ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சன்னலோர இருக்கை
இனிதாக்கியது பயணத்தை
இயற்கை ரசிப்பு !
பயணிக்கிறது
வகுப்புகளுடன்
தொடர்வண்டி !
எல்லோரும் பார்க்க
குளிக்கின்றன மலர்கள்
மழை !
எறிந்தான் கல்
குளத்து நீரில்
உடைந்தது நிலா !
காற்றால் ஓடி
தருகின்றது மின்சாரம்
காற்றாடி !
எடிசன் பிறக்காவிடில்
இன்றும் இருட்டுதான்
உலகம் !
காண்பதும் பொய்
மலையை முத்தமிடும்
மேகம் !
ஏர் உழுத
வலி தாங்கியதால்
நல்ல விளைச்சல் !
குப்பைக் கூட
மக்கினால் உரம்
மனிதன் ?
அழகாக இருந்தும்
பயன்பாடு இல்லை
விசிறி வாழை !
பாறைகள் தகர்ப்பு
மணல்கள் கொள்ளை
மற்றுமொரு சுனாமி ?
ஒவ்வொன்றும் ஒருவிதம்
இலைகள் பலவிதம்
இயற்கையின் அற்புதம் !
கிராமத்து முரண்
நிறமோ கருப்பு
பெயரோ வெள்ளாடு !
அழிவிற்கான
முதற்படி
ஆணவம் !
சாதனைக்கு
முதற்படி
அடக்கம் !
சினத்தின் போது
பேச்சை விட சிறந்தது
மவுனம் !
கட்டுப்படுத்தாவிடின்
விளைவுகள் விபரீதம்
சினம் !
படித்தப் பெண்களும்
விதிவிலக்கல்ல
பொன் ஆசை !
யாரும் வளர்க்காமலே
வளர்ந்து விடுகின்றன
எருக்கம் செடிகள் !
மன்னர் ஆட்சி மண்சண்டை
தொடர்கின்றன
மக்கள் ஆட்சியிலும் !
கருத்துகள்
கருத்துரையிடுக