உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தந்த தலைப்பு ! தேமதுரத் தமிழோசை !கவிஞர் இரா .இரவி



உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தந்த தலைப்பு !

தேமதுரத் தமிழோசை   !கவிஞர்  இரா  .இரவி 


தேமதுரத் தமிழோசை உலகெலாம் ஒலிக்கின்றது 
தமிழகத்தில் ஒலிக்கின்றதா ? சிந்தியுங்கள் தமிழர்களே !   

தமிழ்நாட்டுத்  தமிழர்கள் நாவில் தமிங்கிலம்  
தமிழ்நாடு எங்கும் ஒலிப்பது தமிங்கிலம்  !

பத்துச்சொற்களில் எட்டுச் சொற்கள் ஆங்கிலம் 
பைந்தமிழ்க் கொலை எங்கும் எதிலும் !

எங்கும் எதிலும் தமிழ் என்று முழங்கிய காலமுண்டு 
எங்கும் எதிலும் தமிழே இல்லை இன்று !

தொலைக்காட்சியில் தொலைத்தனர் நல்ல தமிழை 
தமிங்கிலப் பயிற்சி நல்குவதே தொலைக்காட்சிதான் !

உலகின் முதல் மொழி தமிழைச்  சிதைக்கலாமா ?
ஒவ்வொரு தமிழரும் காக்க வர வேண்டாமா ?

தாய்மொழிகளின்  தாய்மொழி தமிழ்மொழி 
தாய்மொழி தேய்வதை வேடிக்கைப்  பார்க்கலாமா ?

ஈழத்தமிழர்கள் நாவில் வருகிறது நல்ல தமிழ் 
இங்குள்ள தமிழர் நாவில் வர மறுப்பதேன் ?

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் 
உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு !

இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழியின் 
இனிமையைக் கெடுப்பது முறையோ ? தகுமோ ?

உலகம் முழுவதும்  ஒலிக்கும் மொழி தமிழ்மொழி 
உலகத்தமிழர் உணர்ந்ததை உணர்ந்திடுக !

தமிழ்நாட்டின் தமிழோ நாளுக்கு நாள் தேய்கிறது 
தமிங்கிலம் நோய் பரவி தமிழைச் சிதைக்கிறது !

ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் தமிழ் கலப்பானா ?
அற்புதத்த தமிழில் ஆங்கிலம் கலப்பது ஏனோ ?

தமிழ் எனக்கு சரியாக வராது என்போர் 
தடுக்கி விழுந்ததும் அம்மா என்பார்கள் !

ஆங்கிலச்சொற்கள் கலப்பின்றி பேசிடுவோம் 
அழகு தமிழின் தனித்தன்மை காத்திடுவோம் !

தாய்மொழி தமிழை தமிழாகவே பேசிடுவோம் 
தமிழைக் கலப்பின்றிப் பேசிட முயன்றிடுவோம் !

ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமையல்ல மடமை 
அனைத்துத் தமிழர்களும் இதனை உணர்வது கடமை !

தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும் 
தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதற்கு முயற்சிக்கட்டும்  !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்