புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





புள்ளிகள் நிறைந்த வானம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மதி பப்ளிகேசன், தருமபுரி – 635 205. பக்கம் : 90, 
விலை : ரூ. 70
மின்னஞ்சல் : 
arivazhagancm@gmail.com பேச : 95973 32952
*******
      ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.  நட்சத்திரங்கள் நிறைந்த வானம் என்பது எல்லாக் கவிஞர்களும் எழுதுவது.  நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் வித்தியாசமாக சிந்தித்து மிக இயல்பாக கவிதைகள் எழுதி உள்ளார்.  வசன் நடையில் பல கவிதைகள் உள்ளன.  வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் வடசொல் தவிர்த்து எழுதிட வேண்டுகிறேன்.
கேடயம் !

      சிநேகிதர்களுடைய இல்லத்தரசிகளின்
      கண் பார்த்து பேசுவதை 
      தவிர்த்தே வருகிறேன்
      அவர்களுடைய மகள் 
      மகன் 
      அங்கிள் என்றழைப்பதை
      நூலிழை சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறேன்.

நண்பரின் மனைவியை சகோதரியாக எண்ணும் எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்.

தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் விதமான கவிதை நன்று.
வாழ்வியல் கூறும் விதமாக மிகப்பெரிய தத்துவங்களை, மிக இயல்பான வரிகளில், மிக எளிமையாக எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.

      மறுபக்கம் !
      அடிக்கடி 
      சமநிலை பாதிக்கும்படி சிந்திக்காதே
      வாழ்க்கை நீ நினைப்பது போல்  
      கொடியதல்ல
      இலையைப் போல 
      இலகுவாக இருக்க முடியவில்லை
      என்றாலும் பரவாயில்லை 
      தண்ணீரைப் போலாவது
      சளசளத்துக் கொண்டிறேன்!

      நம் மனதில் அழுத்தம், கவலைகள் இருந்தால் குழந்தைகளுடன் விளையாடினால் கவலை, அழுத்தம் காணாமல் போகும் என்பது உண்மை.

      குழந்தைகள் உலகம் !

      குந்தைகள் உலகம் 
      தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
      குதுகலத்துடன் என்னை வரவேற்றது 
      அங்கே ஆனந்தமும்
      ஆச்சர்யங்களும் 
      ஒவ்வொரு மணரதுகள்களிலும்
      பரவிக் கிடந்தன 
      காற்றலைகளில் மழலை சிரிப்பொலி
      தேவகானமாய் தவழ்ந்து கொன்டிருந்தது.

      கவிதையில் கேள்விகள் கேட்டு விடைகள் சொல்லும் விதமாக வடிப்பது ஒரு யுத்தி.  அந்த யுத்தியில் வடித்த கவிதை நன்று.

      இதுவெனவே !

      நீர் எதற்காகும் 
      குளிக்க 
      துணி துவைக்க 
      சாதம் வடிக்க
      தார் தணிக்க
      நெருப்பு எதற்காகும் 
      வென்னீர் தயாரிக்க 
      சமையல் தயாராக
      இருளை அகற்ற 
      குளிரை விரட்ட
      காற்று எதற்காகும் 
      சுவாசிக்க  
      ஒலியலைகளைக் கடத்த !

இப்படி பல வித்தியாசமான கவிதைகள் நூலில் உள்ளன. சிந்திக்க வைக்கும் விதமாக கவிதைகள் உள்ளன.

      நூலாசிரியர் கவிஞர் பா. மதியழகன் இயற்கை ரசிகர் என்பதை உணர்த்தும் விதமாக பல கவிதைகள் இயற்கையின் எழிலை படம்பிடித்துக் காட்டும் விதமாக உள்ளன.

      கொடை !

கடல் பார்க்கவும் 
அலைகளில் கால் நனைக்கவும் ஆசைப்படாதவர் உண்டா 
அருவியின் முகத்துவாரம் இன்னும் அருமையாக இருக்கும் 
அல்லவா 
ஓடை வானத்தின் கொடை தான் 
மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது.


திரைப்பட உலகம் என்பது இரும்புக் கோட்டை. தட்டும் எல்லோருக்கும் திறப்பது இல்லை. தட்டித் தட்டியே கை ஒடிந்த கதையும் உண்டு. திரைப்பட கனவுலகின் மீது ஆசை கொண்டு வாழ்வைத் தொலைத்த இளைஞர்கள் பலர்.  நூறில் ஒருவரை வெற்றி பெறுகின்றனர். திரைப்பட உலகம் பற்றிய கவிதை நன்று.

