ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்





ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

  பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச் சொல்லப் படுகிற சிலரது பெயரும் கவிதைகளும் கூட குறுகிய சிறு வட்டத்தினுள்ளேயே ஒடுங்கிப் போகிறது. பாரதிக்குப் பிறகு, வியந்து பாராட்டப் படவேண்டிய அளவுக்குக் கவிதைகள் எழுதியுள்ள ச.து.சு. யோகியார், கம்பதாசன், தமிழ் ஒளி, கலைவாணன் போன்றவர்களின் திறமை தமிழ்நாட்டில் போதிய கவனிப்பைப் பெற்ற தில்லை. அவர்கள் உயிருடன் இருந்தபோதும் அவர்களோ அவர்களின் படைப்புகளோ உரிய அங்கீகரிப்பை இந் நாட்டில் பெற முடிந்ததில்லை. அவர்களது மறைவுக்குப் அவர்களுடைய கவிதைகளும் மறதிப் பாழில் மங்கிப் போயின.
 பாரதிதாசன் ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றார். அதை அடுத்து பாரதிதாசன் பரம்பரை’  என்று பலர் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டனர். அவர்களிடையிலும் சிலர்தான் கவனிப்புப் பெறமுடிந்தது. சுரதா, முடியரசன், வாணிதாசன், நாரா. நாச்சியப்பன் என்று. அதுவும் குறுகிய காலக் கவனிப்புதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து கவிதை எழுதுகிறவர்கள் பெயர்வெளிச்சம் பெற முடிகிறது. அல்லது திரைத்துறையில் வெற்றி பெறுகிறவர்கள் புகழ் வெளிச்சம் அடைய முடிகிறது. அரசியல் கட்சியின் ஆதரவோ, திரைத்துறையின் துணையோ பெற்றிராத கவிஞர்கள் உரிய கவனிப்பைப் பெறத் தவறி விடுகிறார்கள். அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், உயிர்ப்பும் எழுச்சியும் நிறைந்த கவிதைகள் படைத்துள்ள சில: கவிஞர்கள் பரவலான கவனிப்பைப் பெறமுடிந்துள்ளது. என்று சொல்வதற்கில்லை. தொ.மு.சி. இரகுதாதன், கே.சி. எசு. அருணாசலம் போன்ற சிலரது திறமையும் ஆற்றல் நிறைந்த படைப்புகளும், அவை பெற்றிருக்க வேண்டிய அளவு கவனத்தைத் தமிழ் இலக்கிய நேயர்களிடையே பெற்றுவிடவில்லைதான். அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரளவு தெரிய வந்திருக்கலாம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம, திறமையாளர்களின் திறமையும் படைப்பு:ம் உரிய முறையில் எடுத்துச் சொல்லப் படுவதில்லை. இதுவே முழு முதல் காரணம் ஆகிவிடாது. திறமையாளர்களும் அவர்களது சாதனைகளும் போதுமான கவனிப்பைப் பெறமுடியாமல்போவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. என்றாலும், இது முதன்மையான காரணமாகும். ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள். படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர் எண்ணிக்கை குறைவுதான். கவிதைகளை- அதிலும் மரபுவழிப் பட்ட படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு. – – – – ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப் படித்து விட்டு, தடலடியாகக் கருத்து சொல்கிற இயல்பு-ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிற போக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். வாசகர்களின், நேயர்களின், மனப் பண்பு நன்னிலை அடைய வேண்டும். படித்துப் பார்த்து, கருத்து சொன்னாலாவது, “பரவா யில்லை.; போகிறது! இவர் சுவை இப்படி… இது இவருடைய கருத்து’” என்று கொள்ளலாம். ஆனால், பலரும் படிக்காமலே’அறுதியிட்டு உறுதி கூற’த் துணிவது சரியான போக்கு அல்ல. ஒவ்வொரு படைப்பாளியின் மொத்த எழுத்துகளையும் ஆய்வு செய்து, நல்லனவற்றை எடுத்துக் கூறும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்குமானால், இந்தப் போக்கு ஒரளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் அத்தகைய திறனாய்வு முயற்சிகள் செய்யப்படவில்லை. இது பெரும் குறை பாடேயாகும்.
  பெருங்கவிக்கோ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ள வா.மு.சேதுராமன் அவர்களின் சாதனைகளும் இந் நாட்டில் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது வருத்தத்துக் குரியது. கவிஞர் சேதுராமன் மரபுவழிக் கவிதையில், நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தன்மையில், பாராட்டப்பட வேண்டிய அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய கவிதை நூல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவருடைய ஆற்றலையும், படைப்புகளின் தன்மையையும் நான் அறியமுடிந்தது. அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் என்று கருதினேன். அதன் விளைவே இந்த நூல். இது பூரணமான திறனாய்வு இல்லை. பெருங்கவிக்கோவின் படைப்புகளில் நான் சுவைத்து மகிழ்ந்த நல்ல இயல்புகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய முனைந்துள்ளேன். கவிஞரின் படைப்புகளைப் படித்து மகிழ இஃது ஒரு  தூண்டுதலாக அமைந்தால் நல்லது.
– வல்லிக்கண்ணன்
முன்னுரை: ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in
--

.

கருத்துகள்