருவள்ளுவர் வடித்த நூல்.
பெரும்புலவர் செந்தமிழ்ச் செழியன் அணிந்துரை, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வாழ்த்துரை, கவிவேந்தர் வேழவேந்தன் வாழ்த்துப் பாமாலை, பைந்தமிழ்ப் புலவர் இராகவ கணேசன் வாழ்த்துக் கவிதை யாவும் நூலின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.
நூலாசிரியர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளவைகளில் சிறு துளி.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நன்னோக்கில் உரைகள் நூலாக உரு பெற்றுள்ளது. தமிழ் கூறும் நல்லுலகை நோக்கிப் பயணம், பயணவழி தமிழ் நெஞ்சங்களின் சுகமான நிகழ்வுகள், நிகழ்வுகளில் யான் கண்ட உணர்வுகளை உள்ளுவதெல்லாம் என நூலாகப் பதிவு செய்வதைப் பெறும்பேறாகக் கருதுகிறேன்”.
நூலாசிரியர் வணிகவியல் பட்டம் பயின்றவர். படித்த படிப்பிற்கேற்ற வங்கி வேலையில் அமர்ந்து இருந்தால், சராசரியாக வாழ்ந்து இருப்பார். ஆனால் வெளிஉலகிற்கு அறிமுகமாகி இருக்க முடியாது, ஆனால் தந்தையின் வழி தமிழ்ப்பணி இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருவதால்தான், தந்தையைப் போலவே உலகப் பயணம் என்பது சாத்தியமாயிற்று. உலகப் பயணத்தின் பயண இலக்கியமாக உரை வீச்சுக்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. வித்தியாசமான முடிவு எடுத்ததன் காரணமாக வெற்றியும் பெற்றுள்ளார்.
நூலில் 35 கட்டுரைகள் உள்ளன. சிங்கப்பூரில் தொடங்கி சிதம்பரத்தில் முடித்து உள்ளார். சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யூ அவர்கள் தமிழின் சிறப்பையும், தமிழர்களின் உழைப்பையும் நன்கு அறிந்தவர். தமிழுக்கும், தமிழருக்கும் முன்னுரிமை தந்தவர். அவர் பற்றிய முதல் கட்டுரை முத்தாய்ப்பு. கவிதைகள் நன்று.
“சிங்கையில் தமிழை ஆட்சிமொழியாக்கி தமிழர்களுக்குச் சமஉரிமை வழங்கிய சிங்கையில் தந்தை லீக்குவான்யூ தலைவர்கள் பின்பற்ற வேண்டிய தலைவர். அவர் புகழ் ஓங்குக. பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை இம்மன்றத்தில் பதிவு செய்கிறேன்”.
சிங்கப்பூரின் தந்தை லீக்குவான்யூ உடலால் உலகை விட்டு மறைந்தாலும் புகழால் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்வார் என்பதை எடுத்தியம்பும் விதமான நல்ல கட்டுரை பாராட்டுக்கள்.
சிங்கப்பூரில் நடந்த தமிழ் விழாக்கள் பற்றி எடுத்தியம்பி வடித்த கட்டுரைகள் நன்று. சிங்கப்பூர் தமிழர்களின் தமிழ்ப்பற்று பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பிற நாட்டுத் தமிழர்களிடமிருந்து தமிழ்ப்பற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது.
அமெரிக்காவில் உள்ள சிறந்த மூன்று பல்கலைக் கழகங்கள் சென்று வந்த நிகழ்வை ஆவணப்படுத்தி உள்ளார். நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நமக்கு நேற்று நடந்தது இன்று மறந்து விடுகின்றது. இவர் சிறு குறிப்புகள் வைத்துக்கொண்டு அவற்றை கட்டுரைகளை நினைவாற்றலுடன் வடிக்கும் கலை கைவரப்பெற்றுள்ளார். மறக்காமல் அனைத்தையும் பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.
அமெரிக்கா பற்றி படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
“கருப்பர் இனத்து எழுத்தர் பேருந்தில் உட்கார மறுக்கப்பட்ட நாட்டில் அக்கொடுமையை நீக்க மார்ட்டின் லூதர்கிங் நடை நடந்தார். அவர் புரட்சியால் இன்று கருப்பர் இனத்து ஒபாமாவே குடியரசுத் தலைவராக உள்ளதையும் எண்ணிப் பூரித்தேன்” (2014ம் ஆண்டு எழுதிய கட்டுரை).
ஒபாமா காந்திய சிந்தனையுடன் இருந்தார். ஒபாமா இன்று பதவியில் இல்லை. இன்று அவர் அருமையை நன்கு உணர்த்தி வருகிறார் இன்றைய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்து தனி முத்திரை பதித்த நல்லவர், வல்லவர், மாமனிதர் கலாம் பற்றிய உரை நூலாசிரியர் கனடாவில் நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரை ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் உள்ளன. அவர் பற்றிய கவிதையும் நன்று.
“எளிமைப் பண்பால் எளியோர் வாழ்வை
ஏந்திய தலைவர் அப்துல் கலாம்”.
விழியாம் நம்மின் இளையோர் காத்த
விண்ணியல் தலைவர் அப்துல் கலாம்
மலிவாய்ச் செயலை என்றும் செய்யா
மாசிலாத் தலைவர் அப்துல் கலாம்.
விண்ணியல் தலைவர் அப்துல் கலாம்
மலிவாய்ச் செயலை என்றும் செய்யா
மாசிலாத் தலைவர் அப்துல் கலாம்.
உண்மை தான். மாமனிதர் அப்துல் கலாம் அளவிற்கு நேர்மையாக அவருக்கு முன்னவரும் இல்லை,பின்னவரும் இல்லை.
முகநூலின் சிறப்பை “கனடா நாட்டில் நட்பை இணைத்த முகநூலின் அருமை” கட்டுரையில் விளக்கி உள்ளார்.
துபாய் பாலைவனப் பயணம் கட்டுரையில் துபாய்வாழ் தமிழர்களின் தமிழ்ப்பற்றை விளக்கி உள்ளார். கவிதையும் நன்று. கோலாலம்பூர் பற்றியும் எழுதி உள்ளார். தமிழ்ச்சுடர் சுவாமி இராமதாசர், மகாகவி கம்பதாசன், அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம், கவிவேந்தர் கா. வேழவேந்தன், கவிவேந்தர் மேத்தா ஆகியோர் பற்றிய ஆய்வுரையை கட்டுரையாக வடித்துள்ளார்.
நூலில் கவிதை, கட்டுரை என பல்சுவை விருந்தாக வழங்கி உள்ளார். நூலில் இறுதியில் முனைவர் காந்தியின் கேள்விகளுக்கு நல்ல பதில்கள் வழங்கி உள்ளார். பதச்சோறாக ஒரு கேள்வி பதில்.
கவிதைகள் குறித்து உங்கள் கருத்து ?
“தமிழ்க் கவிதையின் பொற்காலம் இக்காலம்
மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும்
உலகம் முழுமையும் சாதனை புரிகின்றனர்.
எல்லா பாவகைத் தளத்திலும்,
தமிழ்க் கவிதை உச்சத்தில் உள்ளது”
மூத்த கவிஞர்களும் இளைய கவிஞர்களும்
உலகம் முழுமையும் சாதனை புரிகின்றனர்.
எல்லா பாவகைத் தளத்திலும்,
தமிழ்க் கவிதை உச்சத்தில் உள்ளது”
இலக்கிய விருந்தாக நூல் உள்ளது. பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக