உலக அன்னையர் தினம் ! 14.5.2017 அம்மா ! கவிஞர் இரா .இரவி !

உலக அன்னையர் தினம் !   14.5.2017  

அம்மா  !         கவிஞர் இரா .இரவி !

உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்த 
உயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா !

உலக உறவுகளின் சிகரம் அம்மா
உலகம் போற்றிடும் உன்னத உறவு !

உயிரும் உடலும் தந்த வள்ளல் 
உயிர் வளர்த்த உன்னத செம்மல் !

வயிற்றில் இருக்கையில் எட்டி உதைக்கையில் 
வலிதாங்கி எண்ணிச் சிரித்து மகிழ்ந்தவள் !

வலிகளின் உச்சம் என்பது பிரசவவலி 
வலிமையோடு வலி தாங்கி ஈன்றவள் !

அழுகையின் காரணம் அறிந்து உடன் 
அவற்றை நிறைவேற்றி மகிழ்ந்த உள்ளம் !

தன் தூக்கம் மறந்து பெற்ற 
தன் சேயின் தூக்கம் காத்தவள் !   

பாலோடு பாசமும்  தந்திட்ட பாரி 
தேனோடு மருந்தும் தந்திட்ட ஓரி !

கண்ணும் கருத்துமாய் கவனித்து வளர்ப்பவள் 
கட்டியவனை விட குழந்தையை நேசிப்பவள் !
 
கெட்டவன் ஆனாலும்  விட்டுத்தர மாட்டாள் 
நல்லவன் என்றே மற்றவரிடம் வாதிடுவாள் !

உலகமே வெறுத்து ஒதிக்கினாலும் அவள் 
ஒருபோதும் வெறுப்பதில்லை பெற்றவனை !

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் 
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர் ஏதுமில்லை !

----------------------------------------------------------------------------------
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி 

எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் 
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! 

இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம் 
என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா ! 

உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மையமாகி 
உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா ! 

குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த 
குவலயத்தில் சிறந்த உறவு அம்மா ! 

கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய 
கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா ! 

தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே 
தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா ! 

தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு 
தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா ! 

குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து 
தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா ! 

குருதியைப் பாலாக்கி வழங்கி பெற்றக் 
குழந்தையின் உயிர் வளர்த்தவள் அம்மா ! 

தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால் 
தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் அம்மா ! 

தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை 
தரணியில் மணக்க வைக்கும் சந்தனம் அம்மா ! 

தன்னை உருக்கி தன் குழந்தையின் வாழ்வை 
தரணியில் ஒளிர வைக்கும் மெழுகு அம்மா ! 

தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில் 
தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி அம்மா ! 

தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை 
தரணியில் உயர வைக்கும் ஏணி அம்மா ! 

உலகில் யாரை மறந்தாலும் நீங்கள் 
ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்காதீர்கள் ! 
----------------------------------------------------------------

தாய்               கவிஞர் இரா .இரவி

தன்னலம் கருதாது சேய் நலம் கருதும் 
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய் 

தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம் 
தரணியில் நிகரற்ற புனித உறவு  தாய் 

தாய் நெடிலில் தொடங்கி மெய்யில் 
முடியும் மெய்யான மெய் தாய் 

எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை 
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்   
  
உடலில் உயிர் உள்ளவரை என்றும் 
ஒருபோதும்  மறப்பதில்லை சேய்களைத் தாய் 

மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர் 
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை

மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை 
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள் 

உறவுகள் ஓராயிரம் இருந்தாலும் 
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை 

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே 
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்     

---------------------------------------------------------------------  
  சுமைகளும் சுகங்களும் ! கவிஞர் இரா .இரவி ! 

பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை 
பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை ! 

சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் 
சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் ! 

தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று 
தவம் இருந்தே குழந்தையை ஈன்று எடுக்கிறாள் ! 

ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள் 
ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் ! 

கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள் 
கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் ! 

வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும் 
வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் ! 

தாய்மொழியின் அருமை பெருமையை அவள் 
தன்சேயுக்குக் கருவிலேயே கற்பித்து மகிழ்கின்றாள் ! 

தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை 
தாயின் கருவிலிருந்தே கேட்கும் ஓசை ! 

பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது 
பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் ! 

தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும் 
தாயாகும் தருணம் உயிர் போய் உயிர் வரும் ! 

ஆண்கள் யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை 
அன்புத் தாய்மார்கள் மட்டுமே உணர்ந்த உயிர்வலி ! 

முந்நூறு நாட்கள் அன்னை அவள் படும் பாடு 
மண்ணில் மறக்கமுடியாத துன்பம் பெரும் பாடு ! 

சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை 
சுகத்தையும் சுமையாகக் கருதுவது குழந்தை ! 
------------------------------------------------------------------------------------
அம்மா ! ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

காணிக்கைக் கேட்காத 
கண் கண்ட கடவுள் 
அம்மா 

நடமாடும் 
தெய்வம் 
அம்மா 

கருவறை உள்ள 
கடவுள் 
அம்மா 

உயிர் தந்த உயிர் 
உயிர் வளர்த்த உயிர் 
அம்மா 

மனதில் அழியாத ஓவியம் 
மறக்க முடியாத காவியம் 
அம்மா 

ஆடுகளும் மாடுகளும் கூட 
உச்சரிக்கும் உயர்ந்த சொல் 
அம்மா 

வாய் பேசாத ஜீவன்களும் 
பேசிடும் ஒரே சொல் 
அம்மா 

மகனின் வாழ்வு ஒளிர்ந்திட 
உருகிடும் மெழுகு 
அம்மா 

உச்சங்களின் உச்சம் 
உலகின் உச்சம் 
அம்மா 

அன்பின் சின்னம் 
அமைதியின் திரு உருவம் 
அம்மா 

திசைக் காட்டும் 
கலங்கரை விளக்கம் 
அம்மா 

கரை சேர்க்கும் தோணி 
உயர்த்திடும் ஏணி 
அம்மா 

நேசம் பாசம் மிக்கவள் 
வேசம் அறியாதவள் 
அம்மா !
------------------------------------------


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்