பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம் ! 21.5.2017. தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " உரை; கவிஞர் இரா .இரவி !





பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம் ! 

21.5.2017.

 தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " 

உரை; கவிஞர் இரா .இரவி !

உலக இலக்கியங்களில்  தலையாய இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் உலகில் இல்லவே இல்லை என்பது புகழ்ச்சி அல்ல உண்மை. மொழியியல் ஆய்வாளர் அனைவரும் சொல்லும் உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் .

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடி ஒரே ஒரு வரியின் உலகப் புகழ் அடைந்தவர் கணியன் பூங்குன்றனார். இவரின் இதன் வரி உலகப் பொதுமைக்கு எடுத்துக்காட்டாகும் .இந்த வரி அமெரிக்காவில் உள்ள  ஐ நா .மன்றத்தில் இடம் பெற்றுள்ளது .

சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் அவ்வை. பொதுமைக்கு எடுத்துக்காட்டு இப்பாட்டு .அவ்வை எழுதிய 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' என்ற வரியும் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர் .

உலக இலக்கியங்களில் எல்லாம் சிறந்த இலக்கியம் திருக்குறள் பொதுமை பற்றி திருவள்ளுவர் எழுதிய அளவிற்கு வேறு எந்த இலக்கியத்திலும் எழுதவில்லை .

உலக இலக்கியங்களில் தேடினால் திருக்குறளில் உள்ளத்தைப் போன்ற உயர்ந்த கருத்து இல்லவே இல்லை .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.   ( 972   )

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்பதாகும். பொதுமை பற்றி இதைவிடச் சிறப்பாக எவரும் கூறவில்லை என்பது உண்மை .பிறப்பால் உயர்ந்தவன்  தாழ்ந்தவன் இல்லை என்கிறார் திருவள்ளுவர் .செய்யும் தொழிலாலும்   உயர்ந்தவன்  தாழ்ந்தவன் இல்லை என்கிறார் திருவள்ளுவர் .கருப்பு வெள்ளை என்ற நிறத்தாலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்கிறார் .

இந்த உலகம் அறம் சார்ந்து வாழ்ந்தால் அமைதி நிலவும் . ஏற்ற தாழ்வு இருக்காது .என்று அறத்தை வலியுறுத்தி உள்ளார் .

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை.  ( 656 )

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

வேதங்கள் கூட பெற்ற தாய் பசியோடு இருந்தால்  பஞ்சமா பாதகம் செய்தாவது ,தாயின் பசியினைப் போக்கு என்றுதான் சொல்கின்றன .

எந்த சுழலும் அறத்தை வலியுறுத்துவதன் மூலம் திருவள்ளுவர் உயர்ந்து நிற்கிறார் .உலக இலக்கியங்களில் தேடினால் திருக்குறளில் உள்ளதைப் போன்ற உயர்ந்த கருத்து இல்லவே இல்லை .

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்.   ( 314 )

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

இயேசு  கூட ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு என்றுதான் சொன்னார் .ஆனால் திருவள்ளுவரோ ஒருபடி மேலே சென்று உனக்கு தீங்கு செய்தவனுக்கு நன்மை செய்து அவனை நாண வை .என்கிறார் . 

இந்த திருக்குறளை காந்தியடிகளுக்கு  அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய் .காந்தியடிகளின் குரு  டால்சுடாய். டால்சுடாயின்  குரு திருவள்ளுவர் .காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்திற்கு அடிப்படியாக அமைந்தது இந்த திருக்குறள்தான் .  

காந்தியடிகள் முதலில் திருக்குறளை விரும்பினார் . திருக்குறளின் காரணமாகவே தமிழை விரும்பினார். பயின்றார் ."  அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் .காரணம் திருக்குறளை எழுதிய மூல மொழியான தமிழில் படித்து இன்புற வேண்டும் ." என்றார் . எனவே காந்தியடிகளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது தமிழ் இலக்கியம் .தமிழராகப் பிறந்ததற்காக உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் .

திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார். பெரியார் விரும்பிய   பொதுமை திருக்குறளில் இருந்தது .பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதை எதிர்த்தவர் பெரியார் சாதியால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதில்லை .சாதி என்பதே சதி என்று உணர்த்தியவர் .தந்தை பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி நான் வடித்த ஹைக்கூ கவிதைகள் சில .

தாழ்த்தப்பட்டவர் விளைவித்த 
பஞ்சில் உருவானது 
அர்ச்சகர் பூணூல் !
-----------------------------------------
உண்ணும் உணவிடம் 
காட்டுவாயா ?
தீண்டாமை !
-----------------------------------------
உயர்சாதிக்காரன் 
வகுத்த சதி 
சாதி !
-----------------------------------

ஆண் பெண்  ஏற்றத் தாழ்வு கற்பிப்பதையும்  எதிர்த்தவர் பெரியார்  .அவர் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்  " என்ற புத்தகம் படித்துப் பாருங்கள் .'பிள்ளைப்  பெறும் இயந்திரமா   ? பெண்கள்' என்று கேட்டவர் பெரியார்  .பெண் கல்வியை வலியுறுத்தியவர் பெரியார் .

ஆண் பெண் வேறுபாடு இன்றி சமத்துவ சமதர்ம சமுதாயம் பொதுமை வேண்டும் என்று விரும்பி ,தன் கடைசி மூச்சு உள்ளவரை பேசியும் எழுதியும் வந்தவர் பெரியார். ஆணாதிக்க சிந்தனையை அடியோடு அகற்ற முனைந்தவர் பெரியார்.

பெண்ணியம் தொடர்பாக பெரியாரின் வழி சிந்தித்து நான் வடித்த ஹைக்கூ கவிதைகள் .

கணவனை இழந்த பெண் 
விதவை சரி 
மனைவியை இழந்தவன் ?
-------------------------------
எழுத்திலும் அநீதி 
ஆண் நெடில் தொடக்கம் 
பெண் குறில் தொடக்கம் !
---------------------------------
மணமான பெண்ணிற்கு 
தாலி அடையாளம் சரி 
மணமான  ஆணிற்கு ?


இந்த உலகிற்கு பொதுமையை 'மூலதனம் 'நூலின் மூலம் அறிமுகம் செய்தவர் மார்க்சு .அவர் அடைந்த துன்பங்கள் சொல்லில்  வடிக்க முடியாத துயரங்கள் .இறந்த குழந்தைக்கு சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட பணம் இன்றி வாடியவர் . ஏழ்மையின் கொடுமையை, வறுமையின் அவலத்தை அறிந்தவர் .அதனால்தான் உலகம் முழுவதும் பொதுமை வரவேண்டும் என்று விரும்பினார். அவர் தமிழகத்தை ஆய்வு செய்து எழுதி உள்ளார் ." இங்கு உள்ளவர்கள் கடவுளை நம்புகின்றனர் ,மதத்தை நம்புகின்றனர்.விதியை நம்புகின்றனர்.இவைதான் பொதுமை வருவதற்கு தடையாக உள்ளவை " .என்கிறார். மார்க்சு. 

இதனை உணர்ந்துதான் பொதுமைக்கு தடையாக உள்ள கடவுள் மதங்களை எதிர்த்தார் .தந்தை பெரியார் கண்ட கனவு ஓரளவு நனவாகி விட்டது .இன்னும் நனவாக வேண்டியது மிச்சம் உள்ளது .

தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்களிலும் பொதுமை வலியுறுத்தி பல பாடல்கள் பாடி உள்ளனர். சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும் பொதுமை வலியுறுத்தி உள்ளனர் .

கருத்துகள்