வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !








வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் :  கவிஞர் இரா. இரவி !

மதிப்புரை  பேராசிரியர் முனைவர்  யாழ் சு. சந்திரா, 
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !

190  பக்கம் .  விலை ரூபாய்  120.
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com


      ‘ஆண்டுக்கு ஒரு நூல்!’ என்று கவிஞர் இரவி ஏதும் உறுதிமொழி வைத்திருப்பார் போலும்.  இந்த ஆண்டு வெளியீடு வானதி மூலமாக வெளிச்ச விதைகள்!  இந்த விதைகளுக்குள் ஒளிந்துள்ள தளிர்களும், பூக்களும், கனிகளும் ஒன்பது பகுதிகள்.

      உறவுகளின் மாண்பு என்ற பகுதியில், எட்டி உதைக்கையில் எண்னி மகிழ்ந்த தானும், தன்னலமற்ற தாய், மகத்தான மகள், இளவரசி, பெண்ஒளி, நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி எனத் தென்றலின் சுகம்!

      மொழிவழிச் சமூகம், மொழிவழி நாடு பற்றி எழுத்து நில்லவும் எழுச்சி கொள்ளவும், கவிதையில் குரல் கொடுக்கும் கவிஞர் ‘மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு’ என்பது கவிஞர் இரவியின் கவிதைப் பிரகடனம் மட்டுமல்ல! காலத்தின் ஆவணம்!

      சமூகப் பதிவுகள் என்ற தலைப்பில் கிளைகளாகவும் சில கவிதைகள்! காற்றும் நீரும் எல்கையற்று விரியும் வெளியில் தமிழக மீனவர்கள் பலியாக, கடிதங்களால் நிவாரணம் தேடும் முதல்வர்களுக்கு ஓட்டுப் போடும் சருகான தமிழ் விளக்கங்கள்!.

      குடவோலை முறையில் தேர்தல் கண்ட தமிழன்!
      குவலயம் சிரிக்கும் தேர்தல் காண்கிறான் இன்று!

எதார்த்தமும் சாடல்களாகக் கவிதைத் சவுக்காய்!

      ‘வானமே எல்லை’ என்ற தலைப்பினை நெடுங்கவிதையில்,
      தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடு!
           தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும்!

எனச் சொல்வது எத்தனை ஊக்கம்?

      பாடம் படிக்கவும் கல்லூரி செல்லாத இரவியின் ‘ஹைக்கூ கவிதைகள்’ கல்லூரிப் பாடமானது விதைகளில் கனிந்த கனிக்கொத்துக்கள் அல்லவா?

      வாழ்வின் இனிமைக்கு ‘இணை’ இனிக்க வேண்டும் என்பதனை,
      மூன்று பக்கமும் கடலில் சூழ்ந்தது இந்தியா!
      முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்!

என்ற வரிகள் கவிஞரின் வாக்குமூலம் மட்டுமன்று, உண்மையின் சாட்சியம்!

      உதிர்ந்த பூக்களுக்குக் கவிஞர் இரவியின் காணிக்கையாகும் கவிதைகள் என்றும் வாடாமலர் தான்!

      அப்துல் கலாம் மீது இந்திய இளைஞர்கள் அத்தனை பேரும் கொண்டிருக்கும் அன்பை,  இரவி மொத்தக் குடிமகன்களில் உள்ளம் வாழ்பவர்!’ என்கிறார்.

      உடல் மீது அக்கறை என்பது வளரும் ஆளுமைகளின் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் எத்தனை அவசியம் என்பதனை,

      ‘தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியைத்
      தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார்!

என்று சொல்வது எல்லோருக்குமான எச்சரிக்கை மணி!

      சித்திரையும், தையும் கவிஞருக்குப் புதிய உலகம் காண உதவும் புதுச் சிந்தனைகளுக்கு வாய்ப்பளிக்கும் முறைமை, படைப்பின் நோக்கத்தைச் சொல்லி விடுகிறது.

      கண் தானம், மரம் வெட்டுவது, பெண் சிசு கொலை, நீதி-நிதி முரண், இலஞ்ச-ஊழல் ஒழிப்பு என கவிதைப் பொருளில் கண்காட்டும் சமூக அக்கறை...பொறுப்பு!

      எல்லாவற்றிலும் உச்சமாய் எனக்குப் பிடித்த கவிதை – ‘காகிதக் கப்பல்’!.  பதினோரு பத்தியிலும் வாசிக்கும் இதயங்கள் நேசித்த தருணங்கள்!

      மழை விட்ட பின்னுமான பயணம், முக்கிய ஆவணத்தாளில் விட்ட காகிதக் கப்பலுக்காக வாங்கிய அடி, தேங்கிய நீரில் கப்பல் விட்டு மழைக்கு ஏங்கிய தருணங்கள், காலம் கடந்தும் குழந்தையாய்ப் பயணிக்கும் வாழ்வு!

      இரவியின் கவிதை ஓட்டம், தமிழுக்கும் இலக்கியத்திற்கும் வரவு! ஓடட்டும் கவி ஓட்டம்! தமிழோட்டமாய் வெற்றி பெறட்டும்! வாழ்த்துக்கள்!

கருத்துகள்