கோடம்பாக்கம் !

கனவுகளோடு வந்திறங்குகிறார்கள்
கோடம்பாக்கத்துக்கு
       கம்பெனி படியேறி படியேறி
செருப்பு தேய்ஞ்சி போச்சி
வாய்ப்புக்காக அவமானங்களையும்
புறக்கணிப்புகளையும்
      ஏத்துக்க வேண்டியதாய்ச்சி 
இழுத்தடித்த போது தான்
      சினிமான்னா என்னன்னு 
புரியலாச்சி.

அழகான மனைவி வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள்.  இவரது இக்கவிதை படித்தவர்கள் இனி அழகான மனைவி வேண்டாம், சுமாரான மனைவி போதும் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.  படித்துப் பாருங்கள்.

குறிப்பு!

அழகான மனைவி அமைந்தால் 
அவஸ்தை தான்
      அவளது கைபேசியை 
சோதனை செய்யத் தோன்றும்
      தொலைக்காட்சியில் 
அவள் அஜித்தைப் பார்த்தால்
      சங்கடம் தோன்றும் 
இவ்வளவு அழகானவளை
      கல்லூரியில் காதலிக்காமலா விட்டிருப்பார்களா
      கொடுத்து வைத்தவன் டா 
அவன் காதுபடவே பேசினால்
      சொன்னவனை 
கொலை செய்யத் தோன்றும்
      
பரிசுத்தமாக அவள் இருந்தாலும் 
மனம் சாக்கடையை நாடி ஓடும் !

படைப்பாளிகள் பலர் வறுமையில் தான் வாடுகிறார்கள்.  இலக்கியத்தை பகுதி நேரமாக வைத்துக் கொண்டவர்கள் வசதியாக இருக்கின்றனர்.  இலக்கியத்தை முழு நேரமாகக் கொண்டவர்கள் சிலர்தான் வசதியாக இருக்கின்றனர்.  பலர் ஏழ்மையில் வாழ்வோடு போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நடபியல் உண்மைகளை உணர்ந்து வடித்த கவிதை நன்று. மிகவும் உணர்ந்து கவிதைகள் வடித்துள்ளார்.

ஆகமம் !

வீணான ஆசைகள் மனதில் 
அலைமோதிக் கொண்டு இருக்கிறது
வரும்படி சொற்பம் தான் என்றாலும் 
அது கையில் கிடைத்தவுடன்
செலவாகி விடுகிறது 
மாசக் கடைசியில் 
செலவுக்கு
என்ன செய்வது 
என்ற மன உளைச்சலில்
உடலை மழை நனைப்பது கூட 
தெரியாமல் போனது.
இவனது கையாலாகாத 
தனத்தால் கட்டியவளின்
தாலி கூட புஸ்தகமானது, சோறு என்று 
காகிதத்தில் எழுதினால்
அதை தின்ன முடியாது 
செல்லாக் காசுக்கு 
இருக்கும் மதிப்பு கூட
சமூகத்தில் கவிஞனுக்கு இருக்காது.

      மன விரக்தியில் மிகவும் வெந்து நொந்து எழுதி உள்ளார்.  கேரள மண்ணில் படைப்பாளிகள் கொண்டாடப்படுகின்றனர்.  தமிழகத்தில் படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே மதிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

      தத்துவார்த்தமான தகவல்களை மிக எளிமையாக இயல்பாக கவிதைகளில் வடித்துள்ளார்.

      அநித்யம்!

      கவனமாக இருங்கள்! 
      நாளை விழித்தெழுவோம் என்ற
      உத்திரவாதம் 
      யாருக்கும் இங்கே வழங்கப்படவில்லை
      சந்திப்புகள் குறித்த நேரத்தில் 
      நடைபெறும் என்ற
      உத்திரவாதத்தை யாருக்கும் வழங்காதீர்கள்
      உங்களின்
      இன்னல்களைக் களைய 
      இன்னொரு மனிதனால்
      முடியும் என்று நம்பாதீர்கள்.

      நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.  முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் வர்களை எழுதி முடிக்கின்றேன்.

      விதைத்துக் கொண்டே இருங்கள்
      ஒரு நாள் அறுவடை வரும்.
      இயங்கிக் கொண்டே இருங்கள்
      ஒரு நாள் வெற்றி வரும்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